சனி, 4 அக்டோபர், 2008

திருவருட் பேரொளி வள்ளலார் அருள்வருகைத் திருநாள்

இன்று 05.10.2008 திருவருட் பேரொளி வள்ளல் பெருமானார் அவர்கள் வருவிக்கவுற்ற அருள்வருகைத் திருநாள். அதனை நினைவு கூறும் முகத்தான் இக்கட்டுடை வெளியிடப்படுகின்றது.

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



தாம் வாழ்ந்த காலத்தில் பேசிய பேச்சாலும் எழுதிய எழுத்தாலும் ஆற்றிய செயலாலும் தமக்குப் பின்னும் சமுதாயத்தில் மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தி நாம் மீண்டும்-மீண்டும் நினைக்கத்தக்க வகையில் உயர்ந்த பயன்களை வழங்கிய பெரிய மனிதர்களைத் தான் நாம் சான்றோர்கள் என்றும் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் மதித்துப் போற்றிக் குறிப்பிடுகின்றோம். அவ்வகையில் மிக அண்மைய காலத்தில் தமிழ்ச்சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் திருவருட் பேரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பதாகும். உலக உயிர்கள் எல்லாம் ஒன்று. அவ்வுயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமானார் வழி.


பிறந்த உயிர் என்றாவது இறக்கத்தான் வேண்டும் என்பது உலக நியதி. இந்நிலையை மாற்றி சாகாதவனே சன்மார்க்கி என்று தொடங்கி, சித்தர்கள் நிலையையும் ஆய்ந்து, அதன் தன்மையையும் உணர்ந்து இறுதியாக சாகாத நிலைக்கு மேல் நிலை இருக்கவேண்டும் என்று உணர்ந்து, அதுவே ஒளிவடிவம் என தெளிந்து, ஒளியாகவே உருமாறியவர்தான் வள்ளல் பெருமானார். அடிகளார் ஆண்டவன் அருளால் உள்ளொளி பெற்றவர்; அதனால் வெறும் அறிவாலன்றி, அருளால் பார்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார். எனவே தான் தமக்கு அறிவுத் தந்த அறிவாசான் எல்லாம் வல்ல இறைமைத் திருவருளே என்று பாடுகின்றார்.

வள்ளல் பெருமானார் அவர்கள் அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகீர் அனைவரையும் சன்மார்க்க நெறியிலே திளைத்திருக்க அவதரித்தவர். வள்ளல் பெருமானார் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சன்மார்க்கத்தின் வழி சாதி, மதம், சமயம், ஆசாரம் போன்ற பேதங்களை ஒழித்து அனைத்து உயிர்களையும் சமமாகவும், பொது நோக்குடனும் ஒருமையுணர்வுடனும் அன்புடனும் காணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் என உலகுக்கு உணர்த்தியவர். ஓரறிவு முதல் ஆறறிவுயிர் வரை எல்லா உயிர்களிடத்தும் இறைவன் குடிகொண்டிருப்பதனால், படைப்பில் உயிர்கள் பலவகையாக பிரிந்திரிப்பினும் அனைத்து உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்பதை அறிந்து உயிர்நலம் பேணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாம் என்பது வள்ளல் பெருமானார் கருத்து.

வள்ளல் பெருமானார் இறைவனை வழிபடும் முறையிலும் புதுமையை புகுத்தினார். அப்புதுமை வழிபாடே சோதி வழிபாடு என்கிற ஒளி வழிபாடாகும். இறைவனைக் கருணையே வடிவமாகக் கொண்டு அருளை விளக்கமாகச் சிந்தித்து, இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது என வள்ளலார் கண்டார். எல்லா சமயங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பொதுவான வழிபாடே அருட்பெருஞ்சோதி வழிபாடாகும்.


வள்ளலார் அறிமுகப்படுத்திய அருட்பெருஞ்சோதி வழிபாடு மனிதன் தனக்குள் ஒளிந்து உள்ளொளியாக இருக்கும் இறைவனை உணரவும் அவ்வுள்ளொளியைப் பெருக்கிக் கொள்ளவும் உதவுவதோடு மட்டுமல்லாது ஆன்மலாபமாகிய மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறலாம் என்பதே வள்ளலாரின் ஒளிவழிபாட்டின் முடிந்த முடிபாகும்.

3 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆதவன் சொன்னது…

சகத்தினர் அனைவரையும் அகத்தே திருத்திட எல்லாம் வல்ல இறைவனால் வருவிக்கவுற்ற வள்ளலாரைப் பற்றிய அடிப்படையான செய்திகளை அழகாக வழங்கியுள்ளீர்கள்.

வள்ளலார் கருத்துகள் தமிழர் உள்ளத்தில் ஊன்றினால், சமயத் துறையில் மிகப் பெரும் விடுதலையும் வீடுபேறும் கிடைப்பது உறுதி!

Sathis Kumar சொன்னது…

அன்பரே,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/