புதன், 21 ஜனவரி, 2009

மாமூலர் என்பதன் பொருள் என்ன ?

அழகன்

ஐயம் :

மாமூலர் என்றால் என்ன பொருள் ஐயா? திருமூலருக்கும்
மேன்மையாக காட்டவேண்டி அப்படி ஒரு அடைமொழியா?

தெளிவு :

மாமூலர் என்பதற்கு பெரிய ஆற்றலாளர் என்பது பொருளாகும். சங்க காலத்தில் மாமுலனார் என்ற புலவர் வாழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அவரைப் போன்று மலேசியாவில் மெய்யறிவை உணர்த்திய மிகப்பெரிய ஆற்றலாளர் தான் ஐயா அவர்கள். மலேசியத்தில் ஒப்பற்ற மீமிசைச் சான்றோராக விளங்கியவர் செந்தமிழ்க்குறிஞ்சியார். அவரே பாவலருக்கு இச்சிறப்புப் பெயரை வழங்கியிருப்பது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும். ஆனால், திருமூலருக்கும் மேன்மையாக நாம் யாரையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடுவதும் சரியாகாது.

5 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்.
மெய்யறிவு, மீமிசை மற்றும் மெய்ப்பொருளறிஞர் என்று மிகப்பெரிய, மிக உயர்வான, மேன்மையான அடைமொழிகளை ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதால் மட்டும் அவர் அந்த நிலையை எட்டிவிட்டார் எனக் கூற முடியாது. எங்குமே தம் பெயரைக்கூட எழுதாத வள்ளுவர்கூட தம்மை மெய்ப்பொருளறிஞர் என்றோ மெய்ப்பொருள் உணர்ந்தவர் என்றோ பறைசாற்றிக்கொள்ளவில்லை.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 857

மெய்ப்பொருள் கண்ட அறிவு என்பது முற்றும் பெற்ற அறிவு ஆகும். அவர் மொழி, இனம், சமயம் எனும் கூட்டுக்குள் மட்டுமே சாராமல் எதையும் கடந்தவர் ஆவார். மனம் இயங்கும்வரை மொழி, இனம், சமயமும் இருக்கும். மனத்தைக் கடக்காமல் மெய்ப்பொருள் உணர்ந்தது எப்படி? - அழகன்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

//மெய்ப்பொருள் கண்ட அறிவு என்பது முற்றும் பெற்ற அறிவு ஆகும். அவர் மொழி, இனம், சமயம் எனும் கூட்டுக்குள் மட்டுமே சாராமல் எதையும் கடந்தவர் ஆவார். மனம் இயங்கும்வரை மொழி, இனம், சமயமும் இருக்கும். மனத்தைக் கடக்காமல் மெய்ப்பொருள் உணர்ந்தது எப்படி?//

திருமூலர், சைவ சமயக் குரவர் நால்வர், வள்ளற்பெருமான் முதலான அருளாளர்கள் மெய்ப்பொருள் கண்டவர்கள் தானே..!

இவர்கள் தமிழை ஏற்றியும் போற்றியும் பாடியிருப்பதை வைத்து திரு.அழகன் குறிப்பிடுவது போல ஐயப்பாடு கொள்ளலாகாது.

மெய்யறிவையும் தமிழையும் ஒன்றாகவே பார்க்கின்ற மரபு தமிழர் மரபு. தமிழர் மரபை அறிந்தோர்க்கு இதில் சிறிதும் ஐயம் எழ வாய்ப்பே இல்லை.

என்னை நன்றாக இறைவன் பழைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்ய்மாறே!
-திருமூலர்

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்
-திருநாவுக்கரசர்

நாளும் தமிழ்வளர்க்கும் திருஞான சம்பந்தன்
-திருஞானசம்பந்தர்

பெயரில்லா சொன்னது…

'மெய்ப்பொருள்' என்ற இறைமை அறிவு, மனம் போன்ற எல்லைகட்கு அப்பாற்பட்டது. அறிவு உடையவரைக் காட்டிலும் அன்புடையவராலேயே உலகம் வாழ்ந்து வருகிறது.
இந்த உணர்வு வாழ்க்கையில் ஐயத்தின் நீங்கி தெளிந்தவர்க்கே இயலும். வாழ்க்கை தெளிவைப்பற்றி பிறர் எழுதியதை படித்துவிட்டு, கேட்டுவிட்டு கூறுவதாலோ அல்லது எழுதுவதாலோ மெய்ப்பொருள் மிக்கார் ஆகிவிடமுடியாது.
மெய்யுணர்வாளர்கள் தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளும்போதே மெய்யுணர்வை அறிந்துகொள்ள வேண்டி இதனை அமைத்து வைத்திருக்கின்றனர். இவர்கள் கூற்றுப்படி தமிழைப்படி என்பது இறைமையை உணர்ந்துகொள் என்பதுதான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தோரையும், இல்லறத்துறவு பூண்டோரையும் மெய்ப்பொருள் உணர்வாளர் என அறியக்கூடும்.
இறைவுணர்வுக்கு எந்த புற அடையாளங்களும் தேவையில்லை.
நன்றியுணர்வைக் காட்ட முற்பட்டால், அது இன்னொரு சடங்காக மாறிவிடும். பிறகு அவருக்கும் கோயில் கட்ட வேண்டிவரும்.
தமிழுக்கு தொண்டு செய்தோரை போற்றுங்கள். அதற்காக முற்றும் பெற்றவரைப் போல காட்டத் தேவையில்லை என கருதுகிறேன்.
திருமூலர், வள்ளர்பெருமான் வரிசையில் இவரையும் வைக்கத்தான் வேண்டுமா?
தன்னையறிந்தவருக்கு தனியொரு கூட்டம் தேவையில்லை. - அழகன்

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி. யாரையும் முற்றும் பெற்றவரைப் போன்று மிகைப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. மாறாக மொழி, இனம், சமயம் என்ற அடிப்படையில் இந்நாட்டில் தமிழுக்காக பாடாற்றி உழைத்த தமிழ்ச்சான்றோரைத் தான் நாம் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.மாறாக வள்ளர்பெருமானுக்கும் திருமூலருக்கும் நிகராக நாம் யாரையும் ஒப்பிடுவது சரியாகாது என்பது நாம் அறிந்ததே.