திங்கள், 26 ஜனவரி, 2009

வணிகம் செய்ய வந்த தமிழர்கள்

கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்துள்ளனர்.



வணிகத்திற்காக வந்த தமிழர்களில் சிலர் ஆறு மாதம் வரை மலாக்காவில் தங்கி இருப்பதுண்டு. அப்படிப்பட்ட காலத்தில் சிலர் மலாய்ப்பெண்களைக் காதலித்து இந்து முறைப்படி தாலிகட்டி மணந்துகொண்டு இங்கேயே தங்கினர். ஒரு சில தடவைகளில் கப்பல் புயலில் சிக்கியதால் தப்பிக் கரையேறிய தமிழர்களும் இங்ஙனம் மலாக்காவில் தங்க நேர்ந்த கதையும் உண்டு. இவர் பிள்ளை என்றும், செட்டி என்றும், முதலியார் என்றும், படையாச்சி என்றும் பலவகைப் பிரிவினராக இருந்தாலும் மலாக்காவிலேயே தங்கி மலாக்காச் செட்டிகளாகி விட்டனர். அவர்களின் மொழி மறைந்தும் பண்பாடு, வழிபாடு மறையாத மக்களாக இருப்பதை இன்றும் காணலாம். இவர்கள் கட்டிய பொய்யாத வியாகர் கோயில் இன்றைக்கு 350 ஆண்டுகள் பழமையுடையது. இவ்வாறே தமிழர்களும்- தமிழ் முசுலிம்களும் மலாயாவில் பல்வேறு பகுதிகளுக்குக் குடியேறி வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் நிரம்ப உள்ளன. அவர்களை அடுத்துத் தனவைசியம் பண்ணவந்த நகரத்தார் பெருமக்களும்- கல்விமான்களும்- உயர் அலுவல் பார்க்கும் ஆற்றல் படைத்தவர்களும் விரும்பியும், அழைக்கபட்டும் மலாயாவிற்குப் பரவலாக வந்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. 1938 இல் கங்குரும்பை பெ.நா.மு.முத்துப்பழனியப்பன் ஜே.பி அவர்கள் எழுதிய “மலாயாவின் தோற்றம்” என்ற நூலில் இதன் விவரத்தைக் காணலாம்.



இவ்வாறு குடியேறிய தமிழர்களால் தமிழ்ப்பண்பாடுகள்- தமிழர் நடையுடை பாவணைகளின் சாயல்கள் மலாயாவில் மேலும் வேரூன்றியதால் வெண்கலக் குத்துவிளக்குகளைப் பாவிக்கும் பழக்கமும் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்க வழக்கமும் பரவத் தொடங்கின. வணிகத் துலாக்கோலும், வாழ்வியலில் நல்லெண்ணப் புரிந்துணர்வும், விளையாட்டில் பல்லாங்குழியும், பண்பாட்டில் மலர்மாலைகளும் தமிழர்களின் வருகையால் மேலும் இரண்டறக் கலந்தன.மற்றும் தமிழ்ச்சொற்களும் சமற்கிருத மொழிச் சொற்களும்- இந்தியச் சொற்களும் மலாய்மொழியிற் கலந்து மலாய் மொழியையும் வளர்த்தன. மலாய் மொழியிலுள்ள பண்பாட்டுச் சொற்களில் பெரும்பான்மை இந்தியச் சொற்களும், வழிபாட்டுச் சொற்களில் பொரும்பான்மை அரபுச் சொற்களும், அறிவியலில் ஆங்கிலச் சொற்களும் இரண்டறக் கலந்து பயன்படுத்தப்படுவதைக் கல்விமான்கள் மறுப்பதற்கு இல்லை.


கப்பல், பெட்டி, மீசை, ரோமம், ரூபம், ரகம், திரி, ஜெயம், ஆகம்ம், சக்தி, தேவி, புத்ரி, குரு, பாக்கி போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் அப்படியே எவ்வித மருவுமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கம்- சிங்கா, தருமம்- தருமா, சங்காசனம்- சிங்காசனா, நாமம்- நாமா, நீலம்-நீலா, உபவாசம்- புவாசா, பாஷை- பகாசா, சாஸ்திரம்- சாஸ்திரா, வரம்- சுவாரா, கங்கை- சுங்கை என்பன சில. இன்னும் சில சொற்கள் முன்பின் இணைப்புப் பெற்று வழங்குகின்றன. கும்பல்- கும்புலான், ராஜாங்கம்- அரசாங்கம் என்பன போன்று ஏராளமாகும். இவ்வாறு மலாய்மொழியைத் தமிழோடும் தமிழ் பண்போடும் சேர்ந்து வளர்த்த பங்கினை மறைக்க முடியாது. மலாய்மொழி இலக்கியத்தின் தந்தை என்றும் முன்னோடி என்றும் போற்றப்படுகின்ற முன்ஷி அப்துல்லாவும் ஒரு தமிழ் முசுலிம் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் கெடாவிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தும். தமிழ் மன்னர்களின் வருகையாலும், வணிகர்களின் வருகையாலும் மலேசியாவின் மொழியும்,கலையும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வளம் பெற்றன, நலம் பெற்றன என்றும் கூறலாம்.


நன்றி: தமிழ்க்குயிலார்

3 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அருமையான - பயனான - மலேசியத் தமிழர் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய இடுகை.

இம்மாதிரியான செய்திகளைத் தொடர்ந்து வழங்கவும்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பயனான செய்தி... நன்றி ஐயா...

கோவி.மதிவரன் சொன்னது…

வாழ்க வளத்துடன்.
இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்