மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.
போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.
இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.
போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.
போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.
தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை
- நன்றி:- உமா பதிப்பகம்