ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

புத்திலக்கியங்களும் புது படைப்பாளிகளும்

இன்றைய நவீன உலகில் பல புத்தம் புது எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். எழுத்துலகில் காலெடுத்து வைத்திருக்கும் அவர்கள் இனி இந்த மொழிக்கும் பிறந்த இந்த இனத்திற்கும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன்றைய எழுத்தாளர்களில் பலர் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எதையெதையோ எழுதித் தொலைக்கின்றனர். அதற்குப் பாராட்டும் பரிசும் கிடைக்கின்றது. இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் இலக்கியம் . மாறாக எவ்வித இலக்கும் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதுவது எல்லாம் படைப்புகள் ஆகா. நமது மலேசிய புத்திலக்கியவாதிகள் சிலரின் படைப்பினைத் தங்கள் பார்வைக்குக் கொடுக்கின்றேன். அதில் என்ன பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பதனை ஆராய வேண்டுகின்றேன். எழுதுவதை யாரும் குறைச்சொல்லவில்லை. ஆனால், என்ன எழுதுகின்றோம், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்கு ஆராந்தறிதல் வேண்டும். எனவே, தான் பாவேந்தர் “இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என்றார்.

நமது மொழி மிகத் தொன்மையான மொழி, நமது பண்பாடு மிக உயரிய பண்பாடு. அவற்றையெல்லாம் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கின்ற பொறுப்பு இலக்கிவாணர்களான புத்திலக்கிய வாணர்களுக்கு அதிகம் உண்டு.

ஆனால், எவற்றையெல்லாம் எழுதக்கூடாதோ அவற்றையெல்லாம் எழுதுவதைதான் நாகரீகம், புத்திலக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.



காட்டு 1


தூசிகள் படர, அந்த முதல் போஸ்டரில் நின்றிருந்தது ஒரு நிர்வாணப் பெண். சிறு அதிர்வுக்குள்ளிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது, யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.


காட்டு 2

மீண்டும் ஒரு வசந்தகாலம் மலரும்
என்கிற செய்தியைக் கொண்டு வந்து
சேர்த்தவன் ஆண்குறியின் வரலாற்று பலவீனம்


இம்மாதிரியான கதைகளும் இலக்கியங்களும் நமது வாழ்க்கைக்கு எவ்வகையில் பயனைத் தருகின்றன. யாரையும் எழுத வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால், நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத, பண்பாட்டை சீர்குழைக்கின்ற தேவையற்ற சொல்லாடல்களைத் தவிர்தல் நலம் என்கிறோம். படைப்பாளியாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய மொழிக்கொலைக்கும் பாலியல் உணர்வுகளையும் தூண்டும் அளவிற்கு எழுதுதல் கூடாது.

நவீன இலக்கியத்திலும் பண்பாட்டையும் மொழியையும் வளர்க்கின்ற பணியினை இவர்கள் முன்னெடுத்தால் சிறப்பு. ஆங்கிலேயருக்கென்று ஒரு பண்பாடு உண்டு, மொழி உண்டு, நாகரீகம் உண்டு. ஆனால், அவற்றை விட உலக இனங்களுக்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த நமக்கென்று ஒரு தனி பண்பாடும் வரலாறு உண்டு.
எனவே தான் பாரதிதாசன் சொன்னார்

ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுறச் வைப்பதுவும் ஏடே யாகும்.

அதையும் மீறி நாங்கள் எப்படியும் எழுதுவோம் எதை வேண்டுமானாலும் எழுதுவோம் என்று கொக்கரிப்பவர்கள் தலைக்கணத்தோடு இலக்கியம் படைப்பவர்கள் என்று சொல்வதை விட வேறொன்றுமில்லை.

வெறும் பரிசுக்கும் புகழுக்கும் பாராட்டுக்கும் மேடைக்குமாக கதை எழுதுபவர்கள் இவர்கள் என்றால் முற்றிலும் தகும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு அதில் மலிவு விளம்பரத்தை தேடிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள். தற்கால நடப்புகளையும் நிகழ்கால நிதர்சனங்களையும் இலக்கியமாகப் பதிவாக்குகிறோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு எழுதுவதற்குக் கிடைத்திருப்பதும் கண்ணுக்குத் தெரிவதும் வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான்.

பாவம் இவர்களைக் குற்றம் சொல்லி என்ன இருக்கிறது. விடலைப் பயல்கள் பாலியலை விட்டால் வேறு எதை அறிவார்கள்? பொடியள்களுக்கு இப்போதைக்குப் பாலியல் பரவசத்தை விட்டால் வேறு எதற்கு அலைவார்கள்? என்று நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இளமை வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக கண்மண் தெரியாமல் தலைதெறிக்க ஓடும் இவர்களின் தலையில் குட்டுவைத்து சரியான வழியைக் காட்டுவது சமுதாயப் பொறுப்புணர்வும் மொழிக் காப்புணர்வும் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆகவே, புத்திலக்கியவாணர் அன்பர்களே, இதனைச் சற்று சிந்தியுங்கள்.

நாயும் வயிற்றை வளர்க்கும்;
வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாடலாமோ?

போய் உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ?

எம்தமிழை அறிவீரோ??
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட் கெல்லாம் ?

வெளியினில் சொல்வதெனில்
உம்நிலை வெட்கக்கேடன்றோ ? நீவீர்

கிளி போலச் சொல்வதன்றித்
தமிழ் நூல்கள் ஆராய்ந்து
கிழித்திட்டீரோ.

4 கருத்துகள்:

தமிழரண் சொன்னது…

//வெறும் பரிசுக்கும் புகழுக்கும் பாராட்டுக்கும் மேடைக்குமாக கதை எழுதுபவர்கள் இவர்கள் என்றால் முற்றிலும் தகும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு அதில் மலிவு விளம்பரத்தை தேடிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள்//.

உண்மை! உண்மை! இது முற்றிலும் உண்மை. வெறும் மலிவு விளம்பரத்தைத் தேடிக்கொள்வதற்காக தமிழையும், த்மிழ் இனத்தையும், தமிழ் பண்பாட்டையும் சீர்குலைக்கும் வேலையைப் புத்திலக்கியவாணர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தங்களின் பதிவு சிறப்பு.

நன்றி.

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றியன். தொடர்ந்து எழுதவும்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பு கோவி.மதிவரன்,

நல்ல பதிவை வழங்கியிருக்கிறீர்கள். உங்களின் மொழியின நலச் சிந்தனையை மிகவும் மெச்சுகின்றேன்.

//இவர்களின் தலையில் குட்டுவைத்து சரியான வழியைக் காட்டுவது சமுதாயப் பொறுப்புணர்வும் மொழிக் காப்புணர்வும் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.//

இதனைத்தான் அவர்கள் அறவே விரும்புவது கிடையாது. இப்படியான மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் அவர்களுக்கு வேப்பங்காய் போன்று!

ஆனால், பச்சையாகப் புளுகுவார்கள் பாருங்கள்.. "இப்படிப்பட்ட படைப்பைதான் வாசகர்கள் விரும்புகிறார்கள்" என்று!!

சினிமா வியாபாரிகள் தொடங்கி, பத்திரிகைகாரர்கள், வார மாத இதழாளர்கள், சிற்றிதழ்காரர்கள், நவினப் படைப்பாளிகள் என காசுக்காகக் கண்ணறாவிகளைக் கட்டவிழ்த்துவிடும் எல்லாரும் சொல்லும் சால்சாப்பு இது!! அவர்கள் அனைவரின் பசபசப்பு இது!! பக்கா பத்தாம்பசலித்தனம் இது!!

மக்கள் மீதும், இலக்கியத்தின் மீதும் பழியைப் போட்டுவிட்டு இவர்கள் கொட்டமடிக்கிறார்கள் என்பதே பட்டவர்த்தமான உண்மை!!

உங்கள் நற்பணி தொடரட்டும்.

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க, தமிழ் நலம் சூழ்க

இன்று எல்லாரும் தங்களைச் சிறந்த எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நினைப்புதான். எத்தனை படைப்புகளைக் கொடுத்திருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. எழுதுபவை எல்லாம் இலக்கியம் ஆகா. படைப்புகளின் வழி சமுதாயமும் பிறந்த இந்த இனமும் எவ்வகையில் நன்மையடைந்திருக்கின்றன என்பது மிக முக்கியம்.

பாவேந்தரைக் கேளுங்கள்

தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெழுந்தே

உயர் தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெல்லாம்
உன்றன் வெற்றி

ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறை தோறும்- துறைதோறும்
துடித்தெழுந்தே

இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே