வெள்ளி, 19 டிசம்பர், 2008

தமிழ் சீனப்பள்ளிகள் மூடப்படவேண்டும்- முக்கிரீசு மகாதீர் கருத்து

மணிமாறன் செராசு, கோலாலம்பூர்


ஐயம் : ஐயா, தமிழ் சீனப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று முக்கிரீசு மகாதீர் கூறியிருப்பது சரியா?


தெளிவு :


நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி இவ்வாறு இவர்கள் கூறிவிடமுடியாது. சிலரிடையே பரப்பரப்பான கருத்துகளை வழங்கி ஆதரவு தேட முற்படும் பேச்சுதான் அது. ஆனால், தமிழர்கள் நினைத்தால் மூடிவிட முடியும். அப்படித்தான் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. தோட்டப்புறத்திலுள்ள மக்கள் வெளியேறிய பின் தமிழ்ப்பள்ளிகளை வேறு இடங்களில் நிறுவ தவறிவிட்டனர். இன்னும் பலர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லையே! ஒருபக்கம் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும் மாறிவருவதை நீங்கள் உணர வேண்டும். வகுப்பறைப் பெயர்கள் தமிழில் இல்லை, அறிக்கைகள் தமிழில் இல்லை, அறிவியலும் கணிதமும் தமிழில் பயிற்றுவிக்கப்படவில்லை, தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய இசை, ஓவியம், கைவினைத்திறன் போன்ற பாடங்களும் சில பள்ளிகளில் தமிழில் பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, தமிழ்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளாக இருக்கின்றனவா? சிந்தித்துப் பாருங்கள். நாம் விரும்பும் வரை தமிழ்ப்பள்ளிகள் இருக்கும், இல்லையென்றால் படிப்படியாக நம்மவர் போக்காலேயே தமிழ்ப்பள்ளிகள் மாறலாம். ஏனெனில், தமிழர்களில் பலருக்குத் தமிழ்ப்பற்று கிடையாது. அக்கறையும் இல்லை. அயல்மொழி பண்பாட்டு விருப்பு நம்மவரை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. நாம் சரியாக சிந்தித்தல் வேண்டும்.


நன்றி : தமிழ்நெறி


4 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

தங்களின் கருத்துகள் முற்றிலும் உண்மை, சிந்தித்து செயல்பட வேண்டியவை..

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி. அன்பரே

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நம் மக்கள் சிந்திக்க சிரமப்படுகிறார்களே!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளின் அடையாளம் பறிபோகாமல் இருக்க தமிழர் சமுதாயம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அதற்கான முக்கிய கடமைகளில் சில:-

1.தமிழரின் குழந்தைகள் தமிழ்ப்பள்ளிக்கே செல்ல வேண்டும்.

2.அறிவியல் கணிதப் பாடங்கள் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட அரசை வலியுறுத்த வேண்டும்.

3.தலைமையாசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளைத் தமிழ்ப் பண்பாட்டு நடுவங்களாக உருவாக்க வேண்டும்.

4.ஆசிரியர்கள் தமிழ்மொழிப் பாட கற்றல் கற்பித்தலின் ஊடாக மொழி, இனப்பற்றை ஊட்ட வேண்டும்.

5.தமிழ் - தமிழர் அமைப்புகள் தமிழுணர்வுகொண்ட தலைமுறையை உருவாக்கிட வேண்டும்.

6.தமிழால் பிழைப்பு நடத்தும் அத்தனைப் பேரும் நெஞ்சில் நன்றியுணர்ச்சியோடு தமிழுக்குக் கடுகளவேனும் நன்மை செய்ய வேண்டும்.

செய்வார்களா?