பண்டையத் தமிழர் தம் மொழியை இயல், இசை,நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவே, தமிழ், முத்தமிழ் ஆயிற்று. முத்தமிழுள் இசைத்தமிழ் ஒன்று. இசைத்தமிழ் ஒரு கலையாய்-நுண்கலையாய் இசைக்கலையாய் வளர்ந்தது.
இசைக் கலை ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; செவி வழி துய்க்கும் கலை. குழல் இசை, பாடல் இசை போன்றவை இனியவை என்றும், பூனை கத்தல், காக்கை கரைதல் போன்றவை சாதாரணமானவை என்றும், புலியின் உறுமல், இடியின் ஓசை போன்றவை கடுமையானவை எனவும் ஒலியை மூவகைப்படுத்துவர். இனிய ஒலிகள் தனித்து இனிப்பவை;இணைந்து இனிப்பவை என இருவகைப்படும். தனித்து ஒருவர் பாடுதல், குழல் மட்டும் இசைத்தல் போன்றவை தனித்து இனிப்பவை. குரல், குழல், யாழ், முழவு, தாளம் ஆகியவை கூட்டாய்ச் சேர்ந்து இசைத்தல் இணைந்து இனிப்பானவை.
இனிய ஒலி செவி வழி புகுந்து, இதய நாடிகளைத் தழுவி உயிரினங்களை இசையவும் பொருந்தவும் வைக்கின்ற பொழுது, அது இசை எனும் பெயரைப் பெறுகின்றது. இசை எனும் சொல் இயைவிப்பது-பொருந்தச் செய்வது, தன்வயப்படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசை வயப்பட்டு நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பயிர் வளர்ந்து நிறைந்த பயன் விளையவும், பசு மிகுந்த பால் சுரக்கவும் தூண்டும் அது. இசை உயிரினங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்த்து உய்விக்கும் தன்மையைப் பெற்றது.
பண்டைய தமிழர் வளர்த்த நுண்கலைகளுள் இசைக்கலை முதன்மையானது; தலை சிறந்தது. முற்காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன. பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்றவை குறிப்பிடத்தக்கவனவையாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் பல்வகைப் பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்கின்றது.
தொல்காப்பியர் நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து அவற்றுக்குரிய கருபொருளைக் கூறும் பொழுது, யாழும் யாழின் பகுதியும் பற்றிக் குறித்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், பதிக உரையில் ஐந்து நிலங்களுக்கும் அவற்றுக்குரிய ஐந்து பெரும்பண்களையும் சுட்டி விரித்துள்ளார். இவை தமிழிசையின் தொன்மையைத் தெள்ளத் தெளிவாய் விளக்குகின்றன.இளங்கோவடிகள் முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், எனும் பெரும்பண்களுக்குரிய ஏழ் நரம்புகளைப் பல்வேறு காதைகளில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தமிழர் வளர்த்த மற்றெந்த கலைகளைக் காட்டிலும் இசைக்கலையே மரபு மாறாது தொடர்ந்தும் வழிவழியாக வளர்ந்து வரும் நுண்னிய அருங்கலையாகும்
- நன்றி: உமா பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக