வியாழன், 26 மார்ச், 2009

மகளிர் விளையாடல் கலை



பழந்தமிழிலக்கியங்களில் அம்மாணை, பந்து, சாழல், ஈசல் போன்ற விளையாட்டுகளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இவை மகளிர்கே உரிய விளையாட்டுகள். பண்டையத் தமிழர்கள் ஆடவர்க் கென்றும் மகளிர்க்கென்றும், சிறுவர்களுக்கென்றும் முதியோர்களுக்கென்றும் இருபாலருக்கும் உரியதென்றும் பல்வகை விளையாடல்களைப் பகுத்து வைத்திருந்தனர். பெரும்பான்மையான விளையாட்டுகள் பெண்களுக்குரியவனவாகவே காணப்பெறுகின்றன. அவை இயற்கையோடு இயைந்தவனவாயும் அமைந்துள்ளன.

ஆடிப்பாடிக் கொண்டே குறி சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு கலை. இதனை வெறியாட்டு என்பர். இந்த வெறியாட்டு மகளிரை அணங்குறு மகளிர்(குறிஞ்சி:175).கானவர் வியப்ப... நடுவூர் மன்றத்தடி பெயர்த்தாடி’ (சிலம்பு:வேட்டுவரி) என்பர்.

செம்மூதாயாட்டு என்பது ஒரு வகை விளையாட்டு. செம்மூதாய் என்பது தம்பலப்பூச்சி ஆகும். மழைபெய்து ஓய்ந்த பின் தரையில் ஓடித்திரிவது இது. இன்று இதனைப் பட்டுப்பூச்சி என்று அழைக்கின்றனர். இப்பூச்சிகளின் பின்னால் சென்று அவற்றின் அழகினையும் போக்கினையும் கவனித்து அவற்றைத் தேடிப்பிடித்து குவித்து வைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு இது.




வண்டு ஓட்டுதல் இன்னொரு விளையாட்டு. வண்டுகள் பின் ஓடி எந்தப் பூவில் அதிகமாய் அவை மொய்க்கின்றன என அறிந்து, அந்தப் பூவில் தேன் மிகுந்திருக்கும் என்பதை அறிவர். அந்த வண்டுகளை விரட்டிவிட்டுப் பூந்தேனைச் சுவைப்பது இவ்விளையாட்டு. தொண்ணூற்றொன்பது வகையான வண்ண மலர்களைத் தேடிக் கொய்து தலைவியும் தோழியரும் அவற்றைச் சூடி ஆடி மகிழும் விளையாட்டைப்பற்றி புலவர் கபிலர் தம் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார். இதனைப் போதாட்டு என்பர்.



‘இந்திரையோ, இவள் சுந்தரியோ,
தெய்வரம்பையோ, மோகினியோ
மனமுந்தியதோ, வழி முந்தியதோ, கரம் முந்தியதோ
எனவே, உயர் சந்திர சுடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தடுவாய் யாரி பொற்
பந்து கொண்டாடினனே


(குற்றாலக்குறவஞ்சி)

இவற்றோடு அலவனாட்டு(நீர்க்கரையில் நீண்டினை விரட்டிப் பிடித்தாடும் ஆட்டம்) களி கொய்யு(மாலைப்பொழுதில் மொட்டுகளைக் கொய்து பல வடிவங்களில் கோத்து ஆடுதல்- அத்தியம் போது ஆடும் களிக்கொய்யு’
(அடியார்க்கு நல்லார் உரை)




வருதிரை உதைத்தல்(கடற்கரையில் எழும் அலைகளை எதிர்த்து காலால் உதைத்து விளையாடல்) வண்டலயர்தல் ( மணலைக் குவித்து, பாவை செய்து விளையாடல்)கிலிகிலி (கிளர்ப்பூட்புதல்வரோடு கிலிகிலியாடுதல்- சிறுபாணாற்றுப்படை) இவற்றோடு துணங்கைக் கூத்து( ஆடவர் கைகொடுக்க ஆடுதல்) குரவைக் கூத்து, புனல் ஆடுதல் போன்றவை எல்லாம் தமிழ்ப்பெண்கள் ஆடும் ஆட்டங்களாகும். கோலமிடுதல், கும்மியடித்தல், பூப்பந்தாடல், கோலாட்டம் முதலானவை இன்றும் பெருவழக்கிலுள்ள மகளிர் ஆட்டக் கலைகளாகும்.


  • நன்றி : உமா பதிப்பகம்