வியாழன், 3 செப்டம்பர், 2009

தனித்தமிழ் அரிமா இர.ந.வீரப்பனார்

இன்று உலகம் சுற்றிய மலையகத் தமிழர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார் அவர்களின் நினைவு நாள். தமிழே காற்று; தமிழர் நலமே மூச்சு என முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றியிருக்கின்ற தகவிலார். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது


இப்புவிப் பந்தில் தமிழர் வாழ்கின்ற நிலம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தம் காலடி பதித்தவர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்து உலகாள அவ்வமைப்பிற்கு நூற்றாண்டு காலம் தலைவராக இருந்தவர் ஐயா.வீரப்பனார்.


தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின மீட்சி என்றெல்லாம் தமிழியச் சிந்தனையுடன் தம் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட பேராசிரியர் பிறந்தது ஒரு நாடு, வாழ்ந்தது ஒருநாடு, மறைந்தது ஒரு நாடு. மலையகத் தமிழர் என்று இர.ந.வீரப்பனாரைக் குறிப்பிட்டால் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இலங்கைத் தமிழர் என்று பொருள்படும்;அழகிய மலைகளைக் கொண்ட மலேசியத் தமிழர் என்று பொருள்படும். கண்டி மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த நுவரெலியாவில் பிறந்த இவர் பின்னாளில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தார். ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதல் தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.


இரத்தினம் அம்மாள்- நடேசன் இணையருக்கு 1930, ஆகத்து 6-ஆம் நாள் தோன்றிய இவர் ,தமிழகம், திண்டிவனம் எண்டியூருக்கு தம் பெற்றோருடன் குடி பெயர்ந்து அதன் பின் மலேசியாவிற்கு வந்தார். இங்கு கல்வியைத் தொடர்ந்து ஆசிரியர் பணியை மேற்கொண்டார். 1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை ச்சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். ஆயினும் 1990 வரி கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளி பள்ளியில் தமிழ்க் கற்பித்த இவர் 1990 உடன் தன் ஆசிரியப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


1951-ஆம் ஆண்டு, நாகம்மாள் என்னும் நல்லாளை மணந்த வீரப்பனாரின் திருமேனி, பொன்னி, அருணன், முல்லை ஆகிய நான்மக்களும் குடும்ப வாழ்வை அமைத்துக் கொண்டனர். ஏறக்குறைய 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் வாழ்ந்த தமிழர்களுடன் தொடர்புக் கொண்டு தமிழையும் தமிழர்தம் பண்பாட்டையும் இடையறாது பற்றியொழுக வேண்டிய அவசியம் பற்றி அந்தந்த நாட்டு பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தியும் வந்தார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள பேராசிரியர், கடைசியாக எழுதிய நூல் “உலகத் தமிழர்”- பாகம் 3 என்பதாகும். அந்த நூல் வெளியீட்டு விழாவில் கூட அவரால் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு இர,ந.வீரப்பனாருக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இலக்கியத் தேனீ என்றழைப்பதைவிட தமிழ்ப்போராளி என்று இவரைக் குறிப்பிடலாம். படைக்கருவி ஏந்தாமல் தாளையும் கோலையும் துணை கொண்டு வடித்த தமிழியச் சிந்தனைகளையே கருவியாகக் கொண்டவர் பேராசிரியர் அவர்கள்.

‘வியட்நாமிற்கு’ பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவருக்கு ஈடேறாமல் போனது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏழாவது மாநாட்டை வெள்ளி விழா மாநாடாக சென்னையில் நடத்திவிட்டு சொந்த கிராமத்திற்குப் போன வீரப்பனார், அதற்கு முன்பே மிகவும் உடல் நலிவுற்றிருந்த நிலையில் மேலும் பாதிப்புற்று 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் இயற்கை எய்தினார். ஆனாலும், அவர் வடித்துத் தந்த தேனொத்த தமிழியச் சிந்தனைகள் உலகத் தமிழர்தம் சிந்தையை ஆளும் எந்நாளும்! பேராசிரியரைப் பற்றி உலக அளவில் ஏராளமானோர் நூல்களைப் புனைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தோர் தமிழகப் பாவலர் கதிர் முத்தையனார், இலண்டன் சுதேரா முருகையன் ஆகியோர் ஆவர்.

புதிய சிந்தனையும் மாறுபட்ட பார்வையும் கொண்டிருந்த இர.ந.வீரப்பனாரின் நெஞ்சத்தில், எளியோருக்கு இரங்கும் கனிவு’ எப்பொழுதும் நிறைந்திருக்கும்....


போற்றிடுந் தமிழ் இலக்கியமாக் கழகம்
ஏற்றிய இரா.ந.வீரப்பத் தமிழன்
பயனிடும் தனித்தமிழ் பாரெல்லாம் பரவ
நயனிடும் தொண்டால் நற்பணி செய்வோன்'

பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்
பாவணர் தமிழ் மன்றம், மலேசியா

நன்றி :- நக்கீரன் - மலேசிய நண்பன்


1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நமது நாட்டின் நல்லறிஞர் பெருமகனார் ஐயா இர.ந.வீரப்பனார் அவர்களைத் தக்க நேரத்தில் நினைவுகூர்ந்து எழுதிய மலேசிய நண்பன் செய்தியாளர் நக்கீரன் அவர்கட்கும், அந்தச் செய்தியைப் பதிவிட்டிருக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி, பாராட்டுகள்.

ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்ட மலேசியச் சான்றோர்களில் ஐயா இர.ந.வீரப்பனார் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

அன்னவரைப் பற்றி அன்னாரின் மகளார் அவர்கள் எழுதிய நூல் ஒன்று வரும் 6.9.2009 நாளன்று வெளியீடு காணவுள்ளது. அதனைப் பற்றிய செய்தியை நாளை பதிவிட உள்ளேன்.

பார்க்கவும்.