ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

செந்தமிழ்க்குறிஞ்சி சா.சி. குறிஞ்சிக்குமரனார் அவர்கள்



செந்தமிழ்க்குறிஞ்சி என பல்லோராலும் அழைக்கப்படும் முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் மலேசிய இலக்கிய உலகில் தன்னிகரற்ற பாவலராக உலாவந்தவர். மலேசியாவில் பாவாணர் கண்டு காட்டிய வழிதடத்தில் தூய தமிழைப் பரப்பிய பெருமகனார். இவர் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் தம்மை முழுமையாக ஈகப்படுத்திக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன் கருதாது உழைத்த நற்றமிழ்ப் பெருமகனார்.

முதுபெரும் பாவலர் ஐயா அவர்கள் 05.05.1925-ஆம் நாள் காரிக்கிழமை(சனி) தமிழகத்தில் முகவை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இரணசிங்கம் எனும் சிற்றூரில் சாத்தையா,சிட்டாள் இணையருக்கு முதலாவது செல்வமகனாகப் பிறந்தார். ஐயா அவர்கள் 1930-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு ஆணிவேராகவும் மூச்சாகவும் விளங்கியவர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள்.

இவரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும். 1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழி சுயமரியாதைப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராக மாறினார். ஊழிப்பேரறிஞர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் “ஒப்பியன் மொழிநூலைப்”பார்க்கும் வாய்ப்பைப் பெற்று அதிலிருந்து தூய தமிழ்ப்பற்றாளரானார். 1946-ஆம் ஆண்டிலே ம.இ.கா-வில் உறுப்பியம் பெற்று பேரா மாநில இலக்கியப் பகுதி பொறுப்பாளராக அமைந்து பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தன், மருத்துவர் அ.சிதம்பரநாதன் போன்றோர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்த பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைப்பெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார்.


அன்னவருக்குத் தனித்தமிழ் உனர்வு மேலோங்கி இருந்த கரணியத்தால் தூய்தமிழ்க் கொள்கைகளைப் பரப்பவும் முனைந்தார். எனவே, பாவாணர் மன்றத்தைத் தோற்றுவித்து பல எழுத்தாளர்கள்,பாவலர்கள், சொற்பொழிவாளர்கள் பலர் தோன்றுவதற்கு வித்தாக அமைந்தவர் ஐயா அவர்கள். உலகிலேயே பாவாணருக்கு மன்றம் அமைத்த பெருமை அவரையே சாரும். அவர்களில் தமிழ்மணி எல்லோன், பெ.கோ.மலையரசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாவாணர் தமிழ் மன்றத்தின் வழி தமிழகத்திலுள்ள பேராசிரியர் பலரை அழைத்து மொழி, இலக்கியம் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்துள்ளார். அவர்களில் குறிப்பாக பாவலரேறு பெருஞ்சித்திரனார், முனைவர் தமிழ்க்குடிமகனார், வ.சு.ப மாணிக்கனார், கு.ச.ஆனந்தனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், மலேசியாவில் தனித்தமிழ் உணர்வு பெற “தென்மொழி” “தமிழ்ச்சிட்டு” “தமிழ்நிலம்” போன்ற இதழ்களை வரவழைத்து தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.


பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி “தமிழ்ச்செல்வர்” என்ற விருதைப் பொற்பதக்கத்தில் வழங்கியது சிறப்புக்குரிய ஒன்றாகும். பாவலர் அவர்களின் அயராத தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாஜா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க்கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.

செலாமாவில் உள்ள தமிழ் நெறிக்கழகத்தின் ஏடலராகவும் இருந்து இனம், மொழி, குமுகாய மறுமலர்ச்சி உணர்வுடன் பல்லாற்றானும் பாடாற்றி வந்தவர் குறிஞ்சியார் அவர்கள். ஐயா அவர்கள் “பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியும் பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கட்டுரை படைத்துள்ளார். சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இவர் அதனையே தனது தொழிலாக நடத்தி வந்தார். அன்னவர் பல்வேறு மருந்துகளுக்கு தனித்தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தது தனிச்சிறப்பாகும்.

மலேசியத் தனித்தமிழ் வளர்ச்சிக்கு தன் வாழ்நாள் முழுவதும் ஈகப்படுத்தி பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55க்கு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவரின் தனித்தமிழ்க் கொள்கை இன்றும் மலேசியத் தமிழர்களிடையே வேரூன்றி இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான முயற்சி. வளரட்டும் தமிழ்த்திருப்பணி. வாழ்த்துக்கள்.

ஐயா, கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் என்ன தொடர்பு? உங்கள் கருத்து..?


இளமாரன்,
பினாங்கு

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புடையீர் வணக்கம்
தங்கள் பதிவு கண்டு அகம் மகிழ்கிறேன்.திரு.சுப.நற்குணன் அவர்கள் வழியாகத் தங்கள் பதிவு பற்றி அறிந்தேன்.
அறிஞர்கள் குறிஞ்சிக்குரமரனார், திருமாலனார் பற்றி யான் எழுதும் அயலகத்தமிழறிஞர் தொடரில் எழுத விரும்புகிறேன்.தங்கள் கட்டுரைச் செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ள தங்கள் இசைவை நாடி நிற்கிறேன்.
மேலும் கூடுதல் தகவல்கள் இருப்பினும் தந்து உதவுங்கள்.வேறு யாரிடம் கேட்டால் கூடுதல் தகவல் கிடைக்கும்.தக்கவர்களை அறிமுகம் செய்யுங்கள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
+91 9442029053
1992 இல் குறிஞ்சிக்குரமானார் எனக்கு ஒரு மடல் எழுதி ஊக்கப்படுத்தியுள்ளார்.அவர் மாணவர் கருப்பையா அவர்கள் ஈப்போவில் இருக்கிறார்.அவர் மின்னஞ்சல் முகவரி அனுப்ப அவருடன் தொடர்புகொள்வேன்.