தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பது இன்று மெல்ல-மெல்ல மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கென்று விளையாட்டுகள் இல்லை என்ற எண்ணக்கூடிய காலம் உருவாகியுள்ளது வருந்தற்தக்க செய்தியாகும்.அவ்வகையில் தமிழர்களால் மறக்கப்பட்டு வருகின்ற தமிழர் விளையாட்டுகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர்கள் வாழ்வில் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்று வந்துள்ளன. அவ்வகையில் தமிழ்நாட்டுப்புற மக்களால் இன்றளவும் பேணி போற்றப்பட்டு விளையாடிவரும் விளையாட்டு சல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலாகும். மாடி வாசலில் முரட்டுக் காளையினைத் தனித்து நின்று அடக்குதல் இவ்விளையாட்டின் நோக்கமாகும்.
இலக்கியங்களில் சுட்டப்படும் சல்லிக்கட்டும் ஏறுதழுவுதலும் ஒன்றே. ஆனால், மேனாட்டுக் காளைப் போர் சண்டையும் நம் பழந்தமிழரின் சல்லிக்கட்டையும் இணைத்துப் பார்த்தல் கூடாது. ஏனெனில், காளைப்போர் சண்டையின் இறுதியில் காளைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், காளைகளை அடக்குதல் என்ற செய்கை மட்டுமே இவ்விளையாட்டில் இடம்பெறுவதால் ஏறு தழுவுதலைத் தமிழருக்கே உரிய விளையாட்டாகக் கொள்ளலாம்.
ஏறு தழுவுதல் என்பது மிகுந்த துணிச்சலும் திறமையும் நிறைந்த விளையாட்டாக இன்றளவும் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டில் வீரமும் திறமும் கொண்ட இளைஞர்கள் பங்கெடுத்துக் கொள்வர். சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு(காளைகளைப் பொது வீதியில் ஓடவிட்டு அவற்றை விரட்டுவது) மற்றும் எருது கட்டுதல்(காளைகளைக் கயிற்றால் கட்டி அடக்குதல்) எனும் விளையாட்டுகள் நடைப்பெற்றன எனக் கூறுகின்றனர். பின்னாளில் தமிழகத்தில் ஜமீன்தார்கள் தங்கள் பலத்தை உறுதிப்படுத்த பலமுள்ள முரட்டுக் காளைகளை வளர்த்தார்கள் என்ற தகவலும் உண்டு. ஆனால், அக்காளைகளை யாரும் அடக்கி வென்றுவிட்டால் தங்கள் மதிப்பினை இழந்து விடுவோம் என்று பயந்து சல்லிக்கட்டு போட்டிகள் எதையும் வைக்கவில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு நடைப்பெற்றது என்ற கருத்தை வலியுறுத்த நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் என்ற ஊரில் உள்ள கற்பாறை ஓவியங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வோவியங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது அறிஞர் பெருமக்கள் முடிந்த முடிபாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக