
“ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று)
ஏனையது தன்னே ரிலாத தமிழ் !”
என்று, தனக்கு நிகரில்லாத மொழி தமிழ் எனக் கூறுவர். அத்தகு சிறப்பு வாய்ந்த உலகத் தன்னேரில்லா இனிய மொழி நமது தாய்மொழி என எண்ணுங்கால் உள்ளம் உவகை கொள்கிறது. அத்தகு சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்ற யான் பெருதற்கரிய பேறாக கருதுகின்றேன். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டதன் அடிப்படையில் மாநாடு தொடர்பான எனது பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.

செருமன் நாட்டு பேராசிரியை
உலகில் ஏறத்தாழ 3000-த்திற்கும் அதிகமான மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளன என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். இவற்றில் அந்தந்த மொழிகளுக்கென தனி எழுத்து பெற்றவை ஏறக்குறைய 300 அளவில் இருக்கலாம். அவற்றுள் செம்மொழி எனும் தகுதிக்குரிய மொழிகள் மிகச் சிலவே.மெசபடோமியா நாகரீகமும் எஸாமியர் ஏற்றமும் குமரிக்கண்டத் தமிழரின் வரலாற்று சுவடுகள் இப்படி நமது தாய்மொழியான தமிழ் மிக நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பினை கொண்டிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனையே எல்லீசு, கால்டுவெல், போப், வின்சுலோ, ஆல்பர்ட் சுவைட்சர், ஜான் மார், அஸ்கோ பர்போலா, கமில் சுவலபில் போன்ற அயல் நாட்டு பெருமக்கள் உலகுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இத்தகு சிறப்பினைக் கொண்ட மொழி செம்மொழி தகுதிப் பெற்றிருப்பது உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் போற்றிப் புறந்து கொள்ள வேண்டிய தகவலாகும். இவ்வரலாற்றுச் சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டில் மலேசியக் கல்வி அமைச்சின் சார்பாக யான் கலந்து கொண்டேன்.
திருத்தமிழ் நற்குணருடன் யான் கண்காட்சி அரங்கில்
எங்கு பார்க்கினும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கோவை மாநகரம் கொஞ்சும் தமிழால் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலையோரங்களின் இரு மருங்கிலும் கண்ணைக் கவரும் வகையில் பதாகைகளும் தமிழரின் தனிச்சிறப்பினையும் மான்பினையும் எடுத்தியம்பும் ஓவியங்களும் தமிழர் உள்ளங்களைக் குளிர வைத்துக் கொண்டிருந்தன. தமிழன் ஏதிலி இனம் அல்ல. உலகப் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் உறவுக்காரன் என்பதை கொடிசியா வளாகத்தில் நிரம்பியிருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியிருந்தது.
எங்கு பார்க்கினும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கோவை மாநகரம் கொஞ்சும் தமிழால் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலையோரங்களின் இரு மருங்கிலும் கண்ணைக் கவரும் வகையில் பதாகைகளும் தமிழரின் தனிச்சிறப்பினையும் மான்பினையும் எடுத்தியம்பும் ஓவியங்களும் தமிழர் உள்ளங்களைக் குளிர வைத்துக் கொண்டிருந்தன. தமிழன் ஏதிலி இனம் அல்ல. உலகப் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் உறவுக்காரன் என்பதை கொடிசியா வளாகத்தில் நிரம்பியிருந்த மக்கள் கூட்டம் உணர்த்தியிருந்தது.
ஒண்டமிழ்த்தாய்ச் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம் தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே
என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் உயிர்ப்பெற்றிருந்தன. தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழர் நாகரீகம், பண்பாடு, இணையம் என எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி அடைந்துள்ள வெற்றிகளை உலகுக்கு பறைசாற்றிட ஆய்வறிஞர்களும் மொழியறிஞர்களும் முகாமிட்டிருந்தனர். அன்னை தமிழுக்கு தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற மொழி மூலவர்களின் பெயர்களை ஆய்வரங்குகளுக்குச் சூட்டிப் பெருமை சேர்த்திருந்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம், கண்காட்சி அரங்கம், இணைய கண்காட்சி அரங்கம், இனியவை நாற்பது என மாநாட்டின் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கவேண்டியவையாகும். தாய்தமிழுக்காக இத்தகு மிகச்சிறப்பான ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டிருக்கின்ற முத்தமிழ் மூதறிஞர் காலத்தால் நிலைபெறுவார் என்பது திண்ணம்.
இவ்வரலாற்றுச் சிறப்புக்குரிய விழாவில் 50 நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் பேராளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். பல இலக்கம் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு அன்னை தமிழுக்குப் பெருமை சேர்த்தனர். ஆய்வரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம், பொழிவரங்கம் என ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்மொழியின் சிறப்பினையும் வரலாற்று உண்மையினையும் எடுத்தியம்புவதாக அமைந்திருந்தன. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என முழங்கிய செம்மொழி வாழ்த்துப்பா மாநாட்டு வளாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் தமிழரின் நாடி நரம்புகளில் ஊடேறிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
கிரேக்கம், இலத்தீன், இப்ரூ, அரபு, சீனம், தமிழ் ஆகிய மொழிகள் உலகப்பெருமொழிகளாக மதிக்கப்படுகின்றன. ஆயினும் அவற்றுள் தமிழ் தனிப்பெருஞ்சிறப்புடையது என்பதனை ஆய்வரங்குகளின் வழி உலகுக்கு உணர்த்திய அறிஞர் பெருமக்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒட்டுமொத்தத்தில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்ததோடல்லாமல் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக அமைந்தது என்றால் மிகையாகா.
வாழ்க தமிழ் வெல்க தமிழினம்
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக