புதன், 19 நவம்பர், 2008

கோலக்கலை

பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.






புள்ளிகளையும்,கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின் அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம், புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில் அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில் மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப் பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே, அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும் மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம் இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.




இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!


நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்