புதன், 12 ஆகஸ்ட், 2009

தாய்மொழியும் தாய்க்குலமும்

தாய் பேசும் மொழியே தம் மகவுக்கு அறிமுகமாகும் முதன்மொழியாகும் . அதுவே, தாய்மொழியாகவும் அமைகின்றது. எனவே, எம்மொழி பயின்றாலும் தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டியது தாய்மார்களின் தலையாய பொறுப்பாகும். நம் தமிழ்த்தாய்மார்கள், தம் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவது போலவே தாய்மொழியையும் மறவாது ஊட்டும் மொழிப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். அமுதூட்டும் அன்னை, அமிழ்தினினும் இனிய தமிழையும் சேர்த்து ஊட்டவேண்டிய கடமை தாய்க்கு உண்டு. அஃது அவளின் பிறவிப் பெருங்கடன் என்பதை மறுக்கலாகாது.


நாடி நரம்புக்குள் நுழைந்து, குருதியில் கலந்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஆற்றல் தமிழுக்கு உண்டு! அந்த ஆற்றலைப் பிள்ளைகளின் மனதில் ஆழப்பதியச் செய்யவல்லது இசைத்தமிழாகும். இசைத்தமிழ் நமக்குக் கிடைத்தற்கரிய; அருஞ்சாதனைக்குரிய கலையாகும். இசைக்கு மயங்காத சிசு ஏது? “தமிழே! தேனே! கண்ணே தாலேலோ” என்ற ஆராரோ பாடல் கேட்டு, குழந்தை அயர்ந்து உறங்காதோ? இன்றைய தாய்மார்கள் பலருக்குத் தாலாட்டுப் பாடவே தெரியாது என்கின்றனர். ஏழாவது வயதில் கல்வி கற்க பள்ளி செல்லுமுன் ஏழ்ப்பிறவிக்கும் தொடரக்கூடிய சொந்தமாகத் தாய்மொழியின் அவசியத்தை உணரும் வகை செய்தல் ஈன்றவளின் எண்ணருங்கடமையாகும்.! செம்பவள வாய் திறந்து “அம்மா” என்று மழலை பேசத் தொடங்கும்போதே “மம்மி” என மொழிமாற்றம் செய்வதை ஈனச்செயலெனக் கருத வேண்டும் ஈன்றவள்! பள்ளிச் செல்லத் துவங்கியதும் வேற்று மொழிகள் பேசத் தொடங்கும் பாலகனுக்குத் தாய்மொழியறிவின் அவசியத்தையும் தகைவுடன் உணர்த்த வேண்டும் தாய்குலம்.

தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே ஒளவையை, பாரதியை, வள்ளுவரை, கம்பரை, இளங்கோவை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். கூடவே, பாரதிதாசனையும் திரு.வி.க வையும் நினைவுபடுத்தி வைக்க வேண்டும். அவர்தம் தேனூறும் தமிழைச் சுவைக்கச் செய்ய வேண்டும். “தமிழ் எங்கள் தாய்மொழி” என்று பெருமை கொள்ளும் நாம், நமது பிள்ளைச் செல்வங்களும் அத்தகைய பெருமையும் பூரிப்பும் அடையும் வண்ணம் தாய்மொழியின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

சிலர் தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். தமிழ் எங்கள் தாய்மொழி என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. படிப்பறியாப் பாமர மக்கள், ஏழை எளியவர்கள் போன்றவர்கள் மட்டுமே பேசும் மொழியென தமிழைப் புறக்கணிக்கும் பேதையர்கள் அவர்கள்! இத்தகையொர் நம் மத்தியில் உலாவரக் காரணமாக அமைந்தவை பெற்றோரின் அறியாமையும் வேற்று மொழிமீது கொண்ட மோகமும்தாமே? நஞ்சுக்கும் ஈடான இந்த எண்ண விதைகளைப் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் தீவிவிட பெற்றோர்களே- அதுவும் தாயே- காரணமாக இருந்துவிடுவது கொடுமையல்லவா? தாயானவள் எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றுப் பார்புகழ பெரும் பதவியில் வீற்றிருந்தாலும் தன் சேயோடு தமிழ்மொழியில் பேசுவதைப் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டால்தான் இந்நிலையை மாற்றியமைக்க இயலும்.

கள்ளங்கபடமற்ற பால்போலத் தெளிந்த நெஞ்சுடன் தாயையே தமது உலகமும் வாழ்வுமாக்க் கருதி தாயிடமே அடைக்கலம் புகுபவர்கள் பிள்ளைகள். அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்குவது மட்டுமல்லாது தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் வளர்த்து ஆளாக்க வேண்டுவது அன்னையர்தம் அரும்பெரும் பணியல்லவா?

நன்றி:-
ந.மகேஸ்வரி
ஆறாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

3 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

நல்லதொரு பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் நண்பரே.

தமிழ் ஆசிரியம் மடற்குழுவுக்கு இணைப்பு ஏற்படுத்தியிருக்கும் தமிழ் ஆலயத்திற்கு நன்றி மொழிகிறேன்.

தமிழ் ஆசிரியம் மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்கான நல்லதொரு ஊடகமாக வளர உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல பதிவு........ தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பேசமறுக்கும் இக்காலத்தாருக்குப் பொருந்த கூடிய செய்தி.......இது அனைவரையும் சென்றடைய வேண்டும்.

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்