திங்கள், 26 ஜனவரி, 2009

வணிகம் செய்ய வந்த தமிழர்கள்

கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்துள்ளனர்.



வணிகத்திற்காக வந்த தமிழர்களில் சிலர் ஆறு மாதம் வரை மலாக்காவில் தங்கி இருப்பதுண்டு. அப்படிப்பட்ட காலத்தில் சிலர் மலாய்ப்பெண்களைக் காதலித்து இந்து முறைப்படி தாலிகட்டி மணந்துகொண்டு இங்கேயே தங்கினர். ஒரு சில தடவைகளில் கப்பல் புயலில் சிக்கியதால் தப்பிக் கரையேறிய தமிழர்களும் இங்ஙனம் மலாக்காவில் தங்க நேர்ந்த கதையும் உண்டு. இவர் பிள்ளை என்றும், செட்டி என்றும், முதலியார் என்றும், படையாச்சி என்றும் பலவகைப் பிரிவினராக இருந்தாலும் மலாக்காவிலேயே தங்கி மலாக்காச் செட்டிகளாகி விட்டனர். அவர்களின் மொழி மறைந்தும் பண்பாடு, வழிபாடு மறையாத மக்களாக இருப்பதை இன்றும் காணலாம். இவர்கள் கட்டிய பொய்யாத வியாகர் கோயில் இன்றைக்கு 350 ஆண்டுகள் பழமையுடையது. இவ்வாறே தமிழர்களும்- தமிழ் முசுலிம்களும் மலாயாவில் பல்வேறு பகுதிகளுக்குக் குடியேறி வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் நிரம்ப உள்ளன. அவர்களை அடுத்துத் தனவைசியம் பண்ணவந்த நகரத்தார் பெருமக்களும்- கல்விமான்களும்- உயர் அலுவல் பார்க்கும் ஆற்றல் படைத்தவர்களும் விரும்பியும், அழைக்கபட்டும் மலாயாவிற்குப் பரவலாக வந்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. 1938 இல் கங்குரும்பை பெ.நா.மு.முத்துப்பழனியப்பன் ஜே.பி அவர்கள் எழுதிய “மலாயாவின் தோற்றம்” என்ற நூலில் இதன் விவரத்தைக் காணலாம்.



இவ்வாறு குடியேறிய தமிழர்களால் தமிழ்ப்பண்பாடுகள்- தமிழர் நடையுடை பாவணைகளின் சாயல்கள் மலாயாவில் மேலும் வேரூன்றியதால் வெண்கலக் குத்துவிளக்குகளைப் பாவிக்கும் பழக்கமும் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்க வழக்கமும் பரவத் தொடங்கின. வணிகத் துலாக்கோலும், வாழ்வியலில் நல்லெண்ணப் புரிந்துணர்வும், விளையாட்டில் பல்லாங்குழியும், பண்பாட்டில் மலர்மாலைகளும் தமிழர்களின் வருகையால் மேலும் இரண்டறக் கலந்தன.மற்றும் தமிழ்ச்சொற்களும் சமற்கிருத மொழிச் சொற்களும்- இந்தியச் சொற்களும் மலாய்மொழியிற் கலந்து மலாய் மொழியையும் வளர்த்தன. மலாய் மொழியிலுள்ள பண்பாட்டுச் சொற்களில் பெரும்பான்மை இந்தியச் சொற்களும், வழிபாட்டுச் சொற்களில் பொரும்பான்மை அரபுச் சொற்களும், அறிவியலில் ஆங்கிலச் சொற்களும் இரண்டறக் கலந்து பயன்படுத்தப்படுவதைக் கல்விமான்கள் மறுப்பதற்கு இல்லை.


கப்பல், பெட்டி, மீசை, ரோமம், ரூபம், ரகம், திரி, ஜெயம், ஆகம்ம், சக்தி, தேவி, புத்ரி, குரு, பாக்கி போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் அப்படியே எவ்வித மருவுமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கம்- சிங்கா, தருமம்- தருமா, சங்காசனம்- சிங்காசனா, நாமம்- நாமா, நீலம்-நீலா, உபவாசம்- புவாசா, பாஷை- பகாசா, சாஸ்திரம்- சாஸ்திரா, வரம்- சுவாரா, கங்கை- சுங்கை என்பன சில. இன்னும் சில சொற்கள் முன்பின் இணைப்புப் பெற்று வழங்குகின்றன. கும்பல்- கும்புலான், ராஜாங்கம்- அரசாங்கம் என்பன போன்று ஏராளமாகும். இவ்வாறு மலாய்மொழியைத் தமிழோடும் தமிழ் பண்போடும் சேர்ந்து வளர்த்த பங்கினை மறைக்க முடியாது. மலாய்மொழி இலக்கியத்தின் தந்தை என்றும் முன்னோடி என்றும் போற்றப்படுகின்ற முன்ஷி அப்துல்லாவும் ஒரு தமிழ் முசுலிம் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் கெடாவிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தும். தமிழ் மன்னர்களின் வருகையாலும், வணிகர்களின் வருகையாலும் மலேசியாவின் மொழியும்,கலையும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வளம் பெற்றன, நலம் பெற்றன என்றும் கூறலாம்.


