புதன், 26 நவம்பர், 2008

உலகத் தமிழினத் தலைவர் பிறந்தநாள்

இன்று உலகத் தமிழினத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளை ஈகம் செய்து போராடிவரும் தமிழின வேங்கை வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள். அதனை நினைவு கூரும் முகத்தான் இக்கட்டுரை இடம்பெறுகின்றது



பிரபாகரன், வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன். ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு, யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.

குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன், இன்று தொன்மையும் செழுமையும் வாய்ந்த பழம்பெரும் பாரம்பரியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன். தமிழன் அடிபட்டு,தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி,தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்த ஒரு காலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன், வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு, ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து, சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்தியப் பெருந்தலைவன். தனியொரு மனிதனாய் நின்று, தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி, தமிழர்களையே வியக்க வைத்த பெரும் வீரன்.

குலையாத கட்டுப்பாடும், வழுவாத நேர்மையும், தமிழன் வாழ்வு நெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும், இளகாத வீரமும், யாரும் நினையாத வகையாக, எவரும் மிகையாக நேசிக்கும், உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும், சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து, தளராத துணிவான, தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி, உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு மாபெரும் சாதனைப் படைத்த தளபதி.

தத்தமது தேசங்களிற்கும்,இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த, உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.! பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ்! என்றும் கிடையாத தலைநிமிர்வு!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்



நன்றி: தலைவரின் சிந்தனைகள்


கருத்துகள் இல்லை: