வெள்ளி, 26 செப்டம்பர், 2008

சொற்சிறப்பு


உலக மொழிகளிலே தமிழ்மொழியைத்தான் மூன்றாக வகைப்படுத்திச் சிறப்பித்து முத்தமிழ் என்றார்கள். தமிழ்மொழிக்குள்ள சிறப்புகளுள் சொற்சிறப்பு என்பதும் ஒன்று. ஓர் எழுத்தே சொல்லான விந்தை தமிழில் தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஆ-பசு 2. நா- நாக்கு 3. கோ-மன்னன் 4. தீ-நெருப்பு 5. ஈ- ஓர்உயிர்
6. பூ- மலர் 7. மா- குதிரை 8. மை- கண்மை 9. பா- பாடல் 10. தை-மாதம்


ஆங்கில மொழியில் ஓர் எழுத்துச் சொல் அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் தமிழில் மட்டும் ஓரெழுத்து சொல்லான விந்தை உண்டு.

பிறமொழிச் சொற்கள் வெறுமனே உருவத்தை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், தமிழ்மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் சேர்த்தே காட்டக் கூடியன. காட்டுக்கு சில:-

1. பாலன் - 7- வயதுக்கும் கீழ்
2. மீளி - 10- வயதுக்கும் கீழ்
3. மறவோன் - 14- வயதுக்கும் கீழ்
4. திறலோன் - 14- வயதுக்கு மேல்
5. காளை - 18- வயதுக்கு மேல்
6. விடலை - 30- வயதுக்குக் கீழ்
7. முதுமகன் - 30- வயதுக்கு மேல்


இந்த ஏழு பருவத்தை

1. பிள்ளை - குழந்தைப் பருவம்
2. சிறுவன் - பால பருவம்
3. பையன் - பள்ளிப்பருவம்
4. காளை - காதற்பருவம்
5. தலைவன் - குடும்பப் பருவம்
6. முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7. கிழவன் - மூப்புப் பருவம்

என்றும் சொல்லலாம். இதே போன்று பெண்களின் ஏழு பருவத்தையும் வேன்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.

1. பேதை - 5- வயதுக்கும் கீழ்
2. பெதும்மை - 10- வயதுக்கும் கீழ்
3. மங்கை - 16- வயதுக்கும் கீழ்
4. மடந்தை - 25- வயதுக்கும் மேல்
5. அரிவை - 30- வயதுக்கும் கீழ்
6. தெரிவை - 35- வயதுக்கும் கீழ்
7. பேரிளம்பெண் - 55- வயதுக்கு கீழ்

மனிதனின் இந்த ஏழு பருவத்துக்கும் சாதாரண மக்கள் பயன் படுத்துகிற ஆங்கிலச் சொற்கள் என்ன? “baby யும் “Child”ம் ஒரே அர்த்தம் கொண்டவை. அப்புறம் “young Boy”என்றும் “Adult Man”என்றும் “Young Man” என்றும் “old Man” “old lady” என்றும் சொல்வது தமிழைப்போல் பருவத்திற்கு ஏற்ப பொருந்துமா ?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.



நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

வியாழன், 25 செப்டம்பர், 2008

மலேசிய மாமூலர் ஐயா.அபு.திருமாலனார் அவர்கள்


மலேசிய தமிழ்க்கூறு நல்லுலகில் அரைநூற்றாண்டு காலமாக தமிழுக்கும் தமிழருக்கும் அயராது பாடாற்றியவர்தாம் மெய்ப்பொருளறிஞர் என பல்லோராலும் போற்றப்பட்டு தனித்தமிழ்ப் பாவலராக விளங்கியவர் பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்கள். மலேசிய நாட்டிலே இன்றளவும் மொழி, இனம் ,சமயம் என முக்கூறுகளும் பேசப்பட்டு வருதற்கும் தமிழைப்புறக்கணிக்காமல் மறவாமல் காத்து வருதற்கும் வித்திட்டவர்களில் முகாமையானவர். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர்.; பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்ப் பாசறையில் தவழ்ந்து துறைதோறும் துறைதோறும் தமிழ்ப்பணியாற்றியவர். தமிழுக்காக தம்மையே ஈகம் செய்து தொண்டுகள் பல செய்து தமிழாய்ந்த அறிஞர்.


இத்தனை மாண்புகளுக்கும் உரிய பாவலர் ஐயா அ.பு திருமாலனார் அவர்கள் 08.06.1931 ஆம் ஆண்டு திங்கட்கிழமை 10.40.க்குச் செலாமா ஓலிரூட் தோட்டத்தில் மு. அரிபுத்திரனார்- சி.அன்னப்பூரணியம்மாள் இணையரின் இரண்டாம மகவாகப் பிறந்தார். மாலிய (வைணவ) மரபுப்படி “நாராயணசாமி” எனப்பெயரிடப்பெற்றார். பின்னர் தமிழின் மீது தீராத பற்றுதலின் காரணமாகத் தனது பெயரை திருமாலன் எனத் தமிழ்ப்படுத்தினார். பாவலர் அவர்கள் தனது எட்டாம் அகவையிலேயே இராமாயண மகாபாரதங்களை இசைகூட்டி கேட்பார். பள்ளிப் படிப்பிலும் முதல்தர மாணாக்கராகவே விளங்குவார். மெய்ப்பொருளறிஞர் பாவலரின் உடன் பிறந்தார் இருவர்,தமக்கையார் வீரம்மாள், தம்பி மனியனார். பாவலர் ஐயா அவர்கள் 22.10.1962 -இல் கெ.மீனாட்சியம்மையாரைக் கரம்பற்றினார். இவருக்கு அரிபுத்திரன், அரியநாயகன் என் ஆண்மக்கள் இருவர்; அன்பரசி, அன்புமலர் எனப் பெண்மக்கள் இருவர்.


மலையகத்தில் அக்கால் தமிழ்மக்கள் படும் பாட்டையெல்லாம் கண்டு கண் கலங்கி அவர்களின் துயரைத்தீர்க்க தக்க வழிவகைகளைத் தேடிய வண்ணம் இருந்தார் ஐயா அவர்கள். சிறு-சிறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு ஓய்வு வேளைகளில் தமிழ்ப்பணியினையும் பகுத்தறிவுப் பணியினையும் மேற்கொண்டார். அவற்றுள் சாதியொழிப்பு, மதுவொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தொழிலாளர் ஒற்றுமை போன்றவை குறிப்பிட்டு சொல்லத்தக்கப் பணிகளாகும். அதோடுமட்டுமின்றி தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற பொது அமைப்புகளிலும் ஈடுபட்டு உழைத்தார்.



தமிழின்பால் இருந்த பற்றுதலின் காரணமாக 1970 இல் செலாமாவில் திராவிடர்க்கழக கிளையை அமைத்து அதன் தலைவராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். மொழி,இனம், சமயம் என முக்கூறுகளையும் தனது வாழ்வியல் நெறியாகப் போற்றியப் பெருமகனார் 1983-ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் நெறிக்கழகத்தைத்தோற்றுவித்தார். மொழி,இனம்,சமயம் என மட்டும் வாழாமல் நாடகத்துறையிலும் கால்பதித்தவர் அ.பு.திருமாலனார் அவர்கள். பாவலரே பல நாடகங்களை எழுதி இயக்கவும், பாடல்களைப் புனைந்து இசையமைக்கவும் வல்லவரானார். 1951-இல் செலாமாவில் தமிழ்ப்பள்ளிக் கட்டிடநிதிக்காக “பதிபக்தி” எனும் நாடகத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்தது செலாமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தகவலாகும். இவர் எழுதிய தனியிசைப் பாடல்கள் 300க்கும்மேற்பட்டதாகும். தமிழ்க்கூறு நல்லுலகிற்காக இவர் இயற்றிய கலைப்படைப்புகள்வருமாறு:


  • நாடகங்கள்
  1. பாவத்தின் பரிசு
  2. சூழ்ச்சி
  3. மலர்ந்த வாழ்வு
  • நெடுநாடகங்கள்
  1. திருந்திய திருமணம்
  2. பரிசுச்சீட்டு
  3. சந்தேகம்
  4. பாட்டு வாத்தியார் பக்கிரிச்சாமி
  5. என்று விடியும்
  6. மீண்டும் இருள்
  • படைப்புகள்
  1. கட்டுரைகள் 15
  2. ஆய்வுக்கட்டுரைகள்
  3. விளக்கக் கட்டுரைகள்
  4. மறுப்புக் கட்டுரைகள்
  5. 200க்கும் மேற்பட்ட கவிதைகள்
  • வெளிவந்த நூல்கள்
  1. கனல் (பாநூல்)
  2. இனப்பற்று ( கட்டுரை நூல்)
  3. தமிழ் நெறி விளக்கம் ( பொழிவு நூல்)
  4. தேவையற்றது எழுத்துச் சீர் திருத்தம்
  5. தமிழர் வாழ்வறத்தில் தாலி

இவ்வாறாக உடலாலும் உள்ளத்தாலும் தமிழுக்காகவே வரலாறாய் வாழ்ந்த மெய்ப்பொருளறிஞர் பாவலர் ஐயா 29.04.1995 ஆம் ஆண்டு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவர் விட்டுச்சென்ற பணியினை மலேசிய நாட்டிலே இன்றளவும் ஆயிரம்-மாயிரம் உண்மை தொண்டர்களால் உயிரூட்டப்பெற்று வருவது மலேசியத் தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் பேறாகும்.

புதன், 24 செப்டம்பர், 2008

இவனா தமிழன்? இருக்காது


இவனா தமிழன் ? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத்
தடுத்தால் உடனே சீறுகிறான்!

வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்!
வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

தானும் முறையாய்ப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன் கடன் பேணி நடப்பதில்லை- நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்குப் பின்னும் வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழிப்பவனே –தான்
அடைந்ததை எல்லாம் இழப்பவனே!


நன்றி:- உங்கள் குரல்

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

தமிழ் ஆலயம் கண்டனம்

தமிழ்க்கூறு நல்லுலகில் மதித்துப் போற்றத்தக்க வகையில் பல தமிழ்க்காப்பு பணிகளை முன்னின்று நடத்தி வரும் மலேசியத்தின் தமிழ்மறவர் ஐயா.இரா.திருமாவளவனாரைக் கண்டித்த தமிழ் நாளிதழுக்கு நமது தமிழ்ஆலயத்தின் பதில் .

திருமாவளவன் என்பவர் ஒரு தனி நபர் அல்ல என்பதைத் தாங்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மானமுள்ள மலேசியத் தமிழனின் மறு அடையாளம் தான் திருமாவளவனார் அவர்கள். அவ்வகையில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நிகழ்வில் அவர் பேசிய பேச்சில் எவ்வித குறையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.அவர் பேசும்போது தங்கள் தமிழ்நாளிதழை மட்டும் குறிவைத்துப் பேசவில்லை. மாறாக நமது மலேசியத் திருநாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த ஊடகங்களையும் தொட்டு தான் அவருடைய பேச்சு இருந்தது. ஆனால், தங்கள் நாளிதழில் அன்னவரைப் பழிக்கும் நோக்கத்தில் “திருமாவளவனே நாவை அடக்கு” என செருக்குத் தனமாக செய்தி வெளியிட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஐயா.திருமாவளவனாரைப் பழித்துப் பேசுவதற்கு இந்நாட்டில் உள்ள எவருக்கும் கிஞ்சிற்றும் தகுதியும் அருகதையும் கிடையாது. மொழி,இனம்,சமயம் என முப்பெரும் கொள்கைகளை வாழ்வியலாகக் கொண்டு நம் நாட்டில் மட்டுமல்லாது உலக நிலையிலும் மொழிக்காகவும் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஐயா அவர்களின் பணிகள் எண்ணிலடங்கா. அவரைக் கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டியத் தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

அவர் பேசியதை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக்கூறும் கருத்துக் குருடர்கள் முதலில் தங்கள் நாளிதழில் உள்ள குறைகளை அடையாளம் காணுதல் வேண்டும். உண்மை எப்பொழுதும் சுடத்தான் செய்யும். தமிழால் வயிற்றைக் கழுவி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தாங்கள் உண்மையிலேயே தமிழுணர்வாளர்களா? என்று என்னத் தோன்றுகிறது. இற்றைய நிலையில் மொழிக்கொலைகளுக்கு பண்பாட்டுச் சிதைவுகளுக்கும் தகவல் ஊடகங்களான நாளிதழ், தொலைக்காட்சி, இணையம், வானொலி போன்றவையே முகாமையான காரணங்களாகும். இளைஞர்கள் கெட்டு சீரழிவதற்கும் நாளிதழ்களே முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதைத்தான் அவரும் சாடியிருக்கிறார்.அதில் என்ன தவறு இருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே தேவையற்ற மது விளம்பரங்கள், மொழிப்பிழைகள், சினிமா நடிகைகளின் ஆபாச காட்சிகள் பிறமொழிசொற்கள் போன்றவைதான் அதிகமாகத் தென்படுகின்றன.

எப்படியெல்லாம் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்க முடியுமோ அதற்கு துணை நின்றுவிட்டு இளைஞர்கள் சீர்கெட்டுவிட்டார்கள் என்று சொல்லுவதில் என்ன பயன் இருக்கிறது. இதைத்தான் மலையகக் கவிஞர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் - அதைத்
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!


மொழியாலும் இனத்தாலும் தமிழனாக வாழும் மானமுள்ள தமிழனுக்குத் தான் இது புரியும். மற்றவருக்கு இது வேப்பங்காயாகக் கசக்கத்தான் செய்யும். உண்மைத் தமிழுணர்வாளர்களை மதிக்கத் தெரியாத இவர்கள் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ்நாளிதழ்கள் தாய்மொழியின் மாண்பினையும் பண்பாட்டினையும் தூக்கிப் பிடிப்பதற்கு பங்காற்றவேண்டுமே ஒழிய மாறாக பண்பாட்டையும் மொழிச்சிதைவையும் ஊக்கப்படுத்துகின்ற பணிக்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது.

அவனவன் வாயாலன்றி ப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் காதாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பெறனெவன் காப்பான் வந்தே.
மலேசிய மாமூலர்
அ.பு.திருமாலனார்

இறுதியாக, தமிழினத்தை வடிவமைப்பதில் தமிழ்நாளிதழுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு ஆகவே, தாங்கள் சமுதாயப் பொறுப்பினை உணர்ந்து செயல்படுமாறு விழைகின்றோம். இல்லையேல் நாளைய தலைமுறை நம்மை காறி உமிழும் நிலைக்கும் நாம் ஆளாகுவோம் என்பது மட்டும் உறுதி.

உண்மைத் தமிழர்கள் சிந்திப்பார்களா....

ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை
எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும் மற்றை
இனத்தார்க்கே மண்டியிடான்
மண்டியிட்டால்...
பெற்றவர்மேல் ஐயம் ... பிறப்பின் மேல் ஐயம்
என சற்றும் தயக்கமின்றி சாற்று.


தமிழே தமிழரின் முகவரி

தாய்தமிழ்ப்பணியில்,

கோவி.மதிவரன்

திங்கள், 22 செப்டம்பர், 2008

தமிழின் எதிர்காலமும் தமிழர்களின் எதிர்காலமும்

ஐயம் : இந்நாட்டில் தமிழின் எதிர்காலமும் தமிழர்களின்
எதிர்காலமும் எப்படி இருக்கும் ?

தெளிவு :

தமிழின் எதிர்காலமும் தமிழனின் எதிர்காலமும் காலத்தைப் பொறுத்ததுதானே. தமிழனின் எதிர்காலம் குறித்து ஆருடம் சொல்வதல்ல என் வேலை. எப்படி இருக்கவேண்டும் என வியூகங்கள் வகுப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். சதா பாறையின் மீது மோதிச் சிதறும் கடலைகள் போலத்தான் காலங்கள் தோறும் நம்மை நோக்கிப் பிரச்சனைகளும் சவால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். இருக்கட்டுமே. எந்த சவால்களையும் எதிர்நோக்க, வெற்றி கொள்ள என்ன இல்லை நமக்கு. ஆண்ட பரம்படை நாம், ஒரு நீண்ட பாரம்பரியத்தின், சிந்தனை மரபின் இன்றைய புதல்வர்கள் நாம். அறிவு இருக்கிறது நம்மிடம்; ஆற்றல் இருக்கிறது நம்மிடம்; உழைப்பு இருக்கிறது நம்மிடம். உண்மை இருக்கிறது நம்மிடம். யாரோ உருவாக்கி நம் கையில் திணிப்பதல்ல எதிர்காலம். நாமே உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது நமது எதிர்காலம். நாளைய சமூக, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றம் காண இன்றே நாம் வியூகங்களை வகுப்போம். அந்தந்தத் துறை அறிஞர்களை அழைத்துப் பேசுவோம். செயலாற்றுவோம்; அதன் பயன்கள் கடைசித் தமிழனை சென்றடைஅய் வழிகாண்போம். நாளைய சூரியன் பேரொளியாகத்தான் இருப்பான். விழி திறந்திருப்பவனுக்குத் தானே “விடியல்” என்பது.

நன்றி:- செம்பருத்தி

கடவுள் மறுப்புக்கு தமிழ் விருப்புக்கும் என்ன தொடர்பு ?

ஐயம் : இளமாரன்,பினாங்கு
ஐயா, கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் என்ன
தொடர்பு? உங்கள் கருத்து..?




தெளிவு :

கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.ஆனால்,இற்றைய நிலையில் தமிழ் மீது பற்றுள்ளவர்களும் தமிழ் உணர்வு கொண்டவர்களும் கடவுள் மறுப்பாளர்களாகச் சித்தரிக்கப்டுகின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையாகும்.வரலாற்றில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட தவறான கோட்பாடாகும்.

தமிழ் விருப்பு என்பது இறை விருப்புக்கு இட்டுச்செல்லுமே தவிர ஒருபோதும் இறை மறுப்புக்கு வித்திடாது. அதனால் தான் நமது தமிழின அருளாளர்கள் திருமூலர் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யுமாறே என்றும்;திருநாவுக்கரசர் “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றும்; திருஞானசம்பந்தர் “நாளும் தமிழ்வளர்க்கும் திருஞானசம்பந்தன்” என்றும் பாடியுள்ளனர். சிவபெருமானே சொற்றமிழால் எமைப் பாடுக என்று கேட்ட வரலாறும் உண்டு.

ஆக, தமிழ் இறைமைக்கு எதிரானது அல்ல மாறாக இறைமையை ஏற்றிப் போற்றுவதற்கு ஏற்றதொரு மொழி. சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாம்,கிருத்துவம் என பல சமயத்தவரும் போற்றி வளர்த்த ஒரே மொழியாக தமிழ் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் இயற்கையோடு இயைந்த இறைமொழியாகும். தமிழ் விருப்பு பெருகினால் கடவுள் மறுப்பைவிட கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மறுக்கும் பகுத்தறிவு தான் வளரும். பகுத்தறிவு ஒருபோதும் கடவுள் மறுப்பு ஆகா. தமிழ் அறிவு மொழி என்பதால் தமிழ்ப்படித்தால் பகுத்தறிவு பெருகும், உண்மையைப் பகுத்தறிந்து உயர்ந்த கடவுள்நெறியை உணர்ந்து கொள்ள உதவும்.


ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

செந்தமிழ்க்குறிஞ்சி சா.சி. குறிஞ்சிக்குமரனார் அவர்கள்



செந்தமிழ்க்குறிஞ்சி என பல்லோராலும் அழைக்கப்படும் முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் மலேசிய இலக்கிய உலகில் தன்னிகரற்ற பாவலராக உலாவந்தவர். மலேசியாவில் பாவாணர் கண்டு காட்டிய வழிதடத்தில் தூய தமிழைப் பரப்பிய பெருமகனார். இவர் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் தம்மை முழுமையாக ஈகப்படுத்திக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன் கருதாது உழைத்த நற்றமிழ்ப் பெருமகனார்.

முதுபெரும் பாவலர் ஐயா அவர்கள் 05.05.1925-ஆம் நாள் காரிக்கிழமை(சனி) தமிழகத்தில் முகவை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இரணசிங்கம் எனும் சிற்றூரில் சாத்தையா,சிட்டாள் இணையருக்கு முதலாவது செல்வமகனாகப் பிறந்தார். ஐயா அவர்கள் 1930-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு ஆணிவேராகவும் மூச்சாகவும் விளங்கியவர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள்.

இவரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும். 1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழி சுயமரியாதைப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராக மாறினார். ஊழிப்பேரறிஞர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் “ஒப்பியன் மொழிநூலைப்”பார்க்கும் வாய்ப்பைப் பெற்று அதிலிருந்து தூய தமிழ்ப்பற்றாளரானார். 1946-ஆம் ஆண்டிலே ம.இ.கா-வில் உறுப்பியம் பெற்று பேரா மாநில இலக்கியப் பகுதி பொறுப்பாளராக அமைந்து பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தன், மருத்துவர் அ.சிதம்பரநாதன் போன்றோர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்த பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைப்பெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார்.


அன்னவருக்குத் தனித்தமிழ் உனர்வு மேலோங்கி இருந்த கரணியத்தால் தூய்தமிழ்க் கொள்கைகளைப் பரப்பவும் முனைந்தார். எனவே, பாவாணர் மன்றத்தைத் தோற்றுவித்து பல எழுத்தாளர்கள்,பாவலர்கள், சொற்பொழிவாளர்கள் பலர் தோன்றுவதற்கு வித்தாக அமைந்தவர் ஐயா அவர்கள். உலகிலேயே பாவாணருக்கு மன்றம் அமைத்த பெருமை அவரையே சாரும். அவர்களில் தமிழ்மணி எல்லோன், பெ.கோ.மலையரசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாவாணர் தமிழ் மன்றத்தின் வழி தமிழகத்திலுள்ள பேராசிரியர் பலரை அழைத்து மொழி, இலக்கியம் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்துள்ளார். அவர்களில் குறிப்பாக பாவலரேறு பெருஞ்சித்திரனார், முனைவர் தமிழ்க்குடிமகனார், வ.சு.ப மாணிக்கனார், கு.ச.ஆனந்தனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், மலேசியாவில் தனித்தமிழ் உணர்வு பெற “தென்மொழி” “தமிழ்ச்சிட்டு” “தமிழ்நிலம்” போன்ற இதழ்களை வரவழைத்து தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.


பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி “தமிழ்ச்செல்வர்” என்ற விருதைப் பொற்பதக்கத்தில் வழங்கியது சிறப்புக்குரிய ஒன்றாகும். பாவலர் அவர்களின் அயராத தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாஜா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க்கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.

செலாமாவில் உள்ள தமிழ் நெறிக்கழகத்தின் ஏடலராகவும் இருந்து இனம், மொழி, குமுகாய மறுமலர்ச்சி உணர்வுடன் பல்லாற்றானும் பாடாற்றி வந்தவர் குறிஞ்சியார் அவர்கள். ஐயா அவர்கள் “பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியும் பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கட்டுரை படைத்துள்ளார். சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இவர் அதனையே தனது தொழிலாக நடத்தி வந்தார். அன்னவர் பல்வேறு மருந்துகளுக்கு தனித்தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தது தனிச்சிறப்பாகும்.

மலேசியத் தனித்தமிழ் வளர்ச்சிக்கு தன் வாழ்நாள் முழுவதும் ஈகப்படுத்தி பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55க்கு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவரின் தனித்தமிழ்க் கொள்கை இன்றும் மலேசியத் தமிழர்களிடையே வேரூன்றி இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

சனி, 20 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு 2

ஐயம் : ஐயா வணக்கம். தமிழில் பிறமொழிச் சொல் கலந்தால்தான் நல்லது
என்றும் அது மொழி வளர்ச்சிக்கு உகந்தது என்று பலர்
ருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன ?



தெளிவு :

சொல் வளம் இல்லாத மொழிகள் பிறமொழிகளிலிருந்து கடன் பெறலாம். ஆனால் சொல்வளமும் உருவாக்கத் திறமும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான தமிழ் போன்ற மொழிகள் பிறமொழிகள் கலந்தால் வளரும் என்று கூறுவது பேதமையாகும். பிறமொழி கலவையினால் தமிழ் வளரும் என்பது உண்மையானால் இந்தியா முழுமையிலும் விளங்கிய தமிழ் இன்று தேய்ந்து சுருங்கி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். மொழியியலாளர்கள் ஒருமொழியோடு பிறிதொரு மொழி கலந்தால் புதிய மொழி ஒன்று உருவாகிவிடும் என்கின்றனர். எனவே, இருக்கின்ற தமிழையும் இல்லாது செய்கின்ற சூழ்நிலை உருவாகுமே அல்லாமல் மொழிவளரும் என்று சொல்லுதல் பொருந்தாது.


நன்றி:- தமிழ்நெறி

வியாழன், 18 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு

தமிழ்த்தெளிவு 1

ஐயம் : ஐயா சிலர் “திரு” எனும் சொல்லைச் “ஸ்ரீ”
என்கிறார்களே சரியா?

தெளிவு : திரு எனும் அருந்தமிழ்ச் சொல்லைச் சொல்ல
முடியாமல் சமற்கிருத மொழியில் ஸ்ரீ என்றனர்.
திரு> ச்ரு> ச்ரி> ஸ்ரீ என்று சமற்கிருதத்தில் திரிந்தது. தமிழில்

திருவைத்தான் பயன்படுத்த வேண்டுமேயொழிய ஸ்ரீ யைப்
பயன்படுத்தக்கூடாது. தமிழிலும் ஸ்ரீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று யாராவது கூறினால் அது மூடத்தனம்.


நன்றி :- தமிழ்நெறி

புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ்ச் செம்மொழி நாள்

செம்மொழி யாவினும் செம்மொழி



செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
ஏறுது வானடியோ!

இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
செம்மொழி ஈதடியோ !

எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
இம்மொழி விண்மொழியோ!

எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
இம்மொழி யாமடியோ!
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
எந்தமிழ் மேலடியோ!

செம்மையும் தூய்மையும் சீர்குறை யாமலே
செய்குவம் தொண்டடியோ!
மும்மையும் செந்தமிழ் மூவா மொழியென
முந்துற வாழியரோ!

ஆக்கம்;
நல்லார்கினியனார்
செ.சீனி நைனா முகம்மது

  • குறிப்பு :(வல்லின மெய் இல்லாத பாட்டு)
வண்மொழி (வளம்)
மண்மிசை இதுபோல் ஏது ?(தனித்தன்மை)
எந்நெடுங்காலமும் செம்மொழி (நிலைபேறு)
எம்மொழி சொல்லினும் இன்மொழி(இனிமை)
செம்மை (ஒழுங்கு)
மும்மையும் மூவா மொழி(இளமை)
தொன்மொழி (பழமை)
எம்முறை தேரினும் செம்மொழி(முழுமை)
தாயடியோ(மூலத்தன்மை)
விண்மொழி(மேன்மை)
தூய்மை(தனித்தியங்கும் ஆற்றல்)
முந்துற வாழி(முதன்மை)

  • நன்றி:-தமிழ்ச் செம்மொழி சிறப்பு மலர்

தமிழ் ஆலயம் - வலையுலக அறிமுகம்


என் இனிய வலையுலகத் தமிழன்பர்களே,
வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!


  • தமிழ்மொழி, பண்பாடு, தமிழர் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் அடங்கிய தமிழ்த் தளமாக இவ்வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு எய்துகின்றேன்.

  • தமிழாலயம் மொழியின் வழியாகத் தமிழரை ஒன்றிணைக்கும் ஆலயமாக விளங்க வேண்டும் என்பதே நமது அவா.

  • தமிழ்நாடு அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிப்பு செய்த நாள் 17.09.2004.

  • தமிழ்மொழி வரலாற்றில் சிறப்புமிக்க அந்த அறிவிப்பு வெளிவந்து இன்றோடு (17.09.2008) நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.

  • இந்த நன்னாளில் 'தமிழ் ஆலயம்' என்ற இவ்வலைப்பதிவைத் தமிழர் உள்ளங்களில் பதிவு செய்வதில் பெருமையடைகின்றேன்.
  • உலகத் தமிழன்பர் அனைவரின் உறவையும் உற்ற ஆதரவையும் நாடி இந்த அளவில் விடைபெறுகிறேன்.


இறுதியாக,
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி!
தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு!


அன்புடன்;
கோவி.மதிவரன்
தொல்லூர்(செலாமா) - வெள்ளி மாநிலம் - மலேசியா,
17.09.2008