சனி, 21 பிப்ரவரி, 2009

போர்க்கலை

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.

போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.


இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.

போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.



தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை
  • நன்றி:- உமா பதிப்பகம்

4 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நல்ல கட்டுரை மேலும் தொடரவும்...

ஆதவன் சொன்னது…

தமிழனின் போர்க்கலையை புத்தகத்தில் மட்டுமே படித்துவந்த நாம் இப்போது ஈழத்தில் அதனை நேரடியாகக் காண முடிகிறது.

சிறிலங்கா கொலைகார இராணுவம் இந்தியக் குள்ளநரி காங்கிரசு அரசுடன் சேர்ந்துகொண்டு ஈழத்தமிழனைக் கொன்று ஒழிக்கின்றது.

அனைத்துலகப் போர் விதிகளையும் மீறி அப்பாவிப் பொதுமக்கள் மண்டையிலேயே குண்டு போடுகிறது.

பெண்கள், குழந்தைகள், முதியோர் என எந்த வேறுபாடும் பாராமல் கொலைவெறித் தாக்குதல் நடாத்திக் கொண்டிருக்கிறது.

இந்த இக்கட்டு நிறைந்த சூழலிலும், தமிழனின்.. ஈழப்போராளித் தமிழனின் போர்த்திறம் உலகையே வியக்க.. வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

புலிகள் சிங்களப் பொதுமக்கள் மீது குண்டுபோடுவது இல்லை..!

புலிகள் சிங்களப் பெண்களின் கற்பைச் சூறையாடுவது இல்லை..!

புளிகள் சிங்கள இளம்பெண்களின் முலைகளை அறுப்பது இல்லை..!

புளிகள் சிங்களக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் எறிகணை வீசுவது இல்லை..!

மாறாக, முக்கிய பொருளியல் தலங்கள், இராணுவ இலக்குகள், கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என குறிபார்த்து.. பொதுமக்களுக்குச் சேதமில்லாமல் தாக்குதல் நடாத்தும் போர்த்திறம் கண்டு நாம் பெருமைபடலாம்..!

நீதி.. உண்மை.. அறம்.. இறைமை.. இதுவெல்லாம் உலகில் இன்னும் இருக்கிறது என்றால் புலிகள் கண்டிப்பாக வெல்வார்கள்..!

தக்க நேரத்தில் நல்ல கட்டுரையை வழங்கிய கோவி.மதிவரனார் நற்பணி வாழ்க!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஐயா
வணக்கம்
தங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தமிழர் மரபுக்கலைகளை மிகவும் நன்றாகப் பதிவு செய்து வருகிறீர்கள். அதிலும் அப்பதிவுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் அழகாக கட்டுரையின் கருத்துக்களை எடுத்தியம்புவனவாக உள்ளன.வாழ்த்துக்கள்.........

குமரன் மாரிமுத்து சொன்னது…

வணக்கம் தமிழண்ணே....

சிறப்பான தெளிவான கட்டுரை.

அறப்போர் ஒழிந்து போனது; அறம் ஏட்டில் மட்டுமே உறங்குகின்றது.