தமிழ்த் தெளிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தெளிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2009

மாமூலர் என்பதன் பொருள் என்ன ?

அழகன்

ஐயம் :

மாமூலர் என்றால் என்ன பொருள் ஐயா? திருமூலருக்கும்
மேன்மையாக காட்டவேண்டி அப்படி ஒரு அடைமொழியா?

தெளிவு :

மாமூலர் என்பதற்கு பெரிய ஆற்றலாளர் என்பது பொருளாகும். சங்க காலத்தில் மாமுலனார் என்ற புலவர் வாழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அவரைப் போன்று மலேசியாவில் மெய்யறிவை உணர்த்திய மிகப்பெரிய ஆற்றலாளர் தான் ஐயா அவர்கள். மலேசியத்தில் ஒப்பற்ற மீமிசைச் சான்றோராக விளங்கியவர் செந்தமிழ்க்குறிஞ்சியார். அவரே பாவலருக்கு இச்சிறப்புப் பெயரை வழங்கியிருப்பது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும். ஆனால், திருமூலருக்கும் மேன்மையாக நாம் யாரையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடுவதும் சரியாகாது.

தமிழ்ப்பெண்களும் குங்குமமும்

கபிலன்

ஐயம் :
நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி,தலை வகிட்டில்
குங்குமம் இடுகின்றனரே? இதற்கு சமய விளக்கம் ஏதேனும்
உண்டா? இந்தப் பழக்கம் ஏதோ அந்நிய வரவாக
உணர்கிறேன். விளக்கம் தேவை

தெளிவு :

முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் நெற்றியில் அரத்தத்தைக்(இரத்தம்) கொண்டு வீரத்திலகமிடுவது தமிழர்களின் பண்பாடாகும். பிற்காலத்தில் அம்மை வழிபாடு தோன்றியப் பிறகு போருக்குப் போகும் வீரர்கள் வெற்றியை வேண்டி அம்மனை வழிபட்டு போருக்குச் சென்றனர். வீரத்திலகமிடும் மரபு ஏற்கெனவே இருந்துள்ளதால் இப்போது அம்மனை வழிபட்டு அரத்தத்திற்கு(இரத்தம்) பதில் குங்குமத்தால் திலகமிட்டுச் சென்றுள்ளனர். இதுவே, பின்னாளில் சமய மரபாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், நெற்றியில் குங்குமம் இடுவதுதான் தமிழர்களிடம் இருந்துள்ளது. தலை வகிட்டில் இடுவது தமிழர்களிடம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. இந்தப் பண்பாடு வடவர்களுக்கே உரியதாகத் தெரிகிறது. பண்பாடு அறியாத இன்றையப் பெண்கள் நமது பண்பாடு என்று நினைத்து ஆரியப் பண்பாட்டை பின்பற்றுவதும் போற்றி புகழ்வதும் நகைப்பிற்கிடமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மட்டிலும் தலை வகிட்டில் குங்குமம் இடுவது நமது பண்பாடு அல்ல. இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாம். நன்றி

வெள்ளி, 19 டிசம்பர், 2008

தமிழருக்கும் திராவிடருக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

குமரன் கூலிம் கடாரம்

ஐயா: தமிழர் திராவிடர் என்னும் இரண்டுக்கும் இடையிலான பொருள் வேறுபாடு என்ன ?


தெளிவு :

தமிழர் என்ற சொல், முதலில் தோன்றியது;தொன்மையானது.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிப்பது. தமிழர் என்ற சொல்லை ஆரிய இனத்தார் சொல்ல முற்பட்டபோது, இயலாத நிலையில் திரிந்து உருவாகியது திராவிடர் என்ற சொல்லாகும்.

தமிழர் - தரமிளர்- திரமிளர் - திரமிடர் - திரவிடர் - திராவிடர் என்று திராவிடர் எனும் சொல் உருவாகியது; திராவிடர் என்று ஆரியர் தமிழரைப் பார்த்தே குறிப்பிட்டனர்.பின்னாளில் கால்டுவெல் எனும் அறிஞர் தெலுங்கு, மலையாளம், உட்பட்ட 23 மொழிகளை ஒரு குடும்பமாகக் கட்டமைத்து அந்தக் குடும்பத்தைத் திராவிட மொழிக்குடும்பம் என பெயரமைத்தார். உண்மையில் திராவிடம் என்பது தமிழையே குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி : தமிழ் நெறி

வியாழன், 13 நவம்பர், 2008

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தெளிவு :


மொழி என்பதுஓர் இனத்தின் உயிர் நாடி, பண்பாட்டு அடையாளம், ஓர் இனத்தின் முகவரி. நம் மொழி நம்மைக் காட்டும். ஒருவருடைய பெயரைக் கேட்டதுமே அவர் என்ன இனம் என அடையாளப் படுத்துவதற்குத்தான் பெயர். ஆனால் இற்றைய நிலையில் பலர் புரியாத மொழிகளில் பெயர் வைப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இதை விட வெட்கக் கேடானா செயல் ஒன்றுமில்லை. இன அடையாளம் இல்லாத நிலையில் வாழும் ஒருவன் உலகத்தில் மதிப்பிழந்து போய்விடுவான் என்பது வரலாற்று உண்மை. அவ்வகையில் நமது மொழியையும் பண்பாட்டையும் இழந்து விட்டு அடையாளம் இல்லாத இனமாக வாழ்வதைவிட இறப்பதே மேல். எனவே, நமது மொழியின் வரலாற்றுச் சிறப்பினையும் மாண்பினையும் உணர்ந்து நமது குழந்தைகளுக்கு நல்லதமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்; நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

தமிழே தமிழரின் முகவரி

திங்கள், 22 செப்டம்பர், 2008

கடவுள் மறுப்புக்கு தமிழ் விருப்புக்கும் என்ன தொடர்பு ?

ஐயம் : இளமாரன்,பினாங்கு
ஐயா, கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் என்ன
தொடர்பு? உங்கள் கருத்து..?




தெளிவு :

கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.ஆனால்,இற்றைய நிலையில் தமிழ் மீது பற்றுள்ளவர்களும் தமிழ் உணர்வு கொண்டவர்களும் கடவுள் மறுப்பாளர்களாகச் சித்தரிக்கப்டுகின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையாகும்.வரலாற்றில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட தவறான கோட்பாடாகும்.

தமிழ் விருப்பு என்பது இறை விருப்புக்கு இட்டுச்செல்லுமே தவிர ஒருபோதும் இறை மறுப்புக்கு வித்திடாது. அதனால் தான் நமது தமிழின அருளாளர்கள் திருமூலர் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யுமாறே என்றும்;திருநாவுக்கரசர் “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றும்; திருஞானசம்பந்தர் “நாளும் தமிழ்வளர்க்கும் திருஞானசம்பந்தன்” என்றும் பாடியுள்ளனர். சிவபெருமானே சொற்றமிழால் எமைப் பாடுக என்று கேட்ட வரலாறும் உண்டு.

ஆக, தமிழ் இறைமைக்கு எதிரானது அல்ல மாறாக இறைமையை ஏற்றிப் போற்றுவதற்கு ஏற்றதொரு மொழி. சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாம்,கிருத்துவம் என பல சமயத்தவரும் போற்றி வளர்த்த ஒரே மொழியாக தமிழ் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் இயற்கையோடு இயைந்த இறைமொழியாகும். தமிழ் விருப்பு பெருகினால் கடவுள் மறுப்பைவிட கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மறுக்கும் பகுத்தறிவு தான் வளரும். பகுத்தறிவு ஒருபோதும் கடவுள் மறுப்பு ஆகா. தமிழ் அறிவு மொழி என்பதால் தமிழ்ப்படித்தால் பகுத்தறிவு பெருகும், உண்மையைப் பகுத்தறிந்து உயர்ந்த கடவுள்நெறியை உணர்ந்து கொள்ள உதவும்.


சனி, 20 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு 2

ஐயம் : ஐயா வணக்கம். தமிழில் பிறமொழிச் சொல் கலந்தால்தான் நல்லது
என்றும் அது மொழி வளர்ச்சிக்கு உகந்தது என்று பலர்
கருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன ?



தெளிவு :

சொல் வளம் இல்லாத மொழிகள் பிறமொழிகளிலிருந்து கடன் பெறலாம். ஆனால் சொல்வளமும் உருவாக்கத் திறமும் கொண்ட உயர்தனிச் செம்மொழியான தமிழ் போன்ற மொழிகள் பிறமொழிகள் கலந்தால் வளரும் என்று கூறுவது பேதமையாகும். பிறமொழி கலவையினால் தமிழ் வளரும் என்பது உண்மையானால் இந்தியா முழுமையிலும் விளங்கிய தமிழ் இன்று தேய்ந்து சுருங்கி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். மொழியியலாளர்கள் ஒருமொழியோடு பிறிதொரு மொழி கலந்தால் புதிய மொழி ஒன்று உருவாகிவிடும் என்கின்றனர். எனவே, இருக்கின்ற தமிழையும் இல்லாது செய்கின்ற சூழ்நிலை உருவாகுமே அல்லாமல் மொழிவளரும் என்று சொல்லுதல் பொருந்தாது.


நன்றி:- தமிழ்நெறி

வியாழன், 18 செப்டம்பர், 2008

தமிழ்த் தெளிவு

தமிழ்த்தெளிவு 1

ஐயம் : ஐயா சிலர் “திரு” எனும் சொல்லைச் “ஸ்ரீ”
என்கிறார்களே சரியா?

தெளிவு : திரு எனும் அருந்தமிழ்ச் சொல்லைச் சொல்ல
முடியாமல் சமற்கிருத மொழியில் ஸ்ரீ என்றனர்.
திரு> ச்ரு> ச்ரி> ஸ்ரீ என்று சமற்கிருதத்தில் திரிந்தது. தமிழில்

திருவைத்தான் பயன்படுத்த வேண்டுமேயொழிய ஸ்ரீ யைப்
பயன்படுத்தக்கூடாது. தமிழிலும் ஸ்ரீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று யாராவது கூறினால் அது மூடத்தனம்.


நன்றி :- தமிழ்நெறி