திங்கள், 22 செப்டம்பர், 2008

கடவுள் மறுப்புக்கு தமிழ் விருப்புக்கும் என்ன தொடர்பு ?

ஐயம் : இளமாரன்,பினாங்கு
ஐயா, கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் என்ன
தொடர்பு? உங்கள் கருத்து..?




தெளிவு :

கடவுள் மறுப்புக்கும் தமிழ் விருப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.ஆனால்,இற்றைய நிலையில் தமிழ் மீது பற்றுள்ளவர்களும் தமிழ் உணர்வு கொண்டவர்களும் கடவுள் மறுப்பாளர்களாகச் சித்தரிக்கப்டுகின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையாகும்.வரலாற்றில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட தவறான கோட்பாடாகும்.

தமிழ் விருப்பு என்பது இறை விருப்புக்கு இட்டுச்செல்லுமே தவிர ஒருபோதும் இறை மறுப்புக்கு வித்திடாது. அதனால் தான் நமது தமிழின அருளாளர்கள் திருமூலர் “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யுமாறே என்றும்;திருநாவுக்கரசர் “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றும்; திருஞானசம்பந்தர் “நாளும் தமிழ்வளர்க்கும் திருஞானசம்பந்தன்” என்றும் பாடியுள்ளனர். சிவபெருமானே சொற்றமிழால் எமைப் பாடுக என்று கேட்ட வரலாறும் உண்டு.

ஆக, தமிழ் இறைமைக்கு எதிரானது அல்ல மாறாக இறைமையை ஏற்றிப் போற்றுவதற்கு ஏற்றதொரு மொழி. சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாம்,கிருத்துவம் என பல சமயத்தவரும் போற்றி வளர்த்த ஒரே மொழியாக தமிழ் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் இயற்கையோடு இயைந்த இறைமொழியாகும். தமிழ் விருப்பு பெருகினால் கடவுள் மறுப்பைவிட கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மறுக்கும் பகுத்தறிவு தான் வளரும். பகுத்தறிவு ஒருபோதும் கடவுள் மறுப்பு ஆகா. தமிழ் அறிவு மொழி என்பதால் தமிழ்ப்படித்தால் பகுத்தறிவு பெருகும், உண்மையைப் பகுத்தறிந்து உயர்ந்த கடவுள்நெறியை உணர்ந்து கொள்ள உதவும்.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தாங்கள் கூறும் உயர்ந்த கடவுள் நெறியைப்பற்றி சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். எதையும் வேண்டும் என்று ஏற்காமல் வேண்டாம் என்று மறுக்காமல் நடுநிலையில் செயல்களைப் புரிய வேண்டும்.
'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல - குறள். -அழகன்