தமிழ் முத்தமிழ் என வழங்கப்பெறும். இயல்,இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள்.வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது “இயல்” என்றும், ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது “இசை” என்றும் மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது “கூத்து” என்றும் வழங்கப்பெறும்.ஆடற்கலையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தவை.‘பாவ, ராக, தாள வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்கும். கூத்து என்பதை இளங்கோ அடிகளார்தாம் நாடகம் என முதன் முதலில் குறிப்பிட்டவர் என்பர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர்.இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். சங்க காலத்தில், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலையிலும், தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப் பெற்றன.குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து,வெறியாட்டு, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல்வகைக் கூத்துகள் நடத்தப்பெற்றன என்பதை சங்க நூல்களில் பரவலாகக் காணலாம். கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைப்பெற்றன என்பதைக் குறிக்கும்.இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சிலவிடங்களில் பொழுது போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப்பெற்றது. இன்று, நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கூத்து கருதப்பெறுகின்றது.
இந்தக் கவினுறு கலை அருகி வரினும் அதன் சிறப்பு இன்னும் குறையவில்லை எனலாம்.இக்காலத்தில் காணப்பெறும் கூத்து வகைகளுள் பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து ஆகியன கதை சார்ந்தவை என்றும் புரவியாட்டம், சாமியாட்டம், கழியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை கதை சாராதவை என்றும் பாகுபடுத்துவர்.போருக்குப் புறப்படும்பொழுது வெறிக்குரவையும், போரில் வெற்றிக்காகக் துணங்கைக் கூத்தும் ஆடுவர் எனச் சங்க இலக்கியம் கூறும்.

கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும், பின்னர் கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும், இசைத் தமிழ்ப்பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத்தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல், இசை, ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து, கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது.கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்து வகைகளும் பெருகின. போட்டிகள் உருவாகின. அதன் விளைவுதான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் ஆகும். சுருங்கக் கூறின், தமிழர் வாழ்வில் கூத்துக் கலை இரண்டறக் கலந்துவிட்டதென்றே கொள்ளலாம்.
நன்றி : உமா பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக