வியாழன், 25 செப்டம்பர், 2008

மலேசிய மாமூலர் ஐயா.அபு.திருமாலனார் அவர்கள்


மலேசிய தமிழ்க்கூறு நல்லுலகில் அரைநூற்றாண்டு காலமாக தமிழுக்கும் தமிழருக்கும் அயராது பாடாற்றியவர்தாம் மெய்ப்பொருளறிஞர் என பல்லோராலும் போற்றப்பட்டு தனித்தமிழ்ப் பாவலராக விளங்கியவர் பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்கள். மலேசிய நாட்டிலே இன்றளவும் மொழி, இனம் ,சமயம் என முக்கூறுகளும் பேசப்பட்டு வருதற்கும் தமிழைப்புறக்கணிக்காமல் மறவாமல் காத்து வருதற்கும் வித்திட்டவர்களில் முகாமையானவர். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர்.; பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்ப் பாசறையில் தவழ்ந்து துறைதோறும் துறைதோறும் தமிழ்ப்பணியாற்றியவர். தமிழுக்காக தம்மையே ஈகம் செய்து தொண்டுகள் பல செய்து தமிழாய்ந்த அறிஞர்.


இத்தனை மாண்புகளுக்கும் உரிய பாவலர் ஐயா அ.பு திருமாலனார் அவர்கள் 08.06.1931 ஆம் ஆண்டு திங்கட்கிழமை 10.40.க்குச் செலாமா ஓலிரூட் தோட்டத்தில் மு. அரிபுத்திரனார்- சி.அன்னப்பூரணியம்மாள் இணையரின் இரண்டாம மகவாகப் பிறந்தார். மாலிய (வைணவ) மரபுப்படி “நாராயணசாமி” எனப்பெயரிடப்பெற்றார். பின்னர் தமிழின் மீது தீராத பற்றுதலின் காரணமாகத் தனது பெயரை திருமாலன் எனத் தமிழ்ப்படுத்தினார். பாவலர் அவர்கள் தனது எட்டாம் அகவையிலேயே இராமாயண மகாபாரதங்களை இசைகூட்டி கேட்பார். பள்ளிப் படிப்பிலும் முதல்தர மாணாக்கராகவே விளங்குவார். மெய்ப்பொருளறிஞர் பாவலரின் உடன் பிறந்தார் இருவர்,தமக்கையார் வீரம்மாள், தம்பி மனியனார். பாவலர் ஐயா அவர்கள் 22.10.1962 -இல் கெ.மீனாட்சியம்மையாரைக் கரம்பற்றினார். இவருக்கு அரிபுத்திரன், அரியநாயகன் என் ஆண்மக்கள் இருவர்; அன்பரசி, அன்புமலர் எனப் பெண்மக்கள் இருவர்.


மலையகத்தில் அக்கால் தமிழ்மக்கள் படும் பாட்டையெல்லாம் கண்டு கண் கலங்கி அவர்களின் துயரைத்தீர்க்க தக்க வழிவகைகளைத் தேடிய வண்ணம் இருந்தார் ஐயா அவர்கள். சிறு-சிறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு ஓய்வு வேளைகளில் தமிழ்ப்பணியினையும் பகுத்தறிவுப் பணியினையும் மேற்கொண்டார். அவற்றுள் சாதியொழிப்பு, மதுவொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தொழிலாளர் ஒற்றுமை போன்றவை குறிப்பிட்டு சொல்லத்தக்கப் பணிகளாகும். அதோடுமட்டுமின்றி தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற பொது அமைப்புகளிலும் ஈடுபட்டு உழைத்தார்.



தமிழின்பால் இருந்த பற்றுதலின் காரணமாக 1970 இல் செலாமாவில் திராவிடர்க்கழக கிளையை அமைத்து அதன் தலைவராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். மொழி,இனம், சமயம் என முக்கூறுகளையும் தனது வாழ்வியல் நெறியாகப் போற்றியப் பெருமகனார் 1983-ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் நெறிக்கழகத்தைத்தோற்றுவித்தார். மொழி,இனம்,சமயம் என மட்டும் வாழாமல் நாடகத்துறையிலும் கால்பதித்தவர் அ.பு.திருமாலனார் அவர்கள். பாவலரே பல நாடகங்களை எழுதி இயக்கவும், பாடல்களைப் புனைந்து இசையமைக்கவும் வல்லவரானார். 1951-இல் செலாமாவில் தமிழ்ப்பள்ளிக் கட்டிடநிதிக்காக “பதிபக்தி” எனும் நாடகத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்தது செலாமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தகவலாகும். இவர் எழுதிய தனியிசைப் பாடல்கள் 300க்கும்மேற்பட்டதாகும். தமிழ்க்கூறு நல்லுலகிற்காக இவர் இயற்றிய கலைப்படைப்புகள்வருமாறு:


  • நாடகங்கள்
  1. பாவத்தின் பரிசு
  2. சூழ்ச்சி
  3. மலர்ந்த வாழ்வு
  • நெடுநாடகங்கள்
  1. திருந்திய திருமணம்
  2. பரிசுச்சீட்டு
  3. சந்தேகம்
  4. பாட்டு வாத்தியார் பக்கிரிச்சாமி
  5. என்று விடியும்
  6. மீண்டும் இருள்
  • படைப்புகள்
  1. கட்டுரைகள் 15
  2. ஆய்வுக்கட்டுரைகள்
  3. விளக்கக் கட்டுரைகள்
  4. மறுப்புக் கட்டுரைகள்
  5. 200க்கும் மேற்பட்ட கவிதைகள்
  • வெளிவந்த நூல்கள்
  1. கனல் (பாநூல்)
  2. இனப்பற்று ( கட்டுரை நூல்)
  3. தமிழ் நெறி விளக்கம் ( பொழிவு நூல்)
  4. தேவையற்றது எழுத்துச் சீர் திருத்தம்
  5. தமிழர் வாழ்வறத்தில் தாலி

இவ்வாறாக உடலாலும் உள்ளத்தாலும் தமிழுக்காகவே வரலாறாய் வாழ்ந்த மெய்ப்பொருளறிஞர் பாவலர் ஐயா 29.04.1995 ஆம் ஆண்டு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவர் விட்டுச்சென்ற பணியினை மலேசிய நாட்டிலே இன்றளவும் ஆயிரம்-மாயிரம் உண்மை தொண்டர்களால் உயிரூட்டப்பெற்று வருவது மலேசியத் தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் பேறாகும்.

4 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நான் இது வரை அறிந்திருக்காத தகவல் ஐயா... படித்து தெரிந்து கொண்டேன்... அளித்தமைக்கு நன்றி...

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க
படித்து பயன் பெற்றமைக்கு மிக்க நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மலேசியாவில் தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுப்பதற்காகத் தமிழ் நெறிக் கழகம் என்ற பேரியக்கத்தைத் தோற்றுவித்த பாவலர் ஐயா அவர்களின் வரலாற்றை வலைப்பதிவில் ஏற்றி உலகத்திற்கே அறிவித்திருக்கும் தமிழ் ஆலயத்தின் பணி போற்றுதலுக்கு உரியது.

தமிழை முன்னெடுக்கும் தலைவர்கள் உலகத் தலைவர்கள் பட்டியலில் பாவலர் ஐயா அவர்களின் பெயரும் கண்டிப்பாக இடம்பெறும்.

பெயரில்லா சொன்னது…

மாமூலர் என்றால் என்ன பொருள் ஐயா? திருமூலருக்கும் மேன்மையாக காட்டவேண்டி அப்படி ஒரு அடைமொழியா?
-அழகன்