நன்றி: தமிழ்க்குயிலார்

புதன், 21 ஜனவரி, 2009

மாமூலர் என்பதன் பொருள் என்ன ?

அழகன்

ஐயம் :

மாமூலர் என்றால் என்ன பொருள் ஐயா? திருமூலருக்கும்
மேன்மையாக காட்டவேண்டி அப்படி ஒரு அடைமொழியா?

தெளிவு :

மாமூலர் என்பதற்கு பெரிய ஆற்றலாளர் என்பது பொருளாகும். சங்க காலத்தில் மாமுலனார் என்ற புலவர் வாழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அவரைப் போன்று மலேசியாவில் மெய்யறிவை உணர்த்திய மிகப்பெரிய ஆற்றலாளர் தான் ஐயா அவர்கள். மலேசியத்தில் ஒப்பற்ற மீமிசைச் சான்றோராக விளங்கியவர் செந்தமிழ்க்குறிஞ்சியார். அவரே பாவலருக்கு இச்சிறப்புப் பெயரை வழங்கியிருப்பது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும். ஆனால், திருமூலருக்கும் மேன்மையாக நாம் யாரையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடுவதும் சரியாகாது.

தமிழ்ப்பெண்களும் குங்குமமும்

கபிலன்

ஐயம் :
நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி,தலை வகிட்டில்
குங்குமம் இடுகின்றனரே? இதற்கு சமய விளக்கம் ஏதேனும்
உண்டா? இந்தப் பழக்கம் ஏதோ அந்நிய வரவாக
உணர்கிறேன். விளக்கம் தேவை

தெளிவு :

முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் நெற்றியில் அரத்தத்தைக்(இரத்தம்) கொண்டு வீரத்திலகமிடுவது தமிழர்களின் பண்பாடாகும். பிற்காலத்தில் அம்மை வழிபாடு தோன்றியப் பிறகு போருக்குப் போகும் வீரர்கள் வெற்றியை வேண்டி அம்மனை வழிபட்டு போருக்குச் சென்றனர். வீரத்திலகமிடும் மரபு ஏற்கெனவே இருந்துள்ளதால் இப்போது அம்மனை வழிபட்டு அரத்தத்திற்கு(இரத்தம்) பதில் குங்குமத்தால் திலகமிட்டுச் சென்றுள்ளனர். இதுவே, பின்னாளில் சமய மரபாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், நெற்றியில் குங்குமம் இடுவதுதான் தமிழர்களிடம் இருந்துள்ளது. தலை வகிட்டில் இடுவது தமிழர்களிடம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. இந்தப் பண்பாடு வடவர்களுக்கே உரியதாகத் தெரிகிறது. பண்பாடு அறியாத இன்றையப் பெண்கள் நமது பண்பாடு என்று நினைத்து ஆரியப் பண்பாட்டை பின்பற்றுவதும் போற்றி புகழ்வதும் நகைப்பிற்கிடமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மட்டிலும் தலை வகிட்டில் குங்குமம் இடுவது நமது பண்பாடு அல்ல. இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாம். நன்றி

செவ்வாய், 13 ஜனவரி, 2009

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

வணக்கம் வாழ்க வளத்துடன்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

உலக அமைதி நிலைத்திட
உண்மை அன்பு விளங்கிட
இனிய வாழ்வு தொடங்கிட
ஈழம் விரைவில் மலர்ந்திட
புதிய பொங்கல் பொங்கிட
புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேரொன்றும் அறியேன் பராபரமே!

சனி, 10 ஜனவரி, 2009

மலேசியாவில் தமிழர்கள்

உலகெல்லாம் போற்றும் வளமும் பொழிவுமிக்க இன்றைய மலேசியா அமைவதற்கு முன்னர், மலாயாவென்றும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாணிகம் செய்யவந்த தமிழர்களால் சொர்ணபூமி என்றும் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் மலையம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தமிழர்களுக்கும் மலேசியாவிற்குமுள்ள தொடர்பு தாய்க்கும் மகவுக்கும் உள்ள தொடர்பு; அழுத்தமானது, பழமையானது, பிரிக்கமுடியாதது என்றுணரலாம். இக்கட்டுரை மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றை ஆராய்கிறது.


