செவ்வாய், 23 செப்டம்பர், 2008

தமிழ் ஆலயம் கண்டனம்

தமிழ்க்கூறு நல்லுலகில் மதித்துப் போற்றத்தக்க வகையில் பல தமிழ்க்காப்பு பணிகளை முன்னின்று நடத்தி வரும் மலேசியத்தின் தமிழ்மறவர் ஐயா.இரா.திருமாவளவனாரைக் கண்டித்த தமிழ் நாளிதழுக்கு நமது தமிழ்ஆலயத்தின் பதில் .

திருமாவளவன் என்பவர் ஒரு தனி நபர் அல்ல என்பதைத் தாங்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மானமுள்ள மலேசியத் தமிழனின் மறு அடையாளம் தான் திருமாவளவனார் அவர்கள். அவ்வகையில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நிகழ்வில் அவர் பேசிய பேச்சில் எவ்வித குறையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.அவர் பேசும்போது தங்கள் தமிழ்நாளிதழை மட்டும் குறிவைத்துப் பேசவில்லை. மாறாக நமது மலேசியத் திருநாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த ஊடகங்களையும் தொட்டு தான் அவருடைய பேச்சு இருந்தது. ஆனால், தங்கள் நாளிதழில் அன்னவரைப் பழிக்கும் நோக்கத்தில் “திருமாவளவனே நாவை அடக்கு” என செருக்குத் தனமாக செய்தி வெளியிட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஐயா.திருமாவளவனாரைப் பழித்துப் பேசுவதற்கு இந்நாட்டில் உள்ள எவருக்கும் கிஞ்சிற்றும் தகுதியும் அருகதையும் கிடையாது. மொழி,இனம்,சமயம் என முப்பெரும் கொள்கைகளை வாழ்வியலாகக் கொண்டு நம் நாட்டில் மட்டுமல்லாது உலக நிலையிலும் மொழிக்காகவும் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஐயா அவர்களின் பணிகள் எண்ணிலடங்கா. அவரைக் கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டியத் தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

அவர் பேசியதை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக்கூறும் கருத்துக் குருடர்கள் முதலில் தங்கள் நாளிதழில் உள்ள குறைகளை அடையாளம் காணுதல் வேண்டும். உண்மை எப்பொழுதும் சுடத்தான் செய்யும். தமிழால் வயிற்றைக் கழுவி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தாங்கள் உண்மையிலேயே தமிழுணர்வாளர்களா? என்று என்னத் தோன்றுகிறது. இற்றைய நிலையில் மொழிக்கொலைகளுக்கு பண்பாட்டுச் சிதைவுகளுக்கும் தகவல் ஊடகங்களான நாளிதழ், தொலைக்காட்சி, இணையம், வானொலி போன்றவையே முகாமையான காரணங்களாகும். இளைஞர்கள் கெட்டு சீரழிவதற்கும் நாளிதழ்களே முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதைத்தான் அவரும் சாடியிருக்கிறார்.அதில் என்ன தவறு இருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே தேவையற்ற மது விளம்பரங்கள், மொழிப்பிழைகள், சினிமா நடிகைகளின் ஆபாச காட்சிகள் பிறமொழிசொற்கள் போன்றவைதான் அதிகமாகத் தென்படுகின்றன.

எப்படியெல்லாம் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்க முடியுமோ அதற்கு துணை நின்றுவிட்டு இளைஞர்கள் சீர்கெட்டுவிட்டார்கள் என்று சொல்லுவதில் என்ன பயன் இருக்கிறது. இதைத்தான் மலையகக் கவிஞர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் - அதைத்
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!


மொழியாலும் இனத்தாலும் தமிழனாக வாழும் மானமுள்ள தமிழனுக்குத் தான் இது புரியும். மற்றவருக்கு இது வேப்பங்காயாகக் கசக்கத்தான் செய்யும். உண்மைத் தமிழுணர்வாளர்களை மதிக்கத் தெரியாத இவர்கள் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ்நாளிதழ்கள் தாய்மொழியின் மாண்பினையும் பண்பாட்டினையும் தூக்கிப் பிடிப்பதற்கு பங்காற்றவேண்டுமே ஒழிய மாறாக பண்பாட்டையும் மொழிச்சிதைவையும் ஊக்கப்படுத்துகின்ற பணிக்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது.

அவனவன் வாயாலன்றி ப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் காதாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பெறனெவன் காப்பான் வந்தே.
மலேசிய மாமூலர்
அ.பு.திருமாலனார்

இறுதியாக, தமிழினத்தை வடிவமைப்பதில் தமிழ்நாளிதழுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு ஆகவே, தாங்கள் சமுதாயப் பொறுப்பினை உணர்ந்து செயல்படுமாறு விழைகின்றோம். இல்லையேல் நாளைய தலைமுறை நம்மை காறி உமிழும் நிலைக்கும் நாம் ஆளாகுவோம் என்பது மட்டும் உறுதி.

