தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கின்றபடியால் தமிழர் இயற்கையாகவே அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்வதில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தனர். மேலும், கடற்கரை நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால், கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.
கடல் வாணிகம் செய்யும் தமிழர்கள் மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். இவ்வாறு கொற்கை, தொண்டி, பூம்புகார் போன்ற தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து மரக்கலங்களில் புறப்பட்டுச் சென்று கிழக்குக் கடல் ஓரமாகவே நெல்லூர், கலிங்கம் போன்ற பட்டினங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறு நடைப்பெற்ற வாணிகம் கரையோர வாணிகம் எனப்படும்.
தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேசியத் தீவுகளுக்கும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்தனர். இந்தத் தீவுகளைத் தமிழர்கள் “சாவகம்” என்று அழைத்தார்கள். சாவக நாட்டின் வாசனைப் பொருள்களையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துணிகளையும் வாங்கி வந்து தமிழ் நாட்டில் இவர்கள் விற்றனர். இவ்வாறு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்று வாணிகம் நடுக்கடல் வாணிகம் என்றழைக்கப்பட்டது.
இவ்வாறு வாணிக நிமித்தமாகக் கடலில் செல்லுகையில் அவர்களின் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை மாறிப் போகும்போது கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, நீரில் மூழ்கியதும் உண்டு. நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் துன்பம் நேர்ந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வணிகர்கள் மரக்கலங்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாகவே ஏற்படுகின்ற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வணிகருக்குக் கடற்கொள்ளைக்காரர்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்கள் நேரிட்டன. எனவே, இவர்கள் பாதுகாப்புக் கருதி கூட்டங்கூட்டமாகச் சென்றதோடு, வில் வீர்ர்களையும் உடன் அழைத்துச் சென்றனர்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர் வாக்கு. வணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழர்கள் அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்புக் கொண்டு பொருள் ஈட்டினர். அவர்களைச் சேர சோழ பாண்டிய மன்னர்களும் ஊக்கினர். குறிப்பாக, கடல் வாணிகத்தின் வழி பெருஞ்செல்வத்தை ஈட்டினவர்களுக்குப் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனர்.
நன்றி:- பழங்காலத் தமிழர் வாணிகம்