நாடாள வந்த தமிழர்கள்

கி.பி.454-இல் சுமத்திரா எனும் புட்பக நாட்டை சைவ மன்னர்களான ஈஸ்வர நரேந்திரன் ஆண்ட காலத்திலிருந்து தென்கிழக்காசியா நாடுகளுக்குத் தமிழர்களின் பயணம் தொடங்குகிறது. பின்னர் கி.பி. 1030-இல் இராசேந்திர சோழன் காழகம் அல்லது கடாரமென்னும் கெடாவை வென்றது முதல் மலேசியாவில் தமிழர்களின் பங்கு வேர்க்கொள்கிறது. பேராவின் மேற்குக் கரையிலிருந்து அதன் நடுப்பாகம் வரை கங்கா நகரம் என்கிற ஓர் இந்திய அரசும், பகாங்கு நதிதீரத்தில் இந்திரபுரன் என்ற பிறிதோர் அரசும் இருந்து வந்துள்ளன. இங்ஙனம் நாடாள வந்த தமிழ் மன்னர்களால் மலேசியத் தீவுகளில் தமிழர்களின் மொழியும், கலைகளும், பண்பாடுகளும், ஆட்சிமுறைகளும் வேரூன்றி உள்ளன.


மலேசியத் தீவுகளிலும், மலேசியாவிலும் இராமாயணக் கதைகளும், பாரதக் கதைகளும் பரவியதுடன் நிழலாட்டம் எனும் “ஓயாங் கூலிட்” கலைகளும் பரவி இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. ஓயாங் கூலிட் கதையும் படைப்பும் முற்றிலும் இந்து முறைப்படியே நடத்தப்படுவதை இன்றும் காணலாம். மேழிச் செல்வமாகிய உழவு முறைகளும், மன்னவனைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கும் மரபுகளும் பேணப்பட்டன. இசுலாமியர்கள் கும்பிடும் வழக்கம் மற்றவராயினும் மலேசிய மன்னர்கள் இசுலாமியர்களாக இருந்தும் கை கூப்பி எழிலுறக் கும்பிடும் காட்சி மாட்சியுறத்தக்கது. மேலும் இந்து முறைப்படி மகுடம் சூட்டப்படுகின்ற பண்பாட்டுச் சடங்குகளும் மலாயர்களிடையே வரவேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மகுடத்தை “மகோடா” என்றும் நகரத்தை “நெகாரா” என்றும் இராஜ்யத்தை “கெராஜாஹான்” என்றும் மேலும் அரசனை “இராஜா” என்றும் அரசியைப் “பரமேஸ்வரி”என்றும் அழைக்கின்ற இந்தியப் பண்பாடுகள் மலாய்க்காரர்களால் தழுவப்பட்டன. இராஜா என்ற சொல் இசுலாமிய கலப்பிற்குப் பிறகு சுல்தான் ஆனாலும், இராணி பரமேஸ்வரியாகவே இருப்பதைக் காணலாம். பெர்லிஸ் சுல்தானை இன்றும் இராஜா என்றே அழைக்கின்றனர்.

பேராவில் மன்னன் முடிசூட்டப்பட்டுச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் “ஸ்ரீ நராதிராஜா” என்பவர் சிதைந்த சமற்கிருதத்தில் வாழ்த்து வாசிக்கும் வழக்கு இன்றும் உண்டு. இதுபோல சயாம் மன்னன் முடி சூட்டப்படும்போது சிதைந்த திருவாசகப் பாடலான திருவெம்பாவை ஓதப்படுகிறது. இங்ஙனம் மலேசிய மக்களிடையே இறப்பு, இறப்பு, திருமணம், கல்வி, மருத்துவம், மந்திரம், பூசை, பணிவு,கனிவு அனைத்திலும் தமிழர்களின் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஊடுருவி வேரோடி நிற்பதைக் காய்தல் உவத்தலின்றி நோக்கினால் கண்டு கொள்ளலாம்.

நூலாதாரங்கள் இவற்றுக்கு விரிவாக இல்லையென்றாலும் கடாரத்தில்(கெடா) அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்துக் கோயிலின் அடித்தளமும், பீடோரில் கிடைத்த அவலோகிதேஸ்வரர் போன்ற சிலையும் அழியாத கலையாகிவிட்ட “ஓயாங் கூலிட் எனும் நிழலாட்ட கலைகளும் இதனை மெய்ப்பிக்கும்.மலாயா மண்ணுக்கு முதன் முதலில் நாகரிகத்தை அளித்ததுடன் இந்திய நாகரீகத்தாலும், இந்திய மொழிகளாலும் ஏற்றம் பெற்றது மலாயா மண்ணாகும் என்று ஆங்கில நூலறிஞர் ரோலன் பிராடல்(Rolland Braddol)குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

நன்றி: தமிழ்க்குயிலார்-ஈப்போ