
சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப்பெறுகிறது. பிற்கால ஆடல் இலக்கண நூல்களில் எண்ணற்ற ஆடல் வகைகள் குறிக்கப்பெறுகின்றன. பாரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார்.
தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள், சிகண்டியின் “இசை நுணுக்கம்” சியாமளேந்திர்ரின் “இந்திரகாளியம்” அறிவனாரின் “பஞ்ச மரபு” ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” என சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தென்னாட்டில் வழங்கி வந்த இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலாய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடல் கலை, கூத்து, குனிப்பு, என்றும் வழங்கி வந்தமையையும், அகக்கூத்து புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தமையையும் அறியலாம். இவற்றைத் தவிர்த்து, கடவுலர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை எனப் பதினொரு வகைக் கூத்துகளையும், மக்கள் வழக்கிலிருந்த குரவை, கலிநடம், நோக்கு ஆகிய கூத்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய நடனவகைகளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். தமிழ் நாட்டில் உருவான மற்றொரு வகை நாட்டியம் குறவஞ்சி ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வடிவம் குறவஞ்சியில் அழகுடன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்கே உரிய குறி சொல்லும் குறவன் , குறத்தி ( சிங்கன், சிங்கி) முதலிய பாத்திரங்கள் தோன்றும் இந்நாடகம் நகைச்சுவைக் கலையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆடல் கலை நம் முன்னோரின் ஊனோடும் உணர்வோடும் கலந்த கலையாகும்.
நன்றி: உமா பதிப்பகம்
3 கருத்துகள்:
நன்று பயனுள்ள பதிவு தொடர்ந்து தமிழர் மரபுகளை பதிவு செய்யவும் வாழ்த்துக்கள் அன்பரே.......
தங்கள் கருத்துக்கு நன்றி. இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.
தமிழர் கலைகள் மொத்தம் எத்தனை?
விளக்கவும்.
கலைகள் 64 என்று சொல்கிறார்களே எப்படி?
கருத்துரையிடுக