செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்


வாழ்க தமிழ். வளர்க தமிழினம்


பொங்கல் , தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்



உலக இனங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய பழம்பெரும் பேரினமான நமது தமிழினத்திற்கே உரித்தான பொன்னாள். அது நம் பண்பாட்டின் அடையாள நாள். நமக்கென்று ஒரு மொழி உண்டு, நமக்கென்று ஒரு பண்பாடு உண்டு, நமக்கென்று ஒரு வரலாறு உண்டு என்ற கருத்தைச் சொல்ல வந்த பொன்னாள் பொங்கல் பெருநாள்.


மதங்களைக் கடந்து, இனத்தைக் கடந்து, சாதியைக் கடந்து ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் உயிரிலும் கலந்து உணர்வாய் மிளிர்வது. அவ்வகையில் பொங்கல் திருநாள் உழவர் பெருநாளாக மருதநிலத் தமிழர்களின் பொன்னாளாக இருந்து வருகின்றது. இன்றைய நாளில் இயற்கைக்கு நன்றி கூறும் கூறுவதோடு உழவுத் தொழிலுக்கு உயிர்ப்பாக விளங்கிய அனைத்து உயிர்களுக்கும் நன்றி கூறும் விழாவாக இந்நாள் அமைகின்றது.



தைத்திங்கள் அன்று காலைக் கதிரவன் தெற்கில் இருந்து பூமத்திய ரேகையைத் தாண்டி பூமியைக் காணும் காலமே நாம் பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் காலமாகும். தைத்திங்கள் குளிர் நிறைந்த காலம். அறுவடை மிகுந்த காலமாகும். பொருள் வரவுற்ற காலமாகும்.எனவே தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தொடர் பழந்தமிழர் வாழ்வில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.



ஆகவே, உலகத்தமிழர்களுக்கு பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் உலகத் தமிழர்கள் யாவரும் மொழியால் இனத்தால் சமயத்தால் தமிழர் என்ற நிலையில் ஒன்றுபட்டு நிற்குமாறு அன்போடு வேண்டுகின்றேன். தொகையில் குறைந்த தமிழன் வாழ்வியல், சமூகவியல், அரசியலில் உயர்ந்தவனாகத் திகழ வேண்டுகின்றேன். மிக நீண்ட நெடிய இலட்சியப் பாதையில் நாம் பயனப்படும் காலம் இது.



உலகத் தமிழர்கள் மிக கனமான வரலாற்றுப் பாதையைச் சுமந்து வந்திருந்தாலும் தமிழருக்கென்று தனி நாடு மலரும் காலம் வரலாற்றில் நிச்சயம் உருவாகும். இக்கனவை நனவாக்க உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டே யாதல் வேண்டும்.


மலர்ந்தொளிரும் தமிழ்ப்புத்தாண்டில் உலகத் தமிழர்களின் உன்னத வேட்கையான தனி நாடு கோரிக்கை வெற்றி பெற உறுதுணையாய் நின்று உழைப்போம். புதிய ஆண்டில் புதிய திருப்பம் காண அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம்.

வாழ்க தமிழர் வெல்க தமிழினம்

புதன், 7 அக்டோபர், 2009

திருக்குறள் காட்டும் ஒழுக்கம்




திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது, தமிழர்களின் வழிகாட்டி நூல். திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ) அவர்களுள் ஒருவர் ஆவார்.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளில் உள்ள ‘உயிரினும்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம் தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்

விழுப்பம் என்பதற்குக் குணம்,நலன்,புகழ்,பெருமை,உயர்வு என்ற பல பொருள் உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ அவர்கள்.

‘உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை’ என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதைத்தான் ‘உயிரினும்’ எனும் ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ விளக்கம் தருகின்றார்.

உயிருடைய எவரும் உயர்ந்தவராக்க் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதைத்தான் திருக்குறளின் ‘உயிரினும்’ என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும் அவர் விளக்குகிறார்.

மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டால் அந்த நிலையிலும் ‘மானத்தை இழவாதே’ மாறாக, உயிரை இழந்து விடு’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன் ஒழுக்கத்தை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை. அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் ‘உயிரினும்’ என்ற அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்.

நன்றி:-
-திருக்குறள் புதைப்பொருள்
[எடுத்தாளப்பட்டது]

புதன், 23 செப்டம்பர், 2009

தமிழர் வாணிகம்

தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கின்றபடியால் தமிழர் இயற்கையாகவே அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்வதில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தனர். மேலும், கடற்கரை நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால், கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.


கடல் வாணிகம் செய்யும் தமிழர்கள் மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். இவ்வாறு கொற்கை, தொண்டி, பூம்புகார் போன்ற தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து மரக்கலங்களில் புறப்பட்டுச் சென்று கிழக்குக் கடல் ஓரமாகவே நெல்லூர், கலிங்கம் போன்ற பட்டினங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறு நடைப்பெற்ற வாணிகம் கரையோர வாணிகம் எனப்படும்.



தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேசியத் தீவுகளுக்கும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்தனர். இந்தத் தீவுகளைத் தமிழர்கள் “சாவகம்” என்று அழைத்தார்கள். சாவக நாட்டின் வாசனைப் பொருள்களையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துணிகளையும் வாங்கி வந்து தமிழ் நாட்டில் இவர்கள் விற்றனர். இவ்வாறு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்று வாணிகம் நடுக்கடல் வாணிகம் என்றழைக்கப்பட்டது.


இவ்வாறு வாணிக நிமித்தமாகக் கடலில் செல்லுகையில் அவர்களின் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை மாறிப் போகும்போது கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, நீரில் மூழ்கியதும் உண்டு. நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் துன்பம் நேர்ந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வணிகர்கள் மரக்கலங்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாகவே ஏற்படுகின்ற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வணிகருக்குக் கடற்கொள்ளைக்காரர்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்கள் நேரிட்டன. எனவே, இவர்கள் பாதுகாப்புக் கருதி கூட்டங்கூட்டமாகச் சென்றதோடு, வில் வீர்ர்களையும் உடன் அழைத்துச் சென்றனர்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர் வாக்கு. வணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழர்கள் அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்புக் கொண்டு பொருள் ஈட்டினர். அவர்களைச் சேர சோழ பாண்டிய மன்னர்களும் ஊக்கினர். குறிப்பாக, கடல் வாணிகத்தின் வழி பெருஞ்செல்வத்தை ஈட்டினவர்களுக்குப் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனர்.


நன்றி:- பழங்காலத் தமிழர் வாணிகம்

வியாழன், 3 செப்டம்பர், 2009

தனித்தமிழ் அரிமா இர.ந.வீரப்பனார்

இன்று உலகம் சுற்றிய மலையகத் தமிழர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார் அவர்களின் நினைவு நாள். தமிழே காற்று; தமிழர் நலமே மூச்சு என முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றியிருக்கின்ற தகவிலார். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது


இப்புவிப் பந்தில் தமிழர் வாழ்கின்ற நிலம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தம் காலடி பதித்தவர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்து உலகாள அவ்வமைப்பிற்கு நூற்றாண்டு காலம் தலைவராக இருந்தவர் ஐயா.வீரப்பனார்.


தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின மீட்சி என்றெல்லாம் தமிழியச் சிந்தனையுடன் தம் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட பேராசிரியர் பிறந்தது ஒரு நாடு, வாழ்ந்தது ஒருநாடு, மறைந்தது ஒரு நாடு. மலையகத் தமிழர் என்று இர.ந.வீரப்பனாரைக் குறிப்பிட்டால் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இலங்கைத் தமிழர் என்று பொருள்படும்;அழகிய மலைகளைக் கொண்ட மலேசியத் தமிழர் என்று பொருள்படும். கண்டி மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த நுவரெலியாவில் பிறந்த இவர் பின்னாளில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தார். ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதல் தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.


இரத்தினம் அம்மாள்- நடேசன் இணையருக்கு 1930, ஆகத்து 6-ஆம் நாள் தோன்றிய இவர் ,தமிழகம், திண்டிவனம் எண்டியூருக்கு தம் பெற்றோருடன் குடி பெயர்ந்து அதன் பின் மலேசியாவிற்கு வந்தார். இங்கு கல்வியைத் தொடர்ந்து ஆசிரியர் பணியை மேற்கொண்டார். 1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை ச்சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். ஆயினும் 1990 வரி கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளி பள்ளியில் தமிழ்க் கற்பித்த இவர் 1990 உடன் தன் ஆசிரியப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


1951-ஆம் ஆண்டு, நாகம்மாள் என்னும் நல்லாளை மணந்த வீரப்பனாரின் திருமேனி, பொன்னி, அருணன், முல்லை ஆகிய நான்மக்களும் குடும்ப வாழ்வை அமைத்துக் கொண்டனர். ஏறக்குறைய 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் வாழ்ந்த தமிழர்களுடன் தொடர்புக் கொண்டு தமிழையும் தமிழர்தம் பண்பாட்டையும் இடையறாது பற்றியொழுக வேண்டிய அவசியம் பற்றி அந்தந்த நாட்டு பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தியும் வந்தார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள பேராசிரியர், கடைசியாக எழுதிய நூல் “உலகத் தமிழர்”- பாகம் 3 என்பதாகும். அந்த நூல் வெளியீட்டு விழாவில் கூட அவரால் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு இர,ந.வீரப்பனாருக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இலக்கியத் தேனீ என்றழைப்பதைவிட தமிழ்ப்போராளி என்று இவரைக் குறிப்பிடலாம். படைக்கருவி ஏந்தாமல் தாளையும் கோலையும் துணை கொண்டு வடித்த தமிழியச் சிந்தனைகளையே கருவியாகக் கொண்டவர் பேராசிரியர் அவர்கள்.

‘வியட்நாமிற்கு’ பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவருக்கு ஈடேறாமல் போனது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏழாவது மாநாட்டை வெள்ளி விழா மாநாடாக சென்னையில் நடத்திவிட்டு சொந்த கிராமத்திற்குப் போன வீரப்பனார், அதற்கு முன்பே மிகவும் உடல் நலிவுற்றிருந்த நிலையில் மேலும் பாதிப்புற்று 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் இயற்கை எய்தினார். ஆனாலும், அவர் வடித்துத் தந்த தேனொத்த தமிழியச் சிந்தனைகள் உலகத் தமிழர்தம் சிந்தையை ஆளும் எந்நாளும்! பேராசிரியரைப் பற்றி உலக அளவில் ஏராளமானோர் நூல்களைப் புனைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தோர் தமிழகப் பாவலர் கதிர் முத்தையனார், இலண்டன் சுதேரா முருகையன் ஆகியோர் ஆவர்.

புதிய சிந்தனையும் மாறுபட்ட பார்வையும் கொண்டிருந்த இர.ந.வீரப்பனாரின் நெஞ்சத்தில், எளியோருக்கு இரங்கும் கனிவு’ எப்பொழுதும் நிறைந்திருக்கும்....


போற்றிடுந் தமிழ் இலக்கியமாக் கழகம்
ஏற்றிய இரா.ந.வீரப்பத் தமிழன்
பயனிடும் தனித்தமிழ் பாரெல்லாம் பரவ
நயனிடும் தொண்டால் நற்பணி செய்வோன்'

பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்
பாவணர் தமிழ் மன்றம், மலேசியா

நன்றி :- நக்கீரன் - மலேசிய நண்பன்


சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழன் ரொம்ப நல்லவன்


நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை
நட்புக்கலம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து
தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை
கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன்
கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக
தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து
அவனிடம் கைத்தட்டல் பெறுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத்
தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில்
தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
தமிழன் ரொம்ப நல்லவன்


தன் பண்பாடு இருக்க அடுத்தவன்
பண்பாட்டைப் பின்பற்றி கோட்டு சூட்டு போட்டு
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

அடுத்த இனத்தான் தன் பெண்ணை விரும்பினால் மறுப்பு
சொல்லாமல் மணமுடித்து வைப்பான், தன் இனத்தான் விரும்பினால்
சாதி பேதம் பார்த்து பிரித்து சாதி காப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

சொந்த இனத்தையே வெட்டிக் கொன்று அழித்து
தன் இனப்பெருக்கத்தைக் குறைத்து மாற்று
இனத்தான் சிறப்பாக வாழ வழி வகுப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தனக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது
தன்னடக்கத்துடன் உரக்கப் பேசாமல் அமைதி
காத்து விசுவாசம் காட்டுவதில்
தமிழன் ரொம்ப நல்லவன்

மொத்தத்தில் தன் இன,மொழி, பண்பாடு
வளர்ச்சியை விட பிற இன, மொழி பண்பாடு
வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதில்
தமிழன் ரொம்ப ரொம்ப நல்லவன்

நன்றி:- திருமதி சந்திரா குப்பன் காப்பார்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தமிழும் இசையும்

பண்பட்ட எல்லா மொழிகளிலும் இசை வாழ்கிறது. ஆனால், எந்த மொழியிலும் இதை முக்கியக் கூறாகச் சொல்வதில்லை; சிறப்பித்தும் போற்றுவதில்லை. ஆனால், தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரிவே விளங்குகின்றது. சுதி,பாட்டு,பண்,தாளம், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகியவை இசைந்தால்தான் அதை இசையென்று தமிழர்கள் கூறுவர். அப்படி இல்லையென்றால் அதன் பெயர் “இரைச்சல்” என்றாகிவிடும். இசைக்குப் “புகழ்” என்ற பெயரும் உண்டு என்பதைத் திருவள்ளுவம் இயம்புகின்றது.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

எனும் திருக்குறள் இதனை மெய்ப்பிக்கும்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பண்டைய தமிழர்கள் இசையை எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலியவை குறிப்பிடத் தக்கன.இந்நூல்களில் உள்ள பத்திப் பாடல்கள் தமிழ்த்தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வலைக்காப்புப்பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப்பாட்டு, என்று தமிழரின் வாழ்வில் இறப்பு முதல் பிறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும் இசையோடு தமிழர்கள்கள் வாழ்ந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.


இசை,இனிய கலை என்பதால் அது பயிரையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது;மேலும் இசை மருந்தாகவும் பயன்படுகிறது.மனிதர்கள் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும் இசை பல வழிகளில் துணைபுரிகிறது. மேலைநாட்டுத் தத்துவ மேதையான “சேக்ஸ்பியர்”இசைக்குக் கட்டுபடாதவன் எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக் கூடியவன் என்று கூறுகின்றார். இதனால்தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசைச் சான்றோர்கள் இயம்புகின்றனர்.

நன்றி :- தமிழிசை
எடுத்தாளப்பட்டது

புதன், 12 ஆகஸ்ட், 2009

தாய்மொழியும் தாய்க்குலமும்

தாய் பேசும் மொழியே தம் மகவுக்கு அறிமுகமாகும் முதன்மொழியாகும் . அதுவே, தாய்மொழியாகவும் அமைகின்றது. எனவே, எம்மொழி பயின்றாலும் தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டியது தாய்மார்களின் தலையாய பொறுப்பாகும். நம் தமிழ்த்தாய்மார்கள், தம் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவது போலவே தாய்மொழியையும் மறவாது ஊட்டும் மொழிப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். அமுதூட்டும் அன்னை, அமிழ்தினினும் இனிய தமிழையும் சேர்த்து ஊட்டவேண்டிய கடமை தாய்க்கு உண்டு. அஃது அவளின் பிறவிப் பெருங்கடன் என்பதை மறுக்கலாகாது.


நாடி நரம்புக்குள் நுழைந்து, குருதியில் கலந்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஆற்றல் தமிழுக்கு உண்டு! அந்த ஆற்றலைப் பிள்ளைகளின் மனதில் ஆழப்பதியச் செய்யவல்லது இசைத்தமிழாகும். இசைத்தமிழ் நமக்குக் கிடைத்தற்கரிய; அருஞ்சாதனைக்குரிய கலையாகும். இசைக்கு மயங்காத சிசு ஏது? “தமிழே! தேனே! கண்ணே தாலேலோ” என்ற ஆராரோ பாடல் கேட்டு, குழந்தை அயர்ந்து உறங்காதோ? இன்றைய தாய்மார்கள் பலருக்குத் தாலாட்டுப் பாடவே தெரியாது என்கின்றனர். ஏழாவது வயதில் கல்வி கற்க பள்ளி செல்லுமுன் ஏழ்ப்பிறவிக்கும் தொடரக்கூடிய சொந்தமாகத் தாய்மொழியின் அவசியத்தை உணரும் வகை செய்தல் ஈன்றவளின் எண்ணருங்கடமையாகும்.! செம்பவள வாய் திறந்து “அம்மா” என்று மழலை பேசத் தொடங்கும்போதே “மம்மி” என மொழிமாற்றம் செய்வதை ஈனச்செயலெனக் கருத வேண்டும் ஈன்றவள்! பள்ளிச் செல்லத் துவங்கியதும் வேற்று மொழிகள் பேசத் தொடங்கும் பாலகனுக்குத் தாய்மொழியறிவின் அவசியத்தையும் தகைவுடன் உணர்த்த வேண்டும் தாய்குலம்.

தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே ஒளவையை, பாரதியை, வள்ளுவரை, கம்பரை, இளங்கோவை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். கூடவே, பாரதிதாசனையும் திரு.வி.க வையும் நினைவுபடுத்தி வைக்க வேண்டும். அவர்தம் தேனூறும் தமிழைச் சுவைக்கச் செய்ய வேண்டும். “தமிழ் எங்கள் தாய்மொழி” என்று பெருமை கொள்ளும் நாம், நமது பிள்ளைச் செல்வங்களும் அத்தகைய பெருமையும் பூரிப்பும் அடையும் வண்ணம் தாய்மொழியின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

சிலர் தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். தமிழ் எங்கள் தாய்மொழி என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. படிப்பறியாப் பாமர மக்கள், ஏழை எளியவர்கள் போன்றவர்கள் மட்டுமே பேசும் மொழியென தமிழைப் புறக்கணிக்கும் பேதையர்கள் அவர்கள்! இத்தகையொர் நம் மத்தியில் உலாவரக் காரணமாக அமைந்தவை பெற்றோரின் அறியாமையும் வேற்று மொழிமீது கொண்ட மோகமும்தாமே? நஞ்சுக்கும் ஈடான இந்த எண்ண விதைகளைப் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் தீவிவிட பெற்றோர்களே- அதுவும் தாயே- காரணமாக இருந்துவிடுவது கொடுமையல்லவா? தாயானவள் எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றுப் பார்புகழ பெரும் பதவியில் வீற்றிருந்தாலும் தன் சேயோடு தமிழ்மொழியில் பேசுவதைப் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டால்தான் இந்நிலையை மாற்றியமைக்க இயலும்.

கள்ளங்கபடமற்ற பால்போலத் தெளிந்த நெஞ்சுடன் தாயையே தமது உலகமும் வாழ்வுமாக்க் கருதி தாயிடமே அடைக்கலம் புகுபவர்கள் பிள்ளைகள். அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்குவது மட்டுமல்லாது தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் வளர்த்து ஆளாக்க வேண்டுவது அன்னையர்தம் அரும்பெரும் பணியல்லவா?

நன்றி:-
ந.மகேஸ்வரி
ஆறாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு