வெள்ளி, 19 டிசம்பர், 2008

நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது....


மலேசியத் தமிழர்கள் மொழி உணர்வும் இன உணர்வும் குன்றியிருக்கின்ற இக்காலக்கட்டத்தில் அடுத்த தலைமுறையினைத் தமிழ் தலைமுறையாக உருவாக்குகின்ற கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. ஆகவே, நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது.


1.உங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
2.உங்கள் வீட்டுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
3.விழா நாள்களில் பண்பாட்டு உடை அணியுங்கள்
4.பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்
5.நாள்தோறும் திருக்குறள் படியுங்கள்
6.திருக்குறள் தமிழ்மறை என்பதை எல்லாருக்கும் உணர்த்துங்கள்
7. நமது பண்பாட்டைப் பேணுவதில் கருத்தாய் இருங்கள்
8.ஒரு தமிழன் கெட்டுப் போனால் மட்டும் அந்நேரத்தில் தமிழனே இப்படித்தான் என்றும், அவன் சிறந்திருக்கும் வேளையில் இந்தியன் முன்னேறிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு, அவன் உயர்ந்து விளங்கும் போதும் தமிழன் என்றே கூறுங்கள்
9.தமிழிலே பேசுங்கள், தமிழிலே கையெழுத்திடுங்கள்
10. பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள், எழுதுங்கள்
11.உங்கள் வீடுகளில் நூல்களைச் சேர்த்துப் படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்
12.எல்லாரிடத்தும் புரிந்துணர்வோடு பழகுங்கள்
13.பிறரைப் பழிக்கும் அல்லது அழிக்கும் நோக்கம் கொள்ளாதீர்கள்
14.பிள்ளைகளை அன்பு செலுத்தியும் அதே போழ்து கண்டித்தும் கட்டுப்பாட்டோடு வளர்த்தெடுங்கள்
15.முதன்மையான ஒழுக்கத்தைப் பேணி, பிள்ளைகளுக்கும் கற்பியுங்கள்
16.அருவருக்கத் தக்கதும், பண்பாட்டைக் சீர் கெடுக்கும் கருத்துகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்காதீர்கள்
17.சிக்கல்கள் நேர்ந்தால் பதற்றமடையாமல் ஆற அமர சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுங்கள்
18.பொருளற்ற ஐயப்பாடுகளையும் தவறான கற்பனைகளையும் உற்றவர்கள் மீது கொள்ளாதீர்கள்
19.அளவிறந்த சீற்றம் கொள்ளாதீர்கள்
20.மொழிமானத்தையும் இனமானத்தையும் உயிரெனப் போற்றுங்கள்
21.வீட்டில் குடும்ப உணர்வினைப் பேணுங்கள்
22.குடும்பத்தோடு சேர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
23.பிறரை மதிக்கவும், வணக்கம் சொல்லவும் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்
24.நம் இனத்தை இன்றளவும் சீர்கெடுத்துக் கொண்டிருக்கும் அடுத்துக் கெடுத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், காழ்ப்பு கொள்ளுதல், பொய்
பேசுதல் போன்ற ஒழுங்கீனங்களைக் கைகொள்ளாமலும் பிறருக்கும்
அந்நோய்களைப் பரப்பாமலும் வாழுங்கள்
25.நம்புங்கள், தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும்

நன்றி:- மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

தமிழ் சீனப்பள்ளிகள் மூடப்படவேண்டும்- முக்கிரீசு மகாதீர் கருத்து

மணிமாறன் செராசு, கோலாலம்பூர்


ஐயம் : ஐயா, தமிழ் சீனப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று முக்கிரீசு மகாதீர் கூறியிருப்பது சரியா?


தெளிவு :


நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி இவ்வாறு இவர்கள் கூறிவிடமுடியாது. சிலரிடையே பரப்பரப்பான கருத்துகளை வழங்கி ஆதரவு தேட முற்படும் பேச்சுதான் அது. ஆனால், தமிழர்கள் நினைத்தால் மூடிவிட முடியும். அப்படித்தான் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. தோட்டப்புறத்திலுள்ள மக்கள் வெளியேறிய பின் தமிழ்ப்பள்ளிகளை வேறு இடங்களில் நிறுவ தவறிவிட்டனர். இன்னும் பலர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லையே! ஒருபக்கம் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும் மாறிவருவதை நீங்கள் உணர வேண்டும். வகுப்பறைப் பெயர்கள் தமிழில் இல்லை, அறிக்கைகள் தமிழில் இல்லை, அறிவியலும் கணிதமும் தமிழில் பயிற்றுவிக்கப்படவில்லை, தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய இசை, ஓவியம், கைவினைத்திறன் போன்ற பாடங்களும் சில பள்ளிகளில் தமிழில் பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, தமிழ்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளாக இருக்கின்றனவா? சிந்தித்துப் பாருங்கள். நாம் விரும்பும் வரை தமிழ்ப்பள்ளிகள் இருக்கும், இல்லையென்றால் படிப்படியாக நம்மவர் போக்காலேயே தமிழ்ப்பள்ளிகள் மாறலாம். ஏனெனில், தமிழர்களில் பலருக்குத் தமிழ்ப்பற்று கிடையாது. அக்கறையும் இல்லை. அயல்மொழி பண்பாட்டு விருப்பு நம்மவரை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. நாம் சரியாக சிந்தித்தல் வேண்டும்.


நன்றி : தமிழ்நெறி


தமிழருக்கும் திராவிடருக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

குமரன் கூலிம் கடாரம்

ஐயா: தமிழர் திராவிடர் என்னும் இரண்டுக்கும் இடையிலான பொருள் வேறுபாடு என்ன ?


தெளிவு :

தமிழர் என்ற சொல், முதலில் தோன்றியது;தொன்மையானது.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிப்பது. தமிழர் என்ற சொல்லை ஆரிய இனத்தார் சொல்ல முற்பட்டபோது, இயலாத நிலையில் திரிந்து உருவாகியது திராவிடர் என்ற சொல்லாகும்.

தமிழர் - தரமிளர்- திரமிளர் - திரமிடர் - திரவிடர் - திராவிடர் என்று திராவிடர் எனும் சொல் உருவாகியது; திராவிடர் என்று ஆரியர் தமிழரைப் பார்த்தே குறிப்பிட்டனர்.பின்னாளில் கால்டுவெல் எனும் அறிஞர் தெலுங்கு, மலையாளம், உட்பட்ட 23 மொழிகளை ஒரு குடும்பமாகக் கட்டமைத்து அந்தக் குடும்பத்தைத் திராவிட மொழிக்குடும்பம் என பெயரமைத்தார். உண்மையில் திராவிடம் என்பது தமிழையே குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி : தமிழ் நெறி

புதன், 10 டிசம்பர், 2008

தமிழ் நமது உயிர் தமிழ்ப்பள்ளி நமது உடல்

அண்மைய காலமாக அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதா, தாய்மொழியில் போதிப்பதா அல்லது இரு மொழிகளில் போதிப்பதா? என்ற சிக்கல் தோன்றியிருக்கிறது நாம் அறிந்ததே. இக்கட்டுரை அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதால் ஏற்படும்
விளைவுகளை ஆராய்கிறது. படித்துப் பயன் பெறுக.


கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கி நமது அரசாங்கம் கணிதம்
மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முடிவு செய்த்து நாம் அனைவரும் அறிந்த்தே. 2003-ஆண்டு முதல் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்ற மாணவர்கள் இவ்வாண்டுதான் யு.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதினர். இதற்கிடையில் இவ்விரு பாடங்களையும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் பிரச்சாரங்களும் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கின்றன.ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது இவ்விரு பாடங்களின் தேர்ச்சி விகிதங்கள் மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நம் நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட அரசுரிமைகள் உண்டு. நமக்கு இந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட அரசுரிமை தமிழ்ப்பள்ளிகள். இந்நாட்டில் உள்ள பிற இனங்கள் தங்கள் உரிமைகளையும் விழுமியங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் மறந்தும் விட்டுக் கொடுத்த்து கிடையாது. ஆனால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலத்தில் போதித்து வந்த அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் கற்பிக்க பிற இனத்தவர்கள் முனைப்புக் காட்டும் வேளையில் நாம் மட்டும் இவ்விடயத்தில் சரியாகச் சிந்தித்து செயல்படவில்லை என்பது உண்மை.இனி இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்ப்பள்ளிகளின் அடையாளம் மாறும்

அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ப்பள்ளிகள் தங்கள் உண்மையான அடையாளத்தை இழந்துவிடும் என்பது மட்டும் உறுதி. எனவே,தான் அரசாங்கம் இத்திட்டத்தை அறிமுகம் செய்த நாளிலிருந்து சீனப்பள்ளிகள் இவ்விரண்டு பாடங்களையும் இரண்டு மொழிகளிலும் கற்பித்து தங்கள் பண்பாட்டின் விழுமியங்களான சீனப்பள்ளிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நாட்டில் உள்ள மற்ற இன்ங்கள் மிகத் தெளிவாக சிந்திக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?

மாணவர்கள் புரிந்துக் கொள்வதற்குச் சிரமப்படுவர்

இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால், அதில் பயிலும் குழந்தைகள் அவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் போகும். இதனால் ஆரம்ப அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிவருவர். நிலைமை இவ்வாறு இருக்க நாட்டின் வளர்ச்சியில் எப்படி இவர்களால் பங்கெடுக்க முடியும்? இது நமது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

தமிழ்மொழியின் தரம் குறையும்

இதுவரையில் பயிற்று மொழியாக இருந்த தமிழ்மொழி பாட மொழியாக நிலை மாறும்.இதனால் தமிழ்மொழியின் தரம் குன்றும் என்பதில் ஐயமில்லை. எதிர்கால தலைமுறை தாய்மொழி உணர்வற்றவர்களாகவும் தமிழே தெரியாத தலைமுறையாகவும் உருவாவதற்கு வழி வகுத்துவிடும்.எனவேதான், சீனர்கள் அன்றே மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் தாய்மொழியினைப் பாதுகாத்திருக்கின்றனர். ஆனால், நாம் மட்டும் இன்றுவரை ஏமாந்த ஏமாளி சமுதாயமாக இருந்து வருகின்றோம்.

வேற்று இன ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு

அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் பொழுது இப்பாடங்களைப் போதிப்பதற்கு தமிழரல்லாத சீனரோ அல்லது மலாய்க்கார்ரோ நியமிக்கபடலாம். இது அரசாங்கத் துறையில் குறிப்பாக ஆசிரியர் துறையில் நமது வேலை வாய்ப்பினை வெகுவாக குறைத்துவிடும். இவர்களின் வருகையினால் நம் இன ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும். நமது உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு சூரிய வழிபாடு செய்வதில் என்ன பயன்?

அறிவியல் கணித கலைச்சொற்கள் அழிவு

ஆங்கில போதிக்கப்பட்டால் இன்றுவரை நமது மொழியறிஞர்களால் உருவாக்கப்பட ஆயிரமாயிரம் அறிவியல் கணித கலைச்சொற்கள் மறைந்து போகும் நிலை ஏற்படும்.இந்நிலை மொழி நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது வரலாற்று உண்மை. மலாக்கா செட்டிகள் இதற்கு நல்லதொரு சான்று.

வாணிப வர்த்தக வாய்ப்புகள் பாதிப்பு

இறுதியாக அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ச்சார்ந்த புத்தக நிறுவனங்களும் பெரும் இழப்புகளுக்கு இலக்காகிவிடும். தமிழ்க்கல்வியால் கிடைக்கின்ற வியாபார வாய்ப்புகளும் வர்த்தகங்களும் இனி எட்டாக் கனியாய் அமைந்துவிடும். ஆனால் தாய்மொழியில் போதிக்கப்பட்டால் இவ்வாய்ப்புகள் அனைத்தும் நமது இனத்தவருக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.இது நமது சமுதாய வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றும்.

தாய்மொழிக்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் நமது அடிப்படை உரிமைகள். இவ்விரண்டையும் கட்டிக் காக்கின்ற பெரும் பொறுப்பு மலேசியத் தமிழர்களான நமக்கு இருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்

எனவே, நமது பண்பாட்டின் விழுமியங்களான, மொழியின் முகவரிகளான தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற அரசியல் விறுப்பு வெறுப்புகளை மறந்து தமிழ்ப்பள்ளிகளைக் காத்திடல் வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை நம்மை எள்ளி நகைக்கும் இழிநிலைக்கு ஆளாகுவோம்.

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!

ஆகவே,நமது தமிழ்ப்பள்ளிகளைக் காத்திட அனைத்துத் தரபினரும் ஒன்றுபடுவோம்.

தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடு

தமிழ் நமது உயிர் தமிழ்ப்பள்ளி நமது உடல்

புதன், 3 டிசம்பர், 2008

உறுதியும் நன்றியும்


எவரெனத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்!- ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு, கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!


மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல் மேல்நடப்பேன்! துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன் திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!


கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்!- நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!


எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர் தருவேன்! ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால் நிலை நிறுத்திடுவேன்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாரினில் மேன்மை உண்டா?அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!தன்னினம் காப்ப தற்கே
தகவிலான் தன்னி னத்தின்
திண்ணிய நெறியைப் போற்றுந்
திறனிலான் தேர்வார் தம்மை
அன்னிய ரென்றே யெண்ணி
ஆழ்குழி வெட்டி யதனுள்
கண்ணிலா னா வீழும்
கதையிவன் கதையாய்ப் போய்சே


பட்டங்கள் பெற்றா லென்ன?
பதவிகள் பெற்றா லென்ன?
கற்றவர்க் கூடி யொன்றாய்
கலந்துரை யாடி யென்ன?
உற்றதோ ரினத்தால் மொழியால்
ஒற்றுமை யாகா நெறிபால்
பற்றுதல் கொண்டு விட்டால்
பாரினில் உண்டோ மேன்மை
பாவலர் அ.பு.திருமாலனார்
புதன், 26 நவம்பர், 2008

மாவீரர் நாள்

இன்று நவம்பர் 27 உலகத் தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வேங்கைகளை நினைவு கூறும் நாள். அவர்கள் அங்கே புதைக்கப்படவில்லை, மாறாக ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கின்றனர்.

தனது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்குத் தனது இன்னுயிரை நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை பத்து,நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது.எனவே, அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த இயக்கவீரர் லெப்டினன் சங்கரின்(சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27-ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்து 1989-ஆம் ஆண்டில் தலைவர் அவர்கள் மாவீரர் நாளை அறிவித்தார்.


1989-ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால்,விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்படும். நடுகற்கள் நாட்டப்படும் வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு, அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப் படுகின்றனர்.
மாவீரர் நினைவாக பின்பற்றப்படும் நாட்கள்
1. கடலிற் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகள் நினைவாக 16.01.1993

2. அன்னை பூபதி அம்மா நினைவு நாள், மார்ச்சு மாதம் 19-நாள் தொடக்கம், ஏப்பிரல் மாதம் 19-நாள் வரை


3. கரும்புலிகள் நாள் 05.07.1987

4. தியாக தீபம் திலீபன் நினைவுநாள். செப்தம்பர் 15-ஆம் நாள் தொடக்கம் செப்தம்பர் 26-ஆம் நாள் வரை.

5. குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நச்சுக்குப்பி கடித்து வீரச்சாவடைந்த நாள் 05.10.1987

6. தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈய்ந்த முதற் பெண்புலி மாலதி( தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்) 10.10.1987

7. மாவீரர் நாள், நவம்பர் 25 தொடக்கம் 27 வரை
நன்றி : "மாவீரர் நாள் கையேடு"

உலகத் தமிழினத் தலைவர் பிறந்தநாள்

இன்று உலகத் தமிழினத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளை ஈகம் செய்து போராடிவரும் தமிழின வேங்கை வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள். அதனை நினைவு கூரும் முகத்தான் இக்கட்டுரை இடம்பெறுகின்றதுபிரபாகரன், வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன். ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு, யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.

குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன், இன்று தொன்மையும் செழுமையும் வாய்ந்த பழம்பெரும் பாரம்பரியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன். தமிழன் அடிபட்டு,தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி,தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்த ஒரு காலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன், வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு, ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து, சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்தியப் பெருந்தலைவன். தனியொரு மனிதனாய் நின்று, தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி, தமிழர்களையே வியக்க வைத்த பெரும் வீரன்.

குலையாத கட்டுப்பாடும், வழுவாத நேர்மையும், தமிழன் வாழ்வு நெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும், இளகாத வீரமும், யாரும் நினையாத வகையாக, எவரும் மிகையாக நேசிக்கும், உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும், சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து, தளராத துணிவான, தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி, உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு மாபெரும் சாதனைப் படைத்த தளபதி.

தத்தமது தேசங்களிற்கும்,இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த, உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.! பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ்! என்றும் கிடையாத தலைநிமிர்வு!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்நன்றி: தலைவரின் சிந்தனைகள்


செவ்வாய், 25 நவம்பர், 2008

தமிழர் எழுச்சி நாள்

இன்று நவம்பர் 25 மலேசிய தமிழர் வரலாற்றில் ம்றக்க முடியாத, நாள். மலேசியத் தமிழனின் குரல் உலகெங்கும் ஒலித்த ஒற்றுமைத்திருநாள். அதன் நினைவாக இக்கட்டுரை எழுதப்படுகிறது

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை,; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்த வரலாற்றுப் பொன்னாள் நவம்பர் 25 .


51 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மலேசியத் தமிழர்கள் தங்களை அடிமை விலங்கிலிருந்து உடைத்தெறிந்து வாழ்வாதார உரிமைகளுக்காக குரல்கொடுக்க புறப்பட்ட நாள் தமிழர் எழுச்சி நாள்.

எமது இன எழுச்சிக்காக பல்வேறு நிலைகளிலிருந்தும் புறப்பட்ட எமது தமிழ்மக்களின் வீரத் திருநாள்.

மலேசியத் தமிழனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அனைவரும், இழந்துவிட்ட உரிமைகளை மீட்டெடுக்க ஒன்று கூடி, நமது உரிமைப் போரை அரசாங்கத்தின் செவிகளுக்கு உரக்க கூறுவதற்கு ஒன்றுகூடிய அந்த நினைவலைகள் இன்னும் நம் உணர்வையும் உயிரையும் விட்டு அகலவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையில் தனது வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களிடத்திலே ஒற்றுமை தோன்றிட வழிகோலிய அந்த வரலாற்றுப்பூர்வமான நாட்கள் என்றும் நினைவு கூறத்தக்கவை.
இந்நாட்டின் வளப்பத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் நாம் முதுகெலும்பாக விளங்கி வந்திருக்கின்றோம் என்பது வரலாற்று உண்மை. ஆனால் இன்று வரை நமக்கு மிஞ்சியது ஏமாற்றமே.அந்நிலையிலிருந்து நம்மை மீட்டெடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்து, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஒற்றுமை எனும் ஒளிவிளக்கை ஏற்றிய அந்த ஐவரும் என்றென்றும் நினைவு கூறத்தக்கவர்கள்.
இனி நமக்குத் தேவை...

உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும்
உணவினிலே ஒன்றாதல் வேண்டும்,நல்ல
நடையினிலே ஒன்றாதல் வேண்டும், பேசும்
நாவினிலும் எண்ணத்திலும் ஒன்றாதல் வேண்டும்!
மடைதிறந்த வெள்ளம்போல் நமதே வைக்கும்
மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப் பாயும்
படையினிலே ஒன்றாதல் வேண்டும்; வாழ்வின்
பயன்காண வேண்டுமன்றோ தமிழினத்தார்!


புதன், 19 நவம்பர், 2008

கோலக்கலை

பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.


புள்ளிகளையும்,கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின் அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம், புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில் அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில் மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப் பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே, அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும் மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம் இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.
இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!


நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்


என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்-வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்!- வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்தப்
பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

கண்ணிலும் கருத்திலும் காதிலும் உயிர்க்கின்ற
காற்றிலும் மிளிர்வது தமிழேதான் ! என்
கவலைக்கும் கரணியம் அதுவேதான் - உளம்
எண்ணியும் எழுதியும் எடுத்தெடுத் தியம்பியும்
இன்புறச் செய்வதும் தமிழேதான் - அதற்
கிணையென நிற்பதும் அதுவேதான்!

உடுக்கையில் உண்கையில் ஓரடி நடக்கையில்
உறக்கத்தும் வேறெதும எண்ணி யறியேன் - மனை
உறவிலும் காதலைப் பண்ணி யறியேன் - உயிர்
விடுக்கினும் தமிழெனும் நினைவொடு விடுத்திட
வேண்டுமென் றிறைவனைக் கேட்டுத் தொழுவேன் - ஒரு
வேற்றுமையும் இல்லையதில் உள்ளம் வழுவேன்!

என்மொழி தாய்மொழி, இன்மொழி அதைவிடுத்
தெவர்மொழி ஆயினும் கற்க மாட்டேன் !- வேறு
எவரையும் கைத்தொழ நிற்க மாட்டேன் - ஒரு
புன்மொழி புலைமொழி புதுமொழி எதுவுமிப்
புலத்தினில் கால்வைக்க ஒப்ப மாட்டேன் ! கோடிப்
பொன்னுக்கும் தமிழ் மனம் விற்கமாட்டேன் !


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வியாழன், 13 நவம்பர், 2008

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தெளிவு :


மொழி என்பதுஓர் இனத்தின் உயிர் நாடி, பண்பாட்டு அடையாளம், ஓர் இனத்தின் முகவரி. நம் மொழி நம்மைக் காட்டும். ஒருவருடைய பெயரைக் கேட்டதுமே அவர் என்ன இனம் என அடையாளப் படுத்துவதற்குத்தான் பெயர். ஆனால் இற்றைய நிலையில் பலர் புரியாத மொழிகளில் பெயர் வைப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இதை விட வெட்கக் கேடானா செயல் ஒன்றுமில்லை. இன அடையாளம் இல்லாத நிலையில் வாழும் ஒருவன் உலகத்தில் மதிப்பிழந்து போய்விடுவான் என்பது வரலாற்று உண்மை. அவ்வகையில் நமது மொழியையும் பண்பாட்டையும் இழந்து விட்டு அடையாளம் இல்லாத இனமாக வாழ்வதைவிட இறப்பதே மேல். எனவே, நமது மொழியின் வரலாற்றுச் சிறப்பினையும் மாண்பினையும் உணர்ந்து நமது குழந்தைகளுக்கு நல்லதமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்; நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

தமிழே தமிழரின் முகவரி

தமிழிசை


ஒரு இனம் தனித்துவ இனமாக தம்மை அடையாளப்படுத்த தாய்மொழி,பண்பாடு, இசை, கலை, மருத்துவம், வாழ்வியல், உணவு, உடை, நாட்டியம் என்பனத் தனித்துவமானதாக இருக்க வேண்டுமென்பது இலக்கணமாகும். நமது தாய்மொழியான தமிழுக்கு இவை அத்தனை கூறுகளும் இருந்தன என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால், கடந்த கால அந்நியப் படையெடுப்புகளின் தாக்கத்தினால் வேற்று மொழியும் அது சார்ந்த பண்பாடும், இசையும் வேறு பலவும் மேம்பட்டன. இதன் விளைவாக தமிழினம் தனது தனித்துவத்தை மறந்து வாழப் பின்தள்ளப்பட்டது. தனித்துவமான தமிழர் இசை மறக்கப்பட்டு, வடவர் இசையும், மின்சார நாகரிகம் அறிமுகப்படுத்திய மேனாட்டு இசையும் தமிழர் இசையாக அறிமுகம் செய்யப்பட்டன. தமிழர் இசை தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டது; அது தனித்துவமானது.


ஓர் இனம் தாய்மொழியையும் தன் இசையையும் இழந்து விடுகிறபோது அந்த இனம் உலக வரலாற்றில் இருந்து மறைந்து போகும் என்பது வரலாற்று உண்மை. தமிழர்களுக்கு மண் சார்ந்த இசை தாய்மொழியோடு இணைந்தே வந்துள்ளது. “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்”என திருநாவுகரசர் வார்த்தைகளும் அதனை உறுதியாக்கியுள்ளது. தனித்துவ இசையோடு தமிழ் எழுத்து நின்றதற்கு வரலாறு உண்டு. தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய செய்திகள் இருக்கின்றன.


தொல்காப்பியத்தில் பறை,யாழ் என்பன வருகின்றன. ஆகவே, இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பறையே தமிழரின் ஆதியிசைக் கருவியென்பதும் உறுதியாகிறது. இந்தப் பறையோடும் யாழும் ஆதி இசைக் கருவியே. அத்தோடு குழலும் சேர்கிறது.இதிலிருந்து தமிழிசை தனித்துவ மரபுகளோடு மட்டுமன்றி மரபு சார்ந்த இசைக்ருவிகளோடும் உருவானது என்பது உறுதியாகிறது. பண்டையத் தமிழ் இசை நூல்களில் இசைக்கருவிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. பறை எனப்படும் தோற்கருவியும், வங்கியம் அல்லது குழல் எனப்படும் துளைக்கருவிகளும், யாழ் எனப்படும் நரம்புக்கருவிகளும், மண் வெண்கலத்தால் செய்யப்படும் கஞ்சக்கருவிகள் என்பன 2000 ஆண்டுகட்கு முன்னரே அறியப் பெற்று அவற்றுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது.

உலக இசை வரலாற்றில் தமிழ் இசையே மிகத் தொன்மையான சிறந்த இசை இலக்கணப் பண்பாடுகளுடன் கூடிய இசையாகத் திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகப் பல இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மத்தளம், யாழ், குழல் ஆகிய மூன்றையும் சங்கக் காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பண்டையக் காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பாக வழங்கி வந்தது.அது உலக இசைக் கருவியாக இருந்தது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தைப் புலப்படுத்தும் மொகஞ்சதாராவிலும் அரப்பாவிலும் தமிழர் கண்ட யாழ் இருந்ததை அங்கு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகளில் அறியப்படுகின்றது.

யாழ், வில்யாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் எனப் பலவகைப்படும்.அறுவகை சிறுபொழுதிற்கும் யாழ் எதுவென குறிக்கப்பட்டுள்ளது.

வைகறை - மருத யாழ்
நண்பகல் - பாலையாழ்
ஏற்பாடு(மாலைக்கு முன்) _ நெய்தல் யாழ்
மாலை - முல்லை யாழ்
யாமம் - குறிஞ்சி யாழ்

எனவே, பண்டையத்தமிழர் கண்டு காட்டிய தமிழிசைக்கு மறுவாழ்வு ஏற்பட வேண்டும். தமிழ் இசை முழங்கினால் தான் தமிழர் வாழ்வு, தமிழ் வாழ்வாக அமையும். தமிழர் கண்ட தமிழிசையைப் போற்றிப் பேணுவதே இற்றையத் தமிழரின் தலையாய கடமையாகும்.
நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தமிழாய்க் கனிந்தவர்கள்

சனி, 4 அக்டோபர், 2008

திருவருட் பேரொளி வள்ளலார் அருள்வருகைத் திருநாள்

இன்று 05.10.2008 திருவருட் பேரொளி வள்ளல் பெருமானார் அவர்கள் வருவிக்கவுற்ற அருள்வருகைத் திருநாள். அதனை நினைவு கூறும் முகத்தான் இக்கட்டுடை வெளியிடப்படுகின்றது.

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதிதாம் வாழ்ந்த காலத்தில் பேசிய பேச்சாலும் எழுதிய எழுத்தாலும் ஆற்றிய செயலாலும் தமக்குப் பின்னும் சமுதாயத்தில் மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தி நாம் மீண்டும்-மீண்டும் நினைக்கத்தக்க வகையில் உயர்ந்த பயன்களை வழங்கிய பெரிய மனிதர்களைத் தான் நாம் சான்றோர்கள் என்றும் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் மதித்துப் போற்றிக் குறிப்பிடுகின்றோம். அவ்வகையில் மிக அண்மைய காலத்தில் தமிழ்ச்சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் திருவருட் பேரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பதாகும். உலக உயிர்கள் எல்லாம் ஒன்று. அவ்வுயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமானார் வழி.


பிறந்த உயிர் என்றாவது இறக்கத்தான் வேண்டும் என்பது உலக நியதி. இந்நிலையை மாற்றி சாகாதவனே சன்மார்க்கி என்று தொடங்கி, சித்தர்கள் நிலையையும் ஆய்ந்து, அதன் தன்மையையும் உணர்ந்து இறுதியாக சாகாத நிலைக்கு மேல் நிலை இருக்கவேண்டும் என்று உணர்ந்து, அதுவே ஒளிவடிவம் என தெளிந்து, ஒளியாகவே உருமாறியவர்தான் வள்ளல் பெருமானார். அடிகளார் ஆண்டவன் அருளால் உள்ளொளி பெற்றவர்; அதனால் வெறும் அறிவாலன்றி, அருளால் பார்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார். எனவே தான் தமக்கு அறிவுத் தந்த அறிவாசான் எல்லாம் வல்ல இறைமைத் திருவருளே என்று பாடுகின்றார்.

வள்ளல் பெருமானார் அவர்கள் அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகீர் அனைவரையும் சன்மார்க்க நெறியிலே திளைத்திருக்க அவதரித்தவர். வள்ளல் பெருமானார் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சன்மார்க்கத்தின் வழி சாதி, மதம், சமயம், ஆசாரம் போன்ற பேதங்களை ஒழித்து அனைத்து உயிர்களையும் சமமாகவும், பொது நோக்குடனும் ஒருமையுணர்வுடனும் அன்புடனும் காணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் என உலகுக்கு உணர்த்தியவர். ஓரறிவு முதல் ஆறறிவுயிர் வரை எல்லா உயிர்களிடத்தும் இறைவன் குடிகொண்டிருப்பதனால், படைப்பில் உயிர்கள் பலவகையாக பிரிந்திரிப்பினும் அனைத்து உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்பதை அறிந்து உயிர்நலம் பேணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாம் என்பது வள்ளல் பெருமானார் கருத்து.

வள்ளல் பெருமானார் இறைவனை வழிபடும் முறையிலும் புதுமையை புகுத்தினார். அப்புதுமை வழிபாடே சோதி வழிபாடு என்கிற ஒளி வழிபாடாகும். இறைவனைக் கருணையே வடிவமாகக் கொண்டு அருளை விளக்கமாகச் சிந்தித்து, இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது என வள்ளலார் கண்டார். எல்லா சமயங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பொதுவான வழிபாடே அருட்பெருஞ்சோதி வழிபாடாகும்.


வள்ளலார் அறிமுகப்படுத்திய அருட்பெருஞ்சோதி வழிபாடு மனிதன் தனக்குள் ஒளிந்து உள்ளொளியாக இருக்கும் இறைவனை உணரவும் அவ்வுள்ளொளியைப் பெருக்கிக் கொள்ளவும் உதவுவதோடு மட்டுமல்லாது ஆன்மலாபமாகிய மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறலாம் என்பதே வள்ளலாரின் ஒளிவழிபாட்டின் முடிந்த முடிபாகும்.

வியாழன், 2 அக்டோபர், 2008

மொழி வாழ இனம் வாழும்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், உயர்ந்தபண்பாட்டின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஆக இன்று உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் நடப்பில் உள்ள மொழிகள் மொத்தம் 6800 என மொழியியல் ஆய்வாளர்கள் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது. இவற்றில் பேசவும் எழுதவும் வல்லமை கொண்ட மொழிகள் எழுநூறுக்கு மேற்பட்டவையாகும். தன் சொந்த வரிவத்தில் எழுதப்படும் மொழிகள் சில நூறு மட்டுமே. இவ்வாறு உலகில் பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்து வந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்கும் மூல மொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அவை முறையே தமிழ்,எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருதம்,சீனம் என்பனவாகும் இவற்றில் ஏசுநாதர் பேசிய எபிரேய மொழி, சாக்ரடீசு பேசிய(ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி(சமற்கிருதம்) என்பன இன்று வழக்கில் இல்லை. ஆனால், இத்தனை மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமோடு வாழ்ந்து இன்றளவும் சீரிளமைக் குன்றாது சிறப்புற வாழ்கின்ற ஒரே மொழி நமது தமிழ்மொழியே. கன்பூசியஸ் பேசிய சீன மொழியும் பழமையான மொழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.

இன்றைக்கு ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கீரீக், எபிரேய மொழியிலிருந்து உருவான ஈப்ரு, நவீன இலத்தீன், ஆலயங்களில் எஞ்சி இருக்கிற சமற்கிருதம், சீனம் தமிழ் ஆகியவைகளே பழமை மொழிகளாக அங்கீகரிகப்பட்டுள்ளன. இந்தியாவில் சமற்கிருதம் பார்ஸ்சி,அரபி இப்போது தமிழ் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே மொழி தான் ஒத்துப் போகிறது. அந்த மொழி நம் தமிழ்மொழி என்று கூறுகிறார் உலகின் மாபெரும் மொழி அறிஞர் மூதறிஞர் நோம் சாம்சுகி கூறுகிறார்.

தமிழ்மொழி இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப்பழமையான மொழி. அது, தனித்துவமான இலக்கணம், இலக்கியம் கொண்டது. கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதர் “பெஸ்கி” எனப்படும் வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவேல் மற்றும் எல்லீஸ் ரேணியஸ், பாப்ரீசியர் ,ராட்லர், வின்சுலோ போன்ற பெருமக்கள் மதம் பரப்புவதற்காகத் தமிழ் படிக்கத் தொடங்கியபோது தமிழின் இனிமை, அதன் இலக்கியச் செழுமை, தனித்துவமான வரலாறு, மரபு சார்ந்த அறிவியல் ஆகியனவற்றைப் படித்து மயங்கி, வியந்து தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள். தமிழில் இருந்த தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், திருமந்திரம், திருவாசகம், நாலடியார் போன்ற பழந்தமிழ் நூல்களைப் படித்து வியந்து தமிழின் மீது காதலே கொண்டார்கள்.

தமிழின் இனிமை, தொன்மை, இலக்கணம், உயர்வான இலக்கியம் என்பன அந்த மேல்நாட்டு அறிஞர்களைத் தமிழ்ப்பத்தர்களாக மாற்றியது. இது வரலாற்று உண்மை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது நேசிப்பவர்களை நேசிக்க வைக்கும் மொழி. அதனை அனுபவித்தால் தான் அதன் இனிமை புரியும். எனவே தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பேர் என்றார்” அவர் பிறிதொரு கவிதையில்

இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்
கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது

என்கிறார். மகாகவி பாரதியாரோ உச்சநிலைக்குச் சென்று
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம் ! என்று பாடுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு மேலே போய் ஒரு கட்டளையும் இடுகின்றார்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்
வகை செய்தல் வேண்டும். என்பதே அது.

எனவே,தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய ஒவ்வொரு தமிழரும் வினையாற்ற வேண்டும் என்பது நமது அவா .

நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

சொற்சிறப்பு


உலக மொழிகளிலே தமிழ்மொழியைத்தான் மூன்றாக வகைப்படுத்திச் சிறப்பித்து முத்தமிழ் என்றார்கள். தமிழ்மொழிக்குள்ள சிறப்புகளுள் சொற்சிறப்பு என்பதும் ஒன்று. ஓர் எழுத்தே சொல்லான விந்தை தமிழில் தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஆ-பசு 2. நா- நாக்கு 3. கோ-மன்னன் 4. தீ-நெருப்பு 5. ஈ- ஓர்உயிர்
6. பூ- மலர் 7. மா- குதிரை 8. மை- கண்மை 9. பா- பாடல் 10. தை-மாதம்


ஆங்கில மொழியில் ஓர் எழுத்துச் சொல் அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் தமிழில் மட்டும் ஓரெழுத்து சொல்லான விந்தை உண்டு.

பிறமொழிச் சொற்கள் வெறுமனே உருவத்தை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், தமிழ்மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் சேர்த்தே காட்டக் கூடியன. காட்டுக்கு சில:-

1. பாலன் - 7- வயதுக்கும் கீழ்
2. மீளி - 10- வயதுக்கும் கீழ்
3. மறவோன் - 14- வயதுக்கும் கீழ்
4. திறலோன் - 14- வயதுக்கு மேல்
5. காளை - 18- வயதுக்கு மேல்
6. விடலை - 30- வயதுக்குக் கீழ்
7. முதுமகன் - 30- வயதுக்கு மேல்


இந்த ஏழு பருவத்தை

1. பிள்ளை - குழந்தைப் பருவம்
2. சிறுவன் - பால பருவம்
3. பையன் - பள்ளிப்பருவம்
4. காளை - காதற்பருவம்
5. தலைவன் - குடும்பப் பருவம்
6. முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7. கிழவன் - மூப்புப் பருவம்

என்றும் சொல்லலாம். இதே போன்று பெண்களின் ஏழு பருவத்தையும் வேன்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.

1. பேதை - 5- வயதுக்கும் கீழ்
2. பெதும்மை - 10- வயதுக்கும் கீழ்
3. மங்கை - 16- வயதுக்கும் கீழ்
4. மடந்தை - 25- வயதுக்கும் மேல்
5. அரிவை - 30- வயதுக்கும் கீழ்
6. தெரிவை - 35- வயதுக்கும் கீழ்
7. பேரிளம்பெண் - 55- வயதுக்கு கீழ்

மனிதனின் இந்த ஏழு பருவத்துக்கும் சாதாரண மக்கள் பயன் படுத்துகிற ஆங்கிலச் சொற்கள் என்ன? “baby யும் “Child”ம் ஒரே அர்த்தம் கொண்டவை. அப்புறம் “young Boy”என்றும் “Adult Man”என்றும் “Young Man” என்றும் “old Man” “old lady” என்றும் சொல்வது தமிழைப்போல் பருவத்திற்கு ஏற்ப பொருந்துமா ?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

வியாழன், 25 செப்டம்பர், 2008

மலேசிய மாமூலர் ஐயா.அபு.திருமாலனார் அவர்கள்


மலேசிய தமிழ்க்கூறு நல்லுலகில் அரைநூற்றாண்டு காலமாக தமிழுக்கும் தமிழருக்கும் அயராது பாடாற்றியவர்தாம் மெய்ப்பொருளறிஞர் என பல்லோராலும் போற்றப்பட்டு தனித்தமிழ்ப் பாவலராக விளங்கியவர் பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்கள். மலேசிய நாட்டிலே இன்றளவும் மொழி, இனம் ,சமயம் என முக்கூறுகளும் பேசப்பட்டு வருதற்கும் தமிழைப்புறக்கணிக்காமல் மறவாமல் காத்து வருதற்கும் வித்திட்டவர்களில் முகாமையானவர். வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர்.; பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்ப் பாசறையில் தவழ்ந்து துறைதோறும் துறைதோறும் தமிழ்ப்பணியாற்றியவர். தமிழுக்காக தம்மையே ஈகம் செய்து தொண்டுகள் பல செய்து தமிழாய்ந்த அறிஞர்.


இத்தனை மாண்புகளுக்கும் உரிய பாவலர் ஐயா அ.பு திருமாலனார் அவர்கள் 08.06.1931 ஆம் ஆண்டு திங்கட்கிழமை 10.40.க்குச் செலாமா ஓலிரூட் தோட்டத்தில் மு. அரிபுத்திரனார்- சி.அன்னப்பூரணியம்மாள் இணையரின் இரண்டாம மகவாகப் பிறந்தார். மாலிய (வைணவ) மரபுப்படி “நாராயணசாமி” எனப்பெயரிடப்பெற்றார். பின்னர் தமிழின் மீது தீராத பற்றுதலின் காரணமாகத் தனது பெயரை திருமாலன் எனத் தமிழ்ப்படுத்தினார். பாவலர் அவர்கள் தனது எட்டாம் அகவையிலேயே இராமாயண மகாபாரதங்களை இசைகூட்டி கேட்பார். பள்ளிப் படிப்பிலும் முதல்தர மாணாக்கராகவே விளங்குவார். மெய்ப்பொருளறிஞர் பாவலரின் உடன் பிறந்தார் இருவர்,தமக்கையார் வீரம்மாள், தம்பி மனியனார். பாவலர் ஐயா அவர்கள் 22.10.1962 -இல் கெ.மீனாட்சியம்மையாரைக் கரம்பற்றினார். இவருக்கு அரிபுத்திரன், அரியநாயகன் என் ஆண்மக்கள் இருவர்; அன்பரசி, அன்புமலர் எனப் பெண்மக்கள் இருவர்.


மலையகத்தில் அக்கால் தமிழ்மக்கள் படும் பாட்டையெல்லாம் கண்டு கண் கலங்கி அவர்களின் துயரைத்தீர்க்க தக்க வழிவகைகளைத் தேடிய வண்ணம் இருந்தார் ஐயா அவர்கள். சிறு-சிறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு ஓய்வு வேளைகளில் தமிழ்ப்பணியினையும் பகுத்தறிவுப் பணியினையும் மேற்கொண்டார். அவற்றுள் சாதியொழிப்பு, மதுவொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தொழிலாளர் ஒற்றுமை போன்றவை குறிப்பிட்டு சொல்லத்தக்கப் பணிகளாகும். அதோடுமட்டுமின்றி தமிழர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற பொது அமைப்புகளிலும் ஈடுபட்டு உழைத்தார்.தமிழின்பால் இருந்த பற்றுதலின் காரணமாக 1970 இல் செலாமாவில் திராவிடர்க்கழக கிளையை அமைத்து அதன் தலைவராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். மொழி,இனம், சமயம் என முக்கூறுகளையும் தனது வாழ்வியல் நெறியாகப் போற்றியப் பெருமகனார் 1983-ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் நெறிக்கழகத்தைத்தோற்றுவித்தார். மொழி,இனம்,சமயம் என மட்டும் வாழாமல் நாடகத்துறையிலும் கால்பதித்தவர் அ.பு.திருமாலனார் அவர்கள். பாவலரே பல நாடகங்களை எழுதி இயக்கவும், பாடல்களைப் புனைந்து இசையமைக்கவும் வல்லவரானார். 1951-இல் செலாமாவில் தமிழ்ப்பள்ளிக் கட்டிடநிதிக்காக “பதிபக்தி” எனும் நாடகத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து நடித்தது செலாமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தகவலாகும். இவர் எழுதிய தனியிசைப் பாடல்கள் 300க்கும்மேற்பட்டதாகும். தமிழ்க்கூறு நல்லுலகிற்காக இவர் இயற்றிய கலைப்படைப்புகள்வருமாறு:


 • நாடகங்கள்
 1. பாவத்தின் பரிசு
 2. சூழ்ச்சி
 3. மலர்ந்த வாழ்வு
 • நெடுநாடகங்கள்
 1. திருந்திய திருமணம்
 2. பரிசுச்சீட்டு
 3. சந்தேகம்
 4. பாட்டு வாத்தியார் பக்கிரிச்சாமி
 5. என்று விடியும்
 6. மீண்டும் இருள்
 • படைப்புகள்
 1. கட்டுரைகள் 15
 2. ஆய்வுக்கட்டுரைகள்
 3. விளக்கக் கட்டுரைகள்
 4. மறுப்புக் கட்டுரைகள்
 5. 200க்கும் மேற்பட்ட கவிதைகள்
 • வெளிவந்த நூல்கள்
 1. கனல் (பாநூல்)
 2. இனப்பற்று ( கட்டுரை நூல்)
 3. தமிழ் நெறி விளக்கம் ( பொழிவு நூல்)
 4. தேவையற்றது எழுத்துச் சீர் திருத்தம்
 5. தமிழர் வாழ்வறத்தில் தாலி

இவ்வாறாக உடலாலும் உள்ளத்தாலும் தமிழுக்காகவே வரலாறாய் வாழ்ந்த மெய்ப்பொருளறிஞர் பாவலர் ஐயா 29.04.1995 ஆம் ஆண்டு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவர் விட்டுச்சென்ற பணியினை மலேசிய நாட்டிலே இன்றளவும் ஆயிரம்-மாயிரம் உண்மை தொண்டர்களால் உயிரூட்டப்பெற்று வருவது மலேசியத் தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் பேறாகும்.

புதன், 24 செப்டம்பர், 2008

இவனா தமிழன்? இருக்காது


இவனா தமிழன் ? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத்
தடுத்தால் உடனே சீறுகிறான்!

வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்!
வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

தானும் முறையாய்ப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன் கடன் பேணி நடப்பதில்லை- நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்குப் பின்னும் வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழிப்பவனே –தான்
அடைந்ததை எல்லாம் இழப்பவனே!


நன்றி:- உங்கள் குரல்

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

தமிழ் ஆலயம் கண்டனம்

தமிழ்க்கூறு நல்லுலகில் மதித்துப் போற்றத்தக்க வகையில் பல தமிழ்க்காப்பு பணிகளை முன்னின்று நடத்தி வரும் மலேசியத்தின் தமிழ்மறவர் ஐயா.இரா.திருமாவளவனாரைக் கண்டித்த தமிழ் நாளிதழுக்கு நமது தமிழ்ஆலயத்தின் பதில் .

திருமாவளவன் என்பவர் ஒரு தனி நபர் அல்ல என்பதைத் தாங்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மானமுள்ள மலேசியத் தமிழனின் மறு அடையாளம் தான் திருமாவளவனார் அவர்கள். அவ்வகையில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நிகழ்வில் அவர் பேசிய பேச்சில் எவ்வித குறையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.அவர் பேசும்போது தங்கள் தமிழ்நாளிதழை மட்டும் குறிவைத்துப் பேசவில்லை. மாறாக நமது மலேசியத் திருநாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த ஊடகங்களையும் தொட்டு தான் அவருடைய பேச்சு இருந்தது. ஆனால், தங்கள் நாளிதழில் அன்னவரைப் பழிக்கும் நோக்கத்தில் “திருமாவளவனே நாவை அடக்கு” என செருக்குத் தனமாக செய்தி வெளியிட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஐயா.திருமாவளவனாரைப் பழித்துப் பேசுவதற்கு இந்நாட்டில் உள்ள எவருக்கும் கிஞ்சிற்றும் தகுதியும் அருகதையும் கிடையாது. மொழி,இனம்,சமயம் என முப்பெரும் கொள்கைகளை வாழ்வியலாகக் கொண்டு நம் நாட்டில் மட்டுமல்லாது உலக நிலையிலும் மொழிக்காகவும் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஐயா அவர்களின் பணிகள் எண்ணிலடங்கா. அவரைக் கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டியத் தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

அவர் பேசியதை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக்கூறும் கருத்துக் குருடர்கள் முதலில் தங்கள் நாளிதழில் உள்ள குறைகளை அடையாளம் காணுதல் வேண்டும். உண்மை எப்பொழுதும் சுடத்தான் செய்யும். தமிழால் வயிற்றைக் கழுவி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தாங்கள் உண்மையிலேயே தமிழுணர்வாளர்களா? என்று என்னத் தோன்றுகிறது. இற்றைய நிலையில் மொழிக்கொலைகளுக்கு பண்பாட்டுச் சிதைவுகளுக்கும் தகவல் ஊடகங்களான நாளிதழ், தொலைக்காட்சி, இணையம், வானொலி போன்றவையே முகாமையான காரணங்களாகும். இளைஞர்கள் கெட்டு சீரழிவதற்கும் நாளிதழ்களே முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதைத்தான் அவரும் சாடியிருக்கிறார்.அதில் என்ன தவறு இருக்கிறது. நாளிதழைத் திறந்தாலே தேவையற்ற மது விளம்பரங்கள், மொழிப்பிழைகள், சினிமா நடிகைகளின் ஆபாச காட்சிகள் பிறமொழிசொற்கள் போன்றவைதான் அதிகமாகத் தென்படுகின்றன.

எப்படியெல்லாம் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்க முடியுமோ அதற்கு துணை நின்றுவிட்டு இளைஞர்கள் சீர்கெட்டுவிட்டார்கள் என்று சொல்லுவதில் என்ன பயன் இருக்கிறது. இதைத்தான் மலையகக் கவிஞர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் - அதைத்
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!


மொழியாலும் இனத்தாலும் தமிழனாக வாழும் மானமுள்ள தமிழனுக்குத் தான் இது புரியும். மற்றவருக்கு இது வேப்பங்காயாகக் கசக்கத்தான் செய்யும். உண்மைத் தமிழுணர்வாளர்களை மதிக்கத் தெரியாத இவர்கள் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ்நாளிதழ்கள் தாய்மொழியின் மாண்பினையும் பண்பாட்டினையும் தூக்கிப் பிடிப்பதற்கு பங்காற்றவேண்டுமே ஒழிய மாறாக பண்பாட்டையும் மொழிச்சிதைவையும் ஊக்கப்படுத்துகின்ற பணிக்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது.

அவனவன் வாயாலன்றி ப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் காதாலன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பெறனெவன் காப்பான் வந்தே.
மலேசிய மாமூலர்
அ.பு.திருமாலனார்

இறுதியாக, தமிழினத்தை வடிவமைப்பதில் தமிழ்நாளிதழுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு ஆகவே, தாங்கள் சமுதாயப் பொறுப்பினை உணர்ந்து செயல்படுமாறு விழைகின்றோம். இல்லையேல் நாளைய தலைமுறை நம்மை காறி உமிழும் நிலைக்கும் நாம் ஆளாகுவோம் என்பது மட்டும் உறுதி.

உண்மைத் தமிழர்கள் சிந்திப்பார்களா....

ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை
எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும் மற்றை
இனத்தார்க்கே மண்டியிடான்
மண்டியிட்டால்...
பெற்றவர்மேல் ஐயம் ... பிறப்பின் மேல் ஐயம்
என சற்றும் தயக்கமின்றி சாற்று.


தமிழே தமிழரின் முகவரி

தாய்தமிழ்ப்பணியில்,

கோவி.மதிவரன்

திங்கள், 22 செப்டம்பர், 2008

தமிழின் எதிர்காலமும் தமிழர்களின் எதிர்காலமும்

ஐயம் : இந்நாட்டில் தமிழின் எதிர்காலமும் தமிழர்களின்
எதிர்காலமும் எப்படி இருக்கும் ?

தெளிவு :

தமிழின் எதிர்காலமும் தமிழனின் எதிர்காலமும் காலத்தைப் பொறுத்ததுதானே. தமிழனின் எதிர்காலம் குறித்து ஆருடம் சொல்வதல்ல என் வேலை. எப்படி இருக்கவேண்டும் என வியூகங்கள் வகுப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும். சதா பாறையின் மீது மோதிச் சிதறும் கடலைகள் போலத்தான் காலங்கள் தோறும் நம்மை நோக்கிப் பிரச்சனைகளும் சவால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். இருக்கட்டுமே. எந்த சவால்களையும் எதிர்நோக்க, வெற்றி கொள்ள என்ன இல்லை நமக்கு. ஆண்ட பரம்படை நாம், ஒரு நீண்ட பாரம்பரியத்தின், சிந்தனை மரபின் இன்றைய புதல்வர்கள் நாம். அறிவு இருக்கிறது நம்மிடம்; ஆற்றல் இருக்கிறது நம்மிடம்; உழைப்பு இருக்கிறது நம்மிடம். உண்மை இருக்கிறது நம்மிடம். யாரோ உருவாக்கி நம் கையில் திணிப்பதல்ல எதிர்காலம். நாமே உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது நமது எதிர்காலம். நாளைய சமூக, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றம் காண இன்றே நாம் வியூகங்களை வகுப்போம். அந்தந்தத் துறை அறிஞர்களை அழைத்துப் பேசுவோம். செயலாற்றுவோம்; அதன் பயன்கள் கடைசித் தமிழனை சென்றடைஅய் வழிகாண்போம். நாளைய சூரியன் பேரொளியாகத்தான் இருப்பான். விழி திறந்திருப்பவனுக்குத் தானே “விடியல்” என்பது.

நன்றி:- செம்பருத்தி

கடவுள் மறுப்புக்கு தமிழ் விருப்புக்கும் என்ன தொடர்பு ?

ஐயம் : இளமாரன்,பினாங்கு
ஐயா, கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் என்ன
தொடர்பு? உங்கள் கருத்து..?
தெளிவு :

கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.ஆனால்,இற்றைய நிலையில் தமிழ் மீது பற்றுள்ளவர்களும் தமிழ் உணர்வு கொண்டவர்களும் கடவுள் மறுப்பாளர்களாகச் சித்தரிக்கப்டுகின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையாகும்.வரலாற்றில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட தவறான கோட்பாடாகும்.

தமிழ் விருப்பு என்பது இறை விருப்புக்கு இட்டுச்செல்லுமே தவிர ஒருபோதும் இறை மறுப்புக்கு வித்திடாது. அதனால் தான் நமது தமிழின அருளாளர்கள் திருமூலர் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யுமாறே என்றும்;திருநாவுக்கரசர் “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றும்; திருஞானசம்பந்தர் “நாளும் தமிழ்வளர்க்கும் திருஞானசம்பந்தன்” என்றும் பாடியுள்ளனர். சிவபெருமானே சொற்றமிழால் எமைப் பாடுக என்று கேட்ட வரலாறும் உண்டு.

ஆக, தமிழ் இறைமைக்கு எதிரானது அல்ல மாறாக இறைமையை ஏற்றிப் போற்றுவதற்கு ஏற்றதொரு மொழி. சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாம்,கிருத்துவம் என பல சமயத்தவரும் போற்றி வளர்த்த ஒரே மொழியாக தமிழ் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் இயற்கையோடு இயைந்த இறைமொழியாகும். தமிழ் விருப்பு பெருகினால் கடவுள் மறுப்பைவிட கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மறுக்கும் பகுத்தறிவு தான் வளரும். பகுத்தறிவு ஒருபோதும் கடவுள் மறுப்பு ஆகா. தமிழ் அறிவு மொழி என்பதால் தமிழ்ப்படித்தால் பகுத்தறிவு பெருகும், உண்மையைப் பகுத்தறிந்து உயர்ந்த கடவுள்நெறியை உணர்ந்து கொள்ள உதவும்.


ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

செந்தமிழ்க்குறிஞ்சி சா.சி. குறிஞ்சிக்குமரனார் அவர்கள்செந்தமிழ்க்குறிஞ்சி என பல்லோராலும் அழைக்கப்படும் முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் மலேசிய இலக்கிய உலகில் தன்னிகரற்ற பாவலராக உலாவந்தவர். மலேசியாவில் பாவாணர் கண்டு காட்டிய வழிதடத்தில் தூய தமிழைப் பரப்பிய பெருமகனார். இவர் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம், அரசியல் என எல்லாத் துறைகளிலும் தம்மை முழுமையாக ஈகப்படுத்திக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன் கருதாது உழைத்த நற்றமிழ்ப் பெருமகனார்.

முதுபெரும் பாவலர் ஐயா அவர்கள் 05.05.1925-ஆம் நாள் காரிக்கிழமை(சனி) தமிழகத்தில் முகவை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இரணசிங்கம் எனும் சிற்றூரில் சாத்தையா,சிட்டாள் இணையருக்கு முதலாவது செல்வமகனாகப் பிறந்தார். ஐயா அவர்கள் 1930-ஆம் ஆண்டு திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு ஆணிவேராகவும் மூச்சாகவும் விளங்கியவர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள்.

இவரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும். 1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழி சுயமரியாதைப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராக மாறினார். ஊழிப்பேரறிஞர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் “ஒப்பியன் மொழிநூலைப்”பார்க்கும் வாய்ப்பைப் பெற்று அதிலிருந்து தூய தமிழ்ப்பற்றாளரானார். 1946-ஆம் ஆண்டிலே ம.இ.கா-வில் உறுப்பியம் பெற்று பேரா மாநில இலக்கியப் பகுதி பொறுப்பாளராக அமைந்து பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தன், மருத்துவர் அ.சிதம்பரநாதன் போன்றோர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்த பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைப்பெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார்.


அன்னவருக்குத் தனித்தமிழ் உனர்வு மேலோங்கி இருந்த கரணியத்தால் தூய்தமிழ்க் கொள்கைகளைப் பரப்பவும் முனைந்தார். எனவே, பாவாணர் மன்றத்தைத் தோற்றுவித்து பல எழுத்தாளர்கள்,பாவலர்கள், சொற்பொழிவாளர்கள் பலர் தோன்றுவதற்கு வித்தாக அமைந்தவர் ஐயா அவர்கள். உலகிலேயே பாவாணருக்கு மன்றம் அமைத்த பெருமை அவரையே சாரும். அவர்களில் தமிழ்மணி எல்லோன், பெ.கோ.மலையரசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாவாணர் தமிழ் மன்றத்தின் வழி தமிழகத்திலுள்ள பேராசிரியர் பலரை அழைத்து மொழி, இலக்கியம் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்துள்ளார். அவர்களில் குறிப்பாக பாவலரேறு பெருஞ்சித்திரனார், முனைவர் தமிழ்க்குடிமகனார், வ.சு.ப மாணிக்கனார், கு.ச.ஆனந்தனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், மலேசியாவில் தனித்தமிழ் உணர்வு பெற “தென்மொழி” “தமிழ்ச்சிட்டு” “தமிழ்நிலம்” போன்ற இதழ்களை வரவழைத்து தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.


பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி “தமிழ்ச்செல்வர்” என்ற விருதைப் பொற்பதக்கத்தில் வழங்கியது சிறப்புக்குரிய ஒன்றாகும். பாவலர் அவர்களின் அயராத தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாஜா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க்கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.

செலாமாவில் உள்ள தமிழ் நெறிக்கழகத்தின் ஏடலராகவும் இருந்து இனம், மொழி, குமுகாய மறுமலர்ச்சி உணர்வுடன் பல்லாற்றானும் பாடாற்றி வந்தவர் குறிஞ்சியார் அவர்கள். ஐயா அவர்கள் “பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியும் பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கட்டுரை படைத்துள்ளார். சித்த மருத்துவத்தில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற இவர் அதனையே தனது தொழிலாக நடத்தி வந்தார். அன்னவர் பல்வேறு மருந்துகளுக்கு தனித்தமிழ்ப் பெயர்களையே வைத்திருந்தது தனிச்சிறப்பாகும்.

மலேசியத் தனித்தமிழ் வளர்ச்சிக்கு தன் வாழ்நாள் முழுவதும் ஈகப்படுத்தி பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55க்கு மீளாத் துயில் கொண்டார். இவர் மறைந்தாலும் இவரின் தனித்தமிழ்க் கொள்கை இன்றும் மலேசியத் தமிழர்களிடையே வேரூன்றி இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

சனி, 20 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு 2

ஐயம் : ஐயா வணக்கம். தமிழில் பிறமொழிச் சொல் கலந்தால்தான் நல்லது
என்றும் அது மொழி வளர்ச்சிக்கு உகந்தது என்று பலர்
ருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன ?தெளிவு :

சொல் வளம் இல்லாத மொழிகள் பிறமொழிகளிலிருந்து கடன் பெறலாம். ஆனால் சொல்வளமும் உருவாக்கத் திறமும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான தமிழ் போன்ற மொழிகள் பிறமொழிகள் கலந்தால் வளரும் என்று கூறுவது பேதமையாகும். பிறமொழி கலவையினால் தமிழ் வளரும் என்பது உண்மையானால் இந்தியா முழுமையிலும் விளங்கிய தமிழ் இன்று தேய்ந்து சுருங்கி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். மொழியியலாளர்கள் ஒருமொழியோடு பிறிதொரு மொழி கலந்தால் புதிய மொழி ஒன்று உருவாகிவிடும் என்கின்றனர். எனவே, இருக்கின்ற தமிழையும் இல்லாது செய்கின்ற சூழ்நிலை உருவாகுமே அல்லாமல் மொழிவளரும் என்று சொல்லுதல் பொருந்தாது.


நன்றி:- தமிழ்நெறி

வியாழன், 18 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு

தமிழ்த்தெளிவு 1

ஐயம் : ஐயா சிலர் “திரு” எனும் சொல்லைச் “ஸ்ரீ”
என்கிறார்களே சரியா?

தெளிவு : திரு எனும் அருந்தமிழ்ச் சொல்லைச் சொல்ல
முடியாமல் சமற்கிருத மொழியில் ஸ்ரீ என்றனர்.
திரு> ச்ரு> ச்ரி> ஸ்ரீ என்று சமற்கிருதத்தில் திரிந்தது. தமிழில்

திருவைத்தான் பயன்படுத்த வேண்டுமேயொழிய ஸ்ரீ யைப்
பயன்படுத்தக்கூடாது. தமிழிலும் ஸ்ரீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று யாராவது கூறினால் அது மூடத்தனம்.


நன்றி :- தமிழ்நெறி

புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ்ச் செம்மொழி நாள்

செம்மொழி யாவினும் செம்மொழிசெம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
ஏறுது வானடியோ!

இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
செம்மொழி ஈதடியோ !

எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
இம்மொழி விண்மொழியோ!

எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
இம்மொழி யாமடியோ!
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
எந்தமிழ் மேலடியோ!

செம்மையும் தூய்மையும் சீர்குறை யாமலே
செய்குவம் தொண்டடியோ!
மும்மையும் செந்தமிழ் மூவா மொழியென
முந்துற வாழியரோ!

ஆக்கம்;
நல்லார்கினியனார்
செ.சீனி நைனா முகம்மது

 • குறிப்பு :(வல்லின மெய் இல்லாத பாட்டு)
வண்மொழி (வளம்)
மண்மிசை இதுபோல் ஏது ?(தனித்தன்மை)
எந்நெடுங்காலமும் செம்மொழி (நிலைபேறு)
எம்மொழி சொல்லினும் இன்மொழி(இனிமை)
செம்மை (ஒழுங்கு)
மும்மையும் மூவா மொழி(இளமை)
தொன்மொழி (பழமை)
எம்முறை தேரினும் செம்மொழி(முழுமை)
தாயடியோ(மூலத்தன்மை)
விண்மொழி(மேன்மை)
தூய்மை(தனித்தியங்கும் ஆற்றல்)
முந்துற வாழி(முதன்மை)

 • நன்றி:-தமிழ்ச் செம்மொழி சிறப்பு மலர்

தமிழ் ஆலயம் - வலையுலக அறிமுகம்


என் இனிய வலையுலகத் தமிழன்பர்களே,
வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!


 • தமிழ்மொழி, பண்பாடு, தமிழர் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் அடங்கிய தமிழ்த் தளமாக இவ்வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்வு எய்துகின்றேன்.

 • தமிழாலயம் மொழியின் வழியாகத் தமிழரை ஒன்றிணைக்கும் ஆலயமாக விளங்க வேண்டும் என்பதே நமது அவா.

 • தமிழ்நாடு அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிப்பு செய்த நாள் 17.09.2004.

 • தமிழ்மொழி வரலாற்றில் சிறப்புமிக்க அந்த அறிவிப்பு வெளிவந்து இன்றோடு (17.09.2008) நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.

 • இந்த நன்னாளில் 'தமிழ் ஆலயம்' என்ற இவ்வலைப்பதிவைத் தமிழர் உள்ளங்களில் பதிவு செய்வதில் பெருமையடைகின்றேன்.
 • உலகத் தமிழன்பர் அனைவரின் உறவையும் உற்ற ஆதரவையும் நாடி இந்த அளவில் விடைபெறுகிறேன்.


இறுதியாக,
தமிழே தமிழரின் முகவரி அதுவே நமது உயிர்வரி!
தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு! தமிழுக்காகவே ஒன்றுபடு!


அன்புடன்;
கோவி.மதிவரன்
தொல்லூர்(செலாமா) - வெள்ளி மாநிலம் - மலேசியா,
17.09.2008