திங்கள், 11 மே, 2009

சிலம்பாட்டம்

தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும். இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் கம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப் பெற்று வந்திருக்கின்றது.

சிலம்பம் தற்காப்புக் கலையாக இருப்பினும், பெரும்பாலும் தமிழர் திருவிழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வீர விளையாட்டாக அரங்கேறுகின்றது. சிலம்பம் ஆட கட்டாயம் கம்பு வேண்டும். இதற்கு மூங்கிற் கழி பயன்படுகின்றது.

மூவேந்தர்கள் முதற்சங்க காலந்தொட்டே சிலம்பக் கலையை போற்றி பேணி வளர்த்து வந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். திருவிளையாடற் புராணத்திலும் வைத்திய நூலான “பதார்த்த குணசிந்தாமணியிலும்” சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சிலம்பப் பயிற்சி ஒருவரின் நோயைத் தீர்த்து ஒருவரின் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

சிலம்பாட்டம் என்பது வெறுமனே கம்பை மட்டும் வைத்து விளையாடும் விளையாட்டல்ல. மாறாக ஈட்டி, சுருள்வால், கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டாகும். முற்காலத்தில் போர்ச்சிலம்பம் இருந்திருக்கின்றது. அதனைப் போருக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர். திருவிழாக் காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றும் விளையாட்டு தீச்சிலம்பம் என்று சொல்லப்படுகின்றது. தமிழரின் விளையாட்டே இன்று “கராத்தே, குங்பூ, தேக்கோவா என உறுமாறி பிற நாடுகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டாளர் எதிரியின் கம்பு தன் உடலில் படாதவாறு தடுக்கவும், தன் கம்பால் எதிரியின் உடலின் பல்வேறு இலக்குகளைத் தொடவும், எதிரியின் கம்பைத் தட்டிவிட்டு வெறுங்கையராக்கவும் முற்படுவர். ஏனெனில், எதிரியின் கம்பு பறி போய்விட்டால் அது வெற்றியாகக் கொள்ளப்பட்டு ஆட்டம் நிறைவுறும்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலையை தமிழர்கள் போற்றிப் புரந்துக்கொள்ளாதக் காரணத்தினால், இக்கலை இன்று அருகி வரும் கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. உலகத்தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டும். தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பயனான தகவல்களைத் தந்துள்ளீர்கள்.ஒவ்வொரு தமிழனும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

அன்புடன்,
ஆதிரையன்.

ஆதிரையன் சொன்னது…

ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டிய செய்தி..

அன்புடன்,
ஆதிரையன்.

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டிய செய்தி.

அன்புடன்
ஆதிரையன்