தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.
மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.
'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.
தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.
பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.
தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றுஓர்ஆணையிட்டது.
அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.
இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.
பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.
கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.
எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.
ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)
நன்றி: கட்டுரை -முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் அவர்கள்