சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழன் ரொம்ப நல்லவன்


நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை
நட்புக்கலம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து
தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை
கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன்
கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக
தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து
அவனிடம் கைத்தட்டல் பெறுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத்
தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில்
தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
தமிழன் ரொம்ப நல்லவன்


தன் பண்பாடு இருக்க அடுத்தவன்
பண்பாட்டைப் பின்பற்றி கோட்டு சூட்டு போட்டு
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

அடுத்த இனத்தான் தன் பெண்ணை விரும்பினால் மறுப்பு
சொல்லாமல் மணமுடித்து வைப்பான், தன் இனத்தான் விரும்பினால்
சாதி பேதம் பார்த்து பிரித்து சாதி காப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

சொந்த இனத்தையே வெட்டிக் கொன்று அழித்து
தன் இனப்பெருக்கத்தைக் குறைத்து மாற்று
இனத்தான் சிறப்பாக வாழ வழி வகுப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தனக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது
தன்னடக்கத்துடன் உரக்கப் பேசாமல் அமைதி
காத்து விசுவாசம் காட்டுவதில்
தமிழன் ரொம்ப நல்லவன்

மொத்தத்தில் தன் இன,மொழி, பண்பாடு
வளர்ச்சியை விட பிற இன, மொழி பண்பாடு
வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதில்
தமிழன் ரொம்ப ரொம்ப நல்லவன்

நன்றி:- திருமதி சந்திரா குப்பன் காப்பார்

3 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அருமையான கவிதை. தமிழர் சிலரின் ஈனத்தனத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழனின் தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் கவிதையில் சொல்லப்பட்ட காரணங்கள் மிகப் பொருந்தும்.

//மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக
தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து
அவனிடம் கைத்தட்டல் பெறுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்//

இப்படிப்பட்ட ரொம்ப நல்ல தமிழர்கள் தான் நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த இந்திய ஆய்வியல் துறையைக் கோட்டைவிட்டு விட்டு விரல் சூப்பிக்கொண்டு.. ஒட்டுமொத்த தமிழரையும் விரல் சூப்ப வைத்துவிட்டார்கள்.

தமிழன் ரொம்ப நல்லவன்!!!!

மனோவியம் சொன்னது…

//அடுத்த இனத்தான் தன் பெண்ணை விரும்பினால் மறுப்பு
சொல்லாமல் மணமுடித்து வைப்பான், தன் இனத்தான் விரும்பினால்
சாதி பேதம் பார்த்து பிரித்து சாதி காப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்//
ஒட்டுமொத்த கவிதையும் நன்று..சில்லரை தமிழனின் சின்ன புத்தியை அழகாக சொல்கிறது கவிதை.சமுதாய விமர்ச்சனம் சரியாக சொல்லப்பட்டிருக்கிறது.

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.
வாழ்த்துகள்