அண்மைய காலமாக அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதா, தாய்மொழியில் போதிப்பதா அல்லது இரு மொழிகளில் போதிப்பதா? என்ற சிக்கல் தோன்றியிருக்கிறது நாம் அறிந்ததே. இக்கட்டுரை அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதால் ஏற்படும் விளைவுகளை ஆராய்கிறது. படித்துப் பயன் பெறுக.
கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கி நமது அரசாங்கம் கணிதம்
மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முடிவு செய்த்து நாம் அனைவரும் அறிந்த்தே. 2003-ஆண்டு முதல் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்ற மாணவர்கள் இவ்வாண்டுதான் யு.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதினர். இதற்கிடையில் இவ்விரு பாடங்களையும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் பிரச்சாரங்களும் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கின்றன.ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது இவ்விரு பாடங்களின் தேர்ச்சி விகிதங்கள் மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
நம் நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட அரசுரிமைகள் உண்டு. நமக்கு இந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட அரசுரிமை தமிழ்ப்பள்ளிகள். இந்நாட்டில் உள்ள பிற இனங்கள் தங்கள் உரிமைகளையும் விழுமியங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் மறந்தும் விட்டுக் கொடுத்த்து கிடையாது. ஆனால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலத்தில் போதித்து வந்த அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் கற்பிக்க பிற இனத்தவர்கள் முனைப்புக் காட்டும் வேளையில் நாம் மட்டும் இவ்விடயத்தில் சரியாகச் சிந்தித்து செயல்படவில்லை என்பது உண்மை.இனி இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்ப்பள்ளிகளின் அடையாளம் மாறும்
அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ப்பள்ளிகள் தங்கள் உண்மையான அடையாளத்தை இழந்துவிடும் என்பது மட்டும் உறுதி. எனவே,தான் அரசாங்கம் இத்திட்டத்தை அறிமுகம் செய்த நாளிலிருந்து சீனப்பள்ளிகள் இவ்விரண்டு பாடங்களையும் இரண்டு மொழிகளிலும் கற்பித்து தங்கள் பண்பாட்டின் விழுமியங்களான சீனப்பள்ளிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நாட்டில் உள்ள மற்ற இன்ங்கள் மிகத் தெளிவாக சிந்திக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?
மாணவர்கள் புரிந்துக் கொள்வதற்குச் சிரமப்படுவர்
இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால், அதில் பயிலும் குழந்தைகள் அவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் போகும். இதனால் ஆரம்ப அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிவருவர். நிலைமை இவ்வாறு இருக்க நாட்டின் வளர்ச்சியில் எப்படி இவர்களால் பங்கெடுக்க முடியும்? இது நமது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்மொழியின் தரம் குறையும்
இதுவரையில் பயிற்று மொழியாக இருந்த தமிழ்மொழி பாட மொழியாக நிலை மாறும்.இதனால் தமிழ்மொழியின் தரம் குன்றும் என்பதில் ஐயமில்லை. எதிர்கால தலைமுறை தாய்மொழி உணர்வற்றவர்களாகவும் தமிழே தெரியாத தலைமுறையாகவும் உருவாவதற்கு வழி வகுத்துவிடும்.எனவேதான், சீனர்கள் அன்றே மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் தாய்மொழியினைப் பாதுகாத்திருக்கின்றனர். ஆனால், நாம் மட்டும் இன்றுவரை ஏமாந்த ஏமாளி சமுதாயமாக இருந்து வருகின்றோம்.
வேற்று இன ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு
அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் பொழுது இப்பாடங்களைப் போதிப்பதற்கு தமிழரல்லாத சீனரோ அல்லது மலாய்க்கார்ரோ நியமிக்கபடலாம். இது அரசாங்கத் துறையில் குறிப்பாக ஆசிரியர் துறையில் நமது வேலை வாய்ப்பினை வெகுவாக குறைத்துவிடும். இவர்களின் வருகையினால் நம் இன ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும். நமது உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு சூரிய வழிபாடு செய்வதில் என்ன பயன்?
அறிவியல் கணித கலைச்சொற்கள் அழிவு
ஆங்கில போதிக்கப்பட்டால் இன்றுவரை நமது மொழியறிஞர்களால் உருவாக்கப்பட ஆயிரமாயிரம் அறிவியல் கணித கலைச்சொற்கள் மறைந்து போகும் நிலை ஏற்படும்.இந்நிலை மொழி நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது வரலாற்று உண்மை. மலாக்கா செட்டிகள் இதற்கு நல்லதொரு சான்று.
வாணிப வர்த்தக வாய்ப்புகள் பாதிப்பு
இறுதியாக அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ச்சார்ந்த புத்தக நிறுவனங்களும் பெரும் இழப்புகளுக்கு இலக்காகிவிடும். தமிழ்க்கல்வியால் கிடைக்கின்ற வியாபார வாய்ப்புகளும் வர்த்தகங்களும் இனி எட்டாக் கனியாய் அமைந்துவிடும். ஆனால் தாய்மொழியில் போதிக்கப்பட்டால் இவ்வாய்ப்புகள் அனைத்தும் நமது இனத்தவருக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.இது நமது சமுதாய வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றும்.
தாய்மொழிக்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் நமது அடிப்படை உரிமைகள். இவ்விரண்டையும் கட்டிக் காக்கின்ற பெரும் பொறுப்பு மலேசியத் தமிழர்களான நமக்கு இருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.
வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்
எனவே, நமது பண்பாட்டின் விழுமியங்களான, மொழியின் முகவரிகளான தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற அரசியல் விறுப்பு வெறுப்புகளை மறந்து தமிழ்ப்பள்ளிகளைக் காத்திடல் வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை நம்மை எள்ளி நகைக்கும் இழிநிலைக்கு ஆளாகுவோம்.
அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
ஆகவே,நமது தமிழ்ப்பள்ளிகளைக் காத்திட அனைத்துத் தரபினரும் ஒன்றுபடுவோம்.
தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடு
தமிழ் நமது உயிர் தமிழ்ப்பள்ளி நமது உடல்
3 கருத்துகள்:
அருமையான கட்டுரையை வழங்கி இருக்கிறீர்கள்.
கணிதம் அறிவியல் பாடத்தைத் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கற்பிக்க முடிவு செய்வதால் வரப்போகும் விளைவுகளை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மொழியின நலத்தை முன்வைத்து தொலைநோக்குப் பார்வையோடு பார்க்க வேண்டிய இந்தச் சிக்கலை..
சிலர் பொருளியல் நோக்கோடும் குறுகிய கால நன்மையை முன்படுத்திடியும் சிந்திக்கின்றனர்.
முன்பு ஒருமுறை தவறான முடிவை செய்து நாம் இழந்தது போதும்..!
இப்போதாவது நல்ல முடிவை செய்து இழந்ததை மீட்போம்!
"சிலர் பொருளியல் நோக்கோடும் குறுகிய கால நன்மையை முன்படுத்திடியும் சிந்திக்கின்றனர்"
silar alla palar nanbare...
mozli nalam maddum alla Ina nalam karutha vendiya nilayil naam irukkirom..
inippu neerkaaranukku muthalil viralil pun varum pin viral pogum;kaal pogum kadaisiyil uyirum pogum..
athuvarai kaathiruthal adimuttal thanam..
ungkaL pathivu sariyana tharunaththil amainthullathu..
ithuvum uraikkavillaiyenil..
uppu pottu thinbavan illai enre kollalam.
nandri,
anpudan,
Mu.Selvakumar,
Karak
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற போராடுவோம். வாழ்க தமிழ்
கருத்துரையிடுக