புதன், 27 மே, 2009

தமிழின வீர வேங்கையும் தமிழர் நிலையும்

உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிரபாகரன் அவர்கள். அம்மாபெரும் தலைவனை அழித்துவிட்டதாகக் கொக்கரிக்கின்றது சிங்களப் பேரினவாத அரசு. உலக வல்லரசு நாடுகளின் ஆதரவுடன் தமிழினத்தைக் வெற்றிகரமாக கொன்று குவித்திருக்கின்றது. சிங்கள அரசு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் வேறூன்றிக் கிடக்கின்ற விடுதலைத் தீயை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
இவற்றுக்கிடையில், உலகத்தமிழர்கள் இனி அடுத்தக் கட்ட போராட்டத்திற்குத் தயாராகுதல் வேண்டும். உலக தமிழின வரலாற்றில் என்று அழியாத புகழைச் சேர்த்திருப்பவர் மாவீரர் பிரபாகரன் அவர்கள். தமிழீழம் மலராமல் தலைவர் அவர்கள் ஒருபோதும் மரணத்தை சந்தித்திக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி. நம்புங்கள் நமது தலைவர் மரணத்தை வென்று மக்கள் மனங்களில் நிற்பவர்.
உலகத் தமிழின விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துப் போராடிக்கொண்டிருக்கின்ற இனியும் போராடும் உண்மைத் தமிழ் வேங்கைக்கு மரணமேது. மாறாக ஒவ்வொரு தமிழின் உள்ளத்திலும் உணர்விலும் நிச்சயம் வீறு கொண்டு எழுவார். வெகு விரைவில் நமது வீர வேங்கைகள் தமிழீழத்தை வென்றெடுப்பர். அதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் நம்முடைய ஆதரவினையும் கடமையையும் நிச்சயம் செய்திடல் வேண்டும். இது வெறுமனே நடக்கின்ற போராட்டமல்ல , மாறாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உண்மைப் போராட்டம். உலக வரலாற்றில் 49 நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வரலாறு உலகறிந்த உண்மை. ஆனால், இன்று ஒரு பிடி மண் கூடத் தமிழனுக்குச் சொந்தமில்லை என்று நினைக்கும் பொழுது நெஞ்சு பதைக்கிறது. உள்ளம் வெம்முகிறது.
நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்றொழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணைபோகும் இந்திய நாட்டுக்கும் உலக வல்லரசு நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்டிடல் வேண்டும். அதற்கு முகாமையாக நாம் நம்மை இந்திய மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளல் வேண்டும். ஆகவே, தமிழர்களாகிய நாம் இனியும் நம்மை மறந்தும் இந்தியன் என்று அழைத்திடல் கூடாது. அதுவே நாம் இதுவரையில் தமிழீழ விடுதலைச் சமரில் வீரச்சாவடைந்திருக்கின்ற வீர வேங்கைகளுக்குச் செய்கின்ற உண்மை வணக்கமாகும். இதுவரையில் சாதிகளாலும் மதங்களாலும் இன்னபிற தாக்குரவுகளாலும் சிக்குண்டு சின்னாப்பின்னமாகி இருக்கின்ற நாம் இனி தமிழர், தமிழினம் என்ற சிந்தனைக்குள் வருதல் வேண்டும். அதுவே நமது அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆயுதமாகத் திகழும். அடுத்தவனுக்காகச் சிந்தித்த்து போதும். இனி நம்முடைய சிந்தனையும் குறிக்கோளும் ஒன்றாக வேண்டும். தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடுதல் வேண்டும்.
எனவே, இற்றைய சூழலில் தலைவரின் மரணம் தொடர்பான செய்திகளை நம்புவதை விட்டுவிட்டு இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் சிந்திப்பதுவே நமது முதல் வேலையாக இருத்தல் வேண்டும். உலகத் தமிழர்களின் உள்ளத்திலும் உணர்வுகளிலும் உயிரிலும் கலந்திருக்கின்ற உண்மைத் தமிழ்மகன் விரைவில் வருவார் என நம்பிக்கையோடு காத்திருப்போம். விடிகின்ற நாளைய பொழுது நம்பிக்கை பொழுதாக, மலர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.




ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை
உள்ளத்தே அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை

எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

திங்கள், 11 மே, 2009

சிலம்பாட்டம்

தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும். இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் கம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப் பெற்று வந்திருக்கின்றது.

சிலம்பம் தற்காப்புக் கலையாக இருப்பினும், பெரும்பாலும் தமிழர் திருவிழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வீர விளையாட்டாக அரங்கேறுகின்றது. சிலம்பம் ஆட கட்டாயம் கம்பு வேண்டும். இதற்கு மூங்கிற் கழி பயன்படுகின்றது.

மூவேந்தர்கள் முதற்சங்க காலந்தொட்டே சிலம்பக் கலையை போற்றி பேணி வளர்த்து வந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். திருவிளையாடற் புராணத்திலும் வைத்திய நூலான “பதார்த்த குணசிந்தாமணியிலும்” சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சிலம்பப் பயிற்சி ஒருவரின் நோயைத் தீர்த்து ஒருவரின் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

சிலம்பாட்டம் என்பது வெறுமனே கம்பை மட்டும் வைத்து விளையாடும் விளையாட்டல்ல. மாறாக ஈட்டி, சுருள்வால், கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டாகும். முற்காலத்தில் போர்ச்சிலம்பம் இருந்திருக்கின்றது. அதனைப் போருக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர். திருவிழாக் காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றும் விளையாட்டு தீச்சிலம்பம் என்று சொல்லப்படுகின்றது. தமிழரின் விளையாட்டே இன்று “கராத்தே, குங்பூ, தேக்கோவா என உறுமாறி பிற நாடுகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டாளர் எதிரியின் கம்பு தன் உடலில் படாதவாறு தடுக்கவும், தன் கம்பால் எதிரியின் உடலின் பல்வேறு இலக்குகளைத் தொடவும், எதிரியின் கம்பைத் தட்டிவிட்டு வெறுங்கையராக்கவும் முற்படுவர். ஏனெனில், எதிரியின் கம்பு பறி போய்விட்டால் அது வெற்றியாகக் கொள்ளப்பட்டு ஆட்டம் நிறைவுறும்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலையை தமிழர்கள் போற்றிப் புரந்துக்கொள்ளாதக் காரணத்தினால், இக்கலை இன்று அருகி வரும் கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. உலகத்தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டும். தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும்.