உண்மைத் தமிழர்கள் சிந்திப்பார்களா....

ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை
எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும் மற்றை
இனத்தார்க்கே மண்டியிடான்
மண்டியிட்டால்...
பெற்றவர்மேல் ஐயம் ... பிறப்பின் மேல் ஐயம்
என சற்றும் தயக்கமின்றி சாற்று.


தமிழே தமிழரின் முகவரி

தாய்தமிழ்ப்பணியில்,

கோவி.மதிவரன்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தாங்கள் எழுதியுள்ள கண்டனத்தை முழுமையாக வழிமொழிகின்றேன். மூன்று தமிழ் நாளிதழ் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய செய்தி. இதன் தொடர்பாக என்னுடைய கருத்தையும் சொல்ல விழைகிறேன்.

மலேசியத் தமிழ்ச் செய்தித்தாள்களின் கபட நாடகத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள இரா.திருமாவளவன் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன்.

திருமாவளவன் அவர்கள் பேசிய செய்தியை முதல்நாளில் மிகவும் பெரிதுபடுத்தி மக்கள் ஓசை போட்டது எதற்காக என்று மறுநாள் பாலகோபாலன் நம்பியாரின் அறிக்கையை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் படித்த போதுதான் புரிந்தது.

திருமாவளவனின் வீர முழக்கத்தை நேரடியாக எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத மக்கள் ஓசை பாலகோபாலன் என்ற ஒரு 'செருப்பை' எடுத்து முதல் நாள் (23.9.08) அடித்தது; பிறகு பினாங்கு மதியழகன் என்ற 'பருப்பை' தூக்கி இரண்டாம் நாள் (24.9.08) அடித்தது.

மக்கள் ஓசைக்காரர்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் திருமாவளவனை நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், பத்திரிகையில் பெயர் வருவதற்காக ஆளாய் பறக்கும் நம்பியார், மதியழகன் போன்ற விளப்பர விரும்பிகளை ஏவி விட்டு கோழத்தனமாக மக்கள் ஓசை செயல்பட்டுள்ளது.

மக்கள் ஓசை ஆசிரியருக்கு'சிந்திக்கம் வேளை' இன்னும் கிடைக்கவில்லை போலும். அதனால்தான், யார் யாரையோ தூண்டிவிட்டு எழுதச் சொல்லி முதல் பக்கத்தில் போடுகிறார்கள்.

திருமாவளவனின் சொன்ன கருத்துக்கள் யாவும் உண்மையானவை. தாங்கள் நடிகை தொடையைப் போடவில்லை, தொப்புளைக் காட்டவில்லை; மொழியின பண்பாட்டைச் சீரழிக்கவில்லை என்று எந்த பத்திரிகையும் நெஞ்சை உயர்த்தி மறுக்க முடியாதவை.

அதனால்தான் கோழைத்தனமான மிகவும் கீழ்த்தரமான வேலையைச் செய்கிறார்கள். மக்கள் ஓசையின் நரித்தனம் விரைவில் மக்களுக்குத் தெரியவரும்!!

-இளஞ்சித்திரன்
வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

தங்கள் கருத்தை நான் ஆதரிக்கின்றேன். இன்றைய சூழலில் ஐயா திருமாவளவன் கூறியதில் உண்மை உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நாளிதழ் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் பயனான செய்திகள் குறைவாகவே உள்ளன. சினிமாவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியினைத் தவிர்த்து இக்கால இளைஞர்களுக்குப் பயனான பல தகவல்களைத் தரலாம் என்பது எனது கருத்து.

நம் தாய்மொழியை நாம் தான் காக்க வேண்டும். வேறு எவர் வந்து காப்பார்

அரசேசுவரி
தொல்லூர்

ஆதவன் சொன்னது…

மக்கள் ஓசையின் செய்திக்குத் தாங்கள் எழுதியுள்ள கண்டனம் சிறப்பாக உள்ளது.

தங்களின் தமிழ் ஆலயம் வலைப்பதிவை கண்டேன். சிறப்பாக உள்ளது.

மலேசியாவில் தமிழை முன்னெடுக்க மற்றுமொரு வலைப்பதிவு உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்த் தெளிவு என்ற வினா விடை பகுதியை நன்றாகத் தொகுத்துத் தருகின்றீர்கள். இது வடவேற்கக்கூடிய ஒன்று. வலைப்பதிவில் புதுமை முயற்சியும் கூட.

தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கவும்.

மலேசியத்தில் செந்தமிழைச் செழிக்கச் செய்வோம்.

தங்களின் வலைப்பதிவை அறிமுகப்படுத்திய சுப.நற்குணனின் 'திருமன்றில்' திரட்டிக்கு என்னுடைய நன்